2025-ல் துணிவும் ஆற்றலும் நமதாகட்டும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

 கிறிஸ்மஸ் காலம் - வியாழன்                                     

 1யோவான் 2: 22-28                                                                                      

யோவான்   1: 19-28

2025-ல் துணிவும் ஆற்றலும் நமதாகட்டும்!

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகம் மற்றும் நற்செய்தி இரண்டிற்கும் பொதுவான சொல் "கிறிஸ்து".  முதல் வாசகத்தில், யோவான் நாம் எதை நம்ப வேண்டும் என்பது குறித்து வலியுறுத்துக்கிறார்.   இயேசுவே ‘கிறிஸ்து’, அதாவது அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பது வாசகங்களில் தெளிவுப்படுத்தப்படுகிறது. ‘கிறிஸ்து' என்பது கிரேக்கத்தில் ‘Christos’ என்றும் எபிரேயத்தில்   Messiah என்றும்  ஆங்கிலத்தில்  Anointed One என்றும் பொருள்படுகிறது . தமிழில் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பதாகிறது.   

இயேசு, ‘கிறிஸ்து’ என்பதை ஏற்க மறுப்பவர்  என்றும் கிறிஸ்துவுக்கு எதிரானவர் ஆவார்.   இயேசுவே கிறிஸ்து என்று பறைசாற்றுபவர்கள் இயேசுவுக்கும் தந்தைக்கும் உரியவர்கள்.  ஆம்,  கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும்  அருள்பொழிவு பெற்றவர்கள் என்றும் தந்தைக்கு உரியவர் என்றும் யோவான் நினைவூட்டுகிறார்.  நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு நம்மில்  நிலைத்திருக்கிறது என்றும், நாம்  கற்றுக்கொண்டதற்கேற்ப கிறிஸ்துவோடு எல்லாச் சூழலிலும்  இணைந்து வாழ வேண்டும் என்றும் யோவான் அறிவுறுத்துகிறார். 


நற்செய்தி


இன்றைய  நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் மீது மீண்டும் கவனம் பதிவுச் செய்யப்படுகிறது.   யூத தலைமையிலிருந்து வந்தவர்களிடம்  திருமுழுக்கு யோவான், அவர் மெசியா அல்ல, எலியாவும் அல்ல, இறைவாக்கினரும் அல்ல என்று உறுதியாகக் கூறுகிறார். 

அடுத்து வரவிருக்கும் மெசியாவின்   வழியை ஆயத்தம் செய்வது மட்டுமே அவரது பணி என்றும், அவரைவிட வலிமையான ஒருவர் (மெசியா) வருவார் என்று அவர் சான்று பகர்கிறார்.  அப்போது,  அவர்கள் நடுவில் இருப்பவர் அருள்பொழிவு பெற்ற மெசியாவே  என்பதையும் அவர் மக்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார்.  


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரு பிரிவினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். அவர்கள் எருசலேம் ஆலய குருக்கள் மற்றும் வேவியர்கள்.  

அவர்கள் “நீர் யார்?” என்று கேட்டபோது,   திருமுழுக்கு யோவான் ‘அவர்  யார் அல்ல?‘ என்பதை மக்கள் மத்தியில் நேர்மையாக எடுத்துரைக்கிறார். ஆம்,  பேருக்கும், புகழுக்கும், பதவிக்கும் போட்டிப்போட்டுக்கொண்டு முன் வரிசையில் இடம் தேடும் மக்கள் மத்தியில்,  தான் மெசியா அல்ல, எலியா அல்ல, இறைவாக்கினர் அல்ல என வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். அவரது நேர்மையும், பெருந்தன்மையும், தாழ்ச்சியும்   இங்கே வெளிப்படுகிறது. 


அவர்தான் யூதர்கள் எதிர்பார்த்த மெசியா என்று முழங்கியிருந்தால் அவரை அந்த யூதச் சமூகம் வணங்கி, போற்றிப் புகழ்ந்திருப்பவர். அவரும் யூதர்களுக்கு ஒரு சிறந்த தலைவராக வாழ்ந்திருக்கலாம். பின்னர், தலை வெட்டுண்டு இறக்க நேரிட்டிருக்காது. மாறாக, ‘பாலைநிலத்தில் ஒலிக்கும் குரல்’ என்றே தன்னை வெளிப்படுத்தினார்.  அதாவது ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதுபோல் மெசியாவின்  வருகைக்கு முன்னோடியாக வந்தவர் என்றே  தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார்.
 
மேலும், திருமுழுக்கு யோவான் இவர்களுக்கு அஞ்சி பொய்யுரைக்கவில்லை. உண்மையை எடுத்துரைத்தார். ‘நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்’ என்று இயேசுவைச் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு, மக்கள் கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்புகிறார்.
நாம் பிறரின் பாராட்டும் அங்கீகாரமும் தேடிக்கொள்வதற்காக பொய்யான பணி  வாழ்வில் ஈடுபடுவதுண்டு.  இத்தகையோரைப் பற்றி  இயேசு கருத்துரைக்கையில், ‘மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ (யோவான் 5: 41-42) என்று கடிந்துகொண்டார்.
உண்மையில், ‘உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு’ (யோவான் 17:3) என்று இயேசு தமது இறைவேண்டலில் வெளிப்படுத்தியதை இன்று நாம் நினைவுகூர வேண்டும். இயேசு கிறிஸ்துவை  ‘கிறிஸ்து’வாக ஏற்று வாழ்வதில்தான் நமக்கான நிலைவாழ்வு உறுதிபெறுகிறது. 
எனவே, திருமுழுக்கு யோவான் அன்று இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக இருந்ததைப்போல், இக்காலத்தில் அதே இயேசு கிறிஸ்து பலரின் உள்ளங்களிலும் வாழ்விலும்  பிறக்க நாம்தான் முன்னோடிகள், நாமதான் விண்மீன்கள். தாழ்ச்சியையும் முன்மாதிரியையும் மனதில் கொண்டு  நமது பணியை இப்புத்தாண்டில் இனிதே தொடங்குவோம். ‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13) என பவுல் அடிகள் கூறுவதைப்போல் நாமும் இப்புத்தாண்டில், அதிலும் இந்த யூபிலி ஆண்டில் துணிவோடு பணிவாழ்வைத் தொடங்குவோம். மெசியாவாகிய ஆண்டவர் இன்றும் நமக்கு மெசியாவாக அவர் பணியைத் தொடர்கிறார்.

இறைவேண்டல்.

மீட்பராகிய ஆண்டவரே, இறைவாக்கினர் திருமுழுக்கு யோவானைப் பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக நீர் அழைத்ததுபோல, மறைப்பரப்புப் பணியில் நானும் ஆற்றலும், துணிவும் கொண்டு செயல்பட அருள்புரிய வேண்டுகிறேன். ஆமென்


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452