தரமிக்கச் சீடத்துவமே தரணிக்குத் தேவை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

கிறிஸ்மஸ் காலம் – சனி
1 1யோவான் 3: 7-10
யோவான்   1: 35-42

 தரமிக்கச் சீடத்துவமே தரணிக்குத் தேவை!

முதல் வாசகம்


இன்றைய முதல் வாசகத்தில், புனித யோவான்,  இயேசு பாவத்தையும் அலகையின் செயல்பாடுகளையும்   அழிக்க வந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.  மனிதரில் இரு பிரிவினர் உண்டு. ஒரு பிரிவினர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் புனித வாழ்வு வாழ்பவர்கள். இவர்கள் நேர்மையாகவும், அன்பு செய்பவர்களாகவும்   இருப்பர். 

மற்றொரு பிரிவினர், அலகைக்குக் கீழ்ப்படிந்து பாவ வாழ்வு வாழ்பவர்கள்.   தொடக்கத்திலிருந்தே   அலகை இத்தகையோரை கவர்ந்திழுத்து பாவத்தில் நாட்டம் கொள்ள செய்கிறது. எனவே. அலகையின் ஆசை வார்த்தைகள் மட்டில் கவனமாக  இருக்க புனித யோவான் எச்சரிக்கிறார்.  

மற்றொரு செய்தியையும் யோவான் முக்கிய அறிவுரையாகத் தருகிறார். பாவம் செய்து வாழ்பவர்கள் அலகையைச் சார்ந்தவர் என்கிறார். நாம் கடவுளிடமிருந்து வந்தவர்களாயின் கடவுளின் திருவுளத்திற்கு எற்ப வாழ வேண்டும் என்பதை யோவான் வலியுறுத்துகிறார். எனவேதான், கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது.

 
  
நற்செய்தி

இன்றைய நற்செய்தியில் இயேசு தனியாக இருப்பதையும், அவருக்கு முதல் சீடர்களாக திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அறிமுகமாவதையும் பார்க்கிறோம். “இதோ! கடவுளின் செம்மறி!” என்று திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்ட,  அவரது சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். யோவான் நற்செய்தியைப் பொறுத்தமட்டில் இதுவே, இயேசு பேசிய முதல் வாரத்தைகளாக உள்ளன.
இவ்வாறாக இயேசுவுக்கும் இரு சீடருக்குமிடையே உரையாடல் நடைபெற்றதை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
இந்நிகழ்வு கலிலேயாக கடலோரம் நடைபெறுகிறது. இயேசு அவர்களிடம் “வந்து பாருங்கள்” என்கிறார்.  இயேசுவால் கவரப்பட்ட இருவரில் ஒருவரான அந்திரேயா அவருடைய சகோதரர் சீமோனிடம் போய், ‘நாங்கள் மெசியாவைக் கண்டோம்!’ எனச் சான்று பகர்ந்து  அவரையும்  இயேசுவிடம் அழைத்துவருகிறார். இயேசுவைச் சந்தித்தவுடன் சீமோனுடைய வாழ்க்கை மாற்றம் பெறுகிறது. இயேசு  அந்திரேயா  மற்றும் சீமோன் இருவரில் சீமோனின் பெயரை மட்டும்   ‘கேபா’ (பாறை) என்னும் புதிய பெயருக்கு  மாற்றுகிறார். 


சிந்தனைக்கு.


இயேசுவின் சீடர்கள் அழைக்கப்படுவதை இன்று யோவான் விவரித்தார். இயேசு தனிமையில் தந்தை தனக்களித்தப் பணியை அவர் நிறைவேற்ற விருப்பவில்லை. தனக்குப் பின் தம் இறையரசுப் பணி இப்புவியில் தொடர வேண்டும் என்பதற்காக சீடர்களைத் தேர்வுச் செய்கிறார். அவர்கள் மறு பேச்சின்றி அனைத்தையும் துறந்து அவரைப் பின் சென்றனர். ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்றது போல அவர்களும் ஏன்றனர். 

முதல் சீடர்களின் அழைப்பை நன்கு கவனித்தால், அது,  திருமுழுக்கு யோவானிடமிருந்து அந்திரேயா, அந்திரேயாவிடமிருந்து பேதுரு என சீடத்துவ விரிவாக்கம்  கண்டது. அதன் பின்னரே மற்றசீடர்கள்  படிப்படியாக திருத்தூதர்களாக  அழைப்பட்டார்கள்.


