பிறர் அன்பு பணியே சீடத்துதவத்தின் செழிப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

புனித வாரம் - திங்கள்
எசாயா 42: 1-7
யோவான் 12: 1-11
பிறர் அன்பு பணியே சீடத்துதவத்தின் செழிப்பு!
முதல் வாசகம்.
இன்று திருஅவை நமக்கு அளித்துள்ள முதல் வாசகம், இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் துன்புறும் ஊழியனைப் பற்றி எசாயா குறிப்பிட்ட நான்கு பாடல்களில் முதலாவது பாடலாக வருகிறது. இப்பாடலில், “நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்” என்ற வாக்கியம் நமது கவனத்தை ஈர்க்கிறது.
மேலும், இவ்வாசகப் பகுதியில் அவர் நெரிந்த நாணலைப் போன்று, மங்கி எரியும் தீயைப் போன்று இருக்கும் ஏழை எளியவர் மட்டில் இரக்கமும் அன்புகொண்டு நீதி வழங்குவார். அதிகாரமும் உயர் பதவிகளும் கொண்டிருக்கின்ற பணக்காரருக்கோ அறத்தின் வழிநின்று நீதி வழங்குவார் என்று எசாயா முன்னறிவிக்கிறார். இந்த இறைஊழியரைப் பற்றிய மற்றொர் வெளிப்பாடு யாதெனில், அவர் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவராகவும் தூய ஆவியார் தங்கி இருப்பவராகவும் இருப்பார் என்று குறிப்பிடுகிறார் எசாயா.
நற்செய்தி.
நமது நற்செய்தி பஸ்கா பெருவிழாவுக்குச் சில நாள்களுக்கு முன்பு நடைபெறுகிறது இயேசு இலாசர், மார்த்தா மற்றும் மரியாவின் ஆகியோரின் இல்லம் இருந்த பெத்தானியாவுக்குத் திரும்புகிறார். மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் நடமாட்டம் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
இலாசரின் வீட்டிற்குச் சென்றபொழுது, மரியா, இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலத்தைப் பூசி, கூந்தலால் துடைக்கின்றார். மரியா, இயேசுவின் காலடிகளில் பூசிய நறுமணத்தைலத்தின் மதிப்பு ஒருவரின் ஓராண்டு ஊதியத்திற்குச் சமம் (2சாமு 24:24). இதைப் பார்த்துவிட்டு பணத்தாசை பிடித்த யூதாஸ், மிகவும் தந்திரமாக, “இத்தைலத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே” என்கின்றான்
சிந்தனைக்கு.
துன்புறும் இறை ஊழியனைப் பற்றி எசாயா முன்னறிவித்தவற்றை நிறைவேற்றுபவராக இயேசு வருகிறார். மரியாவும் மார்த்தாவும் அவரவர் வழியில் ஆண்டவருக்கான பணிவிடையை வெளிப்படுத்துகிறார்கள். இதற்கு நேர்மாறாக, யூதாஸ் தன்னைப் பற்றியும் தனக்கு என்ன "இலாபம்” கிடைக்கும் என்பதையொட்டி கணக்குப்போடுகிறான், ஆம், எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்பதுபோல உள்ளது அவரது சிந்தனை.
முதல் வாசகத்தில் எசாயா கூறும் நெரிந்த நாணல், மங்கி எரியும் திரி ஆகிய இரு சொற்றொடர்களும் அக்காலத்தில் யூதேயாவில் நிலவிய வறிய மக்களையும் ஒடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட மக்களையும் குறிப்பதாக நாம் பொருள் கொள்ள்லாம். இவர்களின் ஆதரவாக துன்புறும் ஊழியர் தன்னை ஒன்றிக்கிறார். அவர், சமூகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய, வறிய மக்கள்மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்களை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் விடுவிப்பவராகவும், இவ்வாறு எசாயாவின் முன்னறிவிப்பை நிறேவற்றுபவராகவும் இருக்கிறார்.
நற்செயய்தியில், ‘ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை’ என்கிறர் ஆண்டவராகிய இயேசு. இதன் பொருள் அறிதல் வேண்டும். ஆம், நம்மைச் சுற்றி எப்போதும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இயேசு சீடர்களை விட்டுப் பிரியும் நேரம் தொலைவில் இல்லை என்பதையும் அவர் சீடர்களைவிட்டுப் பிரிந்துபோவார் என்பதையும் இயேசு சுட்டிக்காட்டுகறார்.
தொடர்ந்து, மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் பூசி, அவளது கூந்தலால் துடைத்தார். இயேசுவின் பாதங்களை ஒரு சாதாரண பெண் தொடுவதைக் கண்டு, யூதாசு தடுக்க முயன்றபோது, இயேசுவோ, மரியாவின் சார்பாகப் பரிந்து பேசுகிறார். இங்கே இயேசு யூதாஸ் ஏழைகள் மீது அக்கறை காட்டியதைப்போல் இயேசு அக்கறை காட்டவில்லை என்று பொருள் கொள்ள இயலாது. மாறாக, அவர் தன்னுடைய நல்லடக்க சடங்கின்போது அவரது உடலுக்குப் பயன்படும் நறுமணத் தைலத்தை நினைவில் கொண்டு, மரியாவின் செயலை ஆதரிக்கிறார் என்று கூறலாம்.
உணமையில், கிறிஸ்துவத்தில், பிறருக்கு அன்பு பணி என்பது நமது மனப்பான்மையாக இருக்க வேண்டும் - நம்மைப் பற்றி குறைவாக சிந்தித்து, பிறர் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதப் பண்பாகும். பிறருக்கு உதவி செய்வதானது எள்ளளவும் சுயநலத்திற்கு அல்லாமல், மற்றவர்களின் நலன் பேணி செய்யப்பட வேண்டும்.
‘அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13:35) என்பது இயேசு நமக்கு விட்டுச் சென்ற நற்செய்தி. நாம் மிருகம் பாதி, மனிதர் பாதி என்ற கூற்றுக்கு உட்பட்டவர்கள் அல்ல. மாறாக என்றும் எப்போதும் அன்பாக உள்ள கடவுளின் மக்கள்
ஆதலால், அன்பு பணி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். இயேசுவின் சீடத்துவம் செழிப்புறும்
இறைவேண்டல்.
உமது தூய ஆவியினால் நீர் என்னை அருள்பொழிவு செய்துள்ளீர் என்றுணரும் நான், உமது அன்பைப் பகிரும் தூதுவராக இருக்க ஞானம், அறிவு மற்றும் திடம் பெற அருள்புரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
