என்றும் இயேசுவின் திருப்பெயரில் கூடும் மக்களாவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
கிறிஸ்மஸ் காலம் – வெள்ளி
இயேசுவின் திருப்பெயர்
1 யோவான் 2: 29- 3: 6
யோவான் 1: 29-34
என்றும் இயேசுவின் திருப்பெயரில் கூடும் மக்களாவோம்!
முதல் வாசகம்.
நாம் இன்னும் கிறிஸ்துமஸ் காலத்தில் பயணிக்கிறோம். இன்று இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரை நினைவுகூர்ந்து கொண்டாட அழைக்கப்படுகிறோம். இறைமகனான இயேசு கிறிஸ்து மனுவுருவானதன் விளைவாக கடவுளுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் நம்மில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமானது. இயேசு நம் மனித நேயத்தில் பங்குகொண்டதால், அவருடைய பிறப்பால் தெய்வீக வாழ்வில் பங்குகொள்ள அவர் நம்மை அழைக்கிறார்: நாம் உண்மையிலேயே கடவுளின் பிள்ளைகளாக உள்ளோம். இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்தும் வகையில் யோவானின் முதல் எழுதப்பட்டிருக்கிறது.
நாம் கடவுளின் குடும்பத்தில் உறுப்பியம் பெற்றுள்ளோம் என்பதை நம்மால் ஒருபோதும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று யோவான் மேலும் எச்சரிக்கிறார்.
நற்செய்தி
நற்செய்தயில் “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர் என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்கிறார். மேலும், இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன் என்று தன்னிலையைத் தாழ்த்திக்கொள்கிறார்.
லூக்காவின் கூற்றுப்படி, இயேசுவும் யோவானும் உறவினர்கள் (1:36) என்றாலும், இயேசுவைப் பற்றி முழுமையாக அறியாதிருந்தார் யோவான். இயேசுவின் திருமுழுக்கின் போது, புறா வடிவில் தூய ஆவியார் இயேசுவின் மீது அமர்ந்த வேளையில்தான், இதுவரை யாருடைய வருகைக்காக மக்களைத் தயார்படுத்தி வந்தாரோ, அவரே இயேசு என்பதை உணரத் தொடங்கினார். எனவேதான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர் என்று மெசியாவை அடையாளம் காட்ட முடிந்தது.
சிந்தனைக்கு.
இன்று நாம் இயேசுவின் திருப்பெயர் விழாவைக் கொண்டாடுகிறோம். தூய ஆவியாரால் வெளிப்படுத்தப்படும் வரை நமது பாவத்தைப் போக்குபவர் யார் என்பதை நம்மால் முழுமையாக அறிந்திருக்க முடியாது. இயேசுவே மீட்பர் என்பது நமக்கான தூய ஆவியாரின் வெளிப்பாடு. ஆயினும்கூட, நம்முடைய சொல், செயல்களில் இயேசுவை பிரதிபலிக்க நாம் தவறுகிறோம். இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டுமாயின், அவரது நற்செய்திக்கு வாழ்வால் சாட்சியம் பகர்வதைவிட மேலான வழிமுறை ஒன்று கிடையாது. இதைதான் திருமுழுக்கு யோவான், ‘மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்’ (லூக்கா 2:8) என்று அறிவுறுத்தினார்.
அடுத்து, திருமுழுக்கு யோவான் போலவே, தூய ஆவியாரின் அறிவொளியைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இயேசுவை நம் தொலைதூர உறவினராக மட்டுமல்ல, நம்முடைய சகோதரனாகவும் சுட்டிக்காட்ட வேண்டும். அவர் நமக்குச் சகோதரர், ஆண்டவர், மீட்பர் மற்றும் நண்பரும் ஆவார்.
திருமுழுக்கு யோவான் இயேசுவை “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக் குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்கின்றார். அக்காலத்தில் ‘கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் செம்மறியாகும். இயேசு நமக்காகப் பலியாகப்போகும் செம்மறி என்பதை திருமுழுக்கு யோவான் முன்னுரைத்தார். இதன்வழியாக, இயேசு மனுக்குலத்தின் மீட்புக்காக ஆற்றவுள்ள தியாகப் பலியை துணிவாக எடுத்துரைக்கிறார்.
மேலும், ‘உலகின் பாவத்தைப் போக்குகின்றவர்” என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை விவரிக்கிறார். உண்மையில் இந்த உலகத்தில் பிறந்த யாரால் மனிதருடைய பாவத்தைப் போக்கமுடியும்? அது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும். இந்த உண்மையை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார்.
நிறைவாக, இயேசுவின் திருப்பெயர் குறித்து சிந்திக்கையில், நாம் இயேசுவின் திருப்பெயால் திருமுழுக்குப் பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. (திப 22:16) அவரது திருப்பெயர் அன்றி வேறு பெயரால் நமக்கு மீட்பு என்பதில்லை. எனவேதான் பவுல் அடிகள்
‘ இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) என்று அறிவுறுத்தினார்.
ஆகவே, நாம் இனியும் சுணங்காமல், இயேசுவின் திருப்பெயரால் மட்டுமே மீட்பு உண்டு என்பதை திருமுழுக்கு யோவான் போல் இவ்வுலகிற்குச் எடுத்துரைக்க வேண்டும். மேலும், ஆண்டவர் நமக்கு வழங்கும் தூய்மையை ஏற்று, நம் குடும்ப ஊறவில் தூய வாழ்வுக்கு வழிதேட வேண்டும். நம்மால் அதை முழுமையாக அடைய முடியாவிட்டாலும், முடிந்தவரை தூயுமை உள்ளம் கொண்டோராகவும் உண்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்து, இயேசுவின் திருப்பெயரை மாட்சிபடுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, திருமுழுக்கு யோவானைப் போல், பிறரை என்னைவிட மதிப்புக்குரியவர் என எண்ணும் நல்ல, நேர்மையான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வீராக ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452