சீடத்துவமின்றி  திருஅவை என்பது ஒரு சாதாரண பொது இயக்கமாகவே செயல்படும்.   எனவே, திருஅவையின் உயிர்நாடி அதன் உறுப்பினர்களின் சீடத்துவ வாழ்க்கை எனலாம். இயேசு அவரது சீடர்களை மூன்றாண்டும் ஒரே இடத்தில் வைத்து கற்பிக்கவில்லை. நாடோடியாக அவர்களைத் தன்னுடன் கொண்டிருந்தார். ஊர்விட்டு ஊர் சென்றார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் சீடர்கள் அவரோடு தங்கினர், உண்டனர் மற்றும்  உறங்கினர். 

அடுத்து இயேசுவின் ‘வந்து பாருங்கள்’ எனும் அழைப்பில் சுதந்திரம் இருப்பதை அறிய முடிகிறது. அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. உண்மையில் வந்து பார்க்கின்ற போது முதல் சீடர்கள்  வியந்து போகின்றார்கள். இயேசுவுக்கென்று ஒரு வீடோ வாசலோ கிடையாது. ஒரு செல்வந்தரைப்  பின்பற்றி செல்வது வேறு, ஓர் ஆண்டியைப் பின்பற்றி செல்வது வேறு. இங்கே, ஓர்  ஆண்டியைப் பின்பற்ற முடிவெடுத்தார்கள். 


இயேசுவின் சீடர்கள் அவரது சாட்சிகளாக விளங்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. சாட்சியமற்ற சீடத்துவம் போலி சீடத்துவம். இன்றைய நாள்களில் பிரிவினை சபைகள் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களாக பெருகுவதற்கு முதல் காரணம் நம்மில் உள்ள சீடத்துதவத்தின்  ‘தரக்குறைவு’ என்றால் மிகையாகாது. இயேசு அன்றே, போலி இறைவாக்கினர் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார் (மத் 7:15).  ஆம், ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற பழமொழிக்கொப்ப, ஆளுக்கு ஆள் ‘பாஸ்டர்' ஆகும் இக்காலத்தில் நமது சீடத்துவம் சிறந்திராவிடில், திருஅவை பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். எனவேதான், முதல் வாசகத்தில்  ‘எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள்’ என்று எச்சரிக்கிறார் யோவான்.   

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது, தனது சீடர்கள் எப்படி வாழவேண்டும் என்று மத்தேயு 16:24-ல்   “என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்” என்று தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், சீடத்துவத்திற்கு, மற்றொரு விளக்கத்தையும் தருகிறார் ஆண்டவர். ஆம்,   “தம் உயிரை காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டு தம்மையே அழித்துக்கொள்பவர் வாழ்வு அடைவர்” என்று தெளிவுப்படுத்துகிறார். இந்த நிபந்தனைகளை நன்கு  அறிந்துணர்ந்தவர்கள் தான் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.

இன்று நாம் கொண்டிருக்கும் சீடத்துவத்தினையொட்டி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். நாம் நம் வாழ்வைக் காத்தக்கொள்ள இயேசுவைப் புறக்கணிக்கிறோமா? அவருக்காக உயிரை விடவும் துணிவு கொண்டு வாழ்கிறோமா’? நாங்களெல்லாம் இயேசுவின் அன்புச் சீடர்கள் என்று வாயார சென்னாலும் உண்மையிலே ஆண்டவர் இயேசுவுக்கு சீடர்களாக விளங்க தகுதியானவர்களா? உலக மதிப்புக்கும்  செல்வாக்குக்கும் அடிபணியும் நாம்,  இயேசுவின் சிலுவையே அனைத்திலும் மேலானது என்று  எப்போது நாம் உணர்கிறோமோ அப்போது தான் இயேசுவின் சீடர்களாக முடியும்.

 

இறைவேண்டல்


‘வந்து பாருங்கள்' என்றழைத்த ஆண்டவரே, உலக இன்பங்களைவிட உம்மைத் தேடவும், உம்மோடு தங்கியிருந்து நேரம் செலவழிக்கவும் எனக்கு அருள்தாரும். ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452