பரிவிரக்கமும் மனிதமும் நிலைவாழ்வின் ஊற்று! | ஆர்.கே. சாமி | VeritasTamil

7அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 27ஆம் வாரம் – திங்கள்

கலா 1: 6-12
லூக்கா 10: 25-37


பரிவிரக்கமும் மனிதமும் நிலைவாழ்வின் ஊற்று! 
 

முதல் வாசகம்.

இன்றைய  வாசகங்கள்  நமது செயல்கள் மற்றும் நமது செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் இரண்டையும் குறித்துச் சிந்திக்க அழைப்பு விடுகின்றன.  புனித பவுல் கலாத்திய திருஅவைக்கு  எழுதிய திருமுகத்தில், இயேசு கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட நற்செய்திக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.  போலி போதகர்கள்  ஒரு மாறுபட்ட நற்செய்தியை போதிக்கலாம்.  அவை ஏற்கத்தக்கனவா என்று சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார்.
கலாத்தியர் மத்தியில் வெளிப்படுத்திய நற்செய்தியைப் புறக்கணித்து, வேறு  வித்தியாசமான இறையியல்/ நற்செய்தியை போதிக்கும் நபர்களால் கலாத்திய மக்கள் அலைக்கழிக்கப்பட்டதாக  பவுல் அடிகள்  கேள்விப்பட்டதாகத் தெரிகிறது.  ஆகவே, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசுவின் உண்மையான நற்செய்தியின் நம்பகத்தன்மையையும் தனித்துவத்தையும் பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார்.  
ஒரே ஒரு நம்பிக்கைதான் உள்ளது என்றும்,   புறவினத்தவருக்கு  நற்செய்தியை அறிவிப்பவராக தன்னை அனுப்பிய கடவுளை மாட்சிப்படுத்த   விரும்புகிறார் என்றும் பவுல் பழுத்தமாகக் கூறுகிறார்.

நற்செய்தி.

நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் கேட்கிறார் ஒரு திருச்சட்ட அறிஞர்.   கேள்வி கேட்டவர் ஒரு திருச்சட்ட அறிஞர் என்பதால், இயேசு அவரிடம்,  “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று கேட்க,  அவர், இரு பழைய ஏற்பாட்டு நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். சரியான பதில். மேலும், இயேசுவைச் சிக்க வைக்க மற்றொரு கேள்வியாக, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.
“எனக்கு அடுத்திருப்பவர் யார்”  என்பதை விளக்குவதற்கு ஒரு கதை வடிவிலான ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார், அதில்,    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒருவர் குற்றுயிரும் குலையுயிருமாக கீழே கிடக்கிறார். அவ்வழியே வந்த குரு ஒருவர்   அவரைக் கண்டதும் கண்டும் காணதவராக விலகிச் சென்றார். அடுத்து வந்தவர் ஒரு லேவியர். அவரும்  விலகிச் சென்றார். அவ்வழியே வந்த   சமாரியன் ஒருவர்   அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.   அவருக்குத் தன்னிடமிருந்த பொருள்களைக் கொண்டு முதலுதவிச் செய்ததோடு, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.
அத்துடன் நின்றுவிடாமல், மறுநாள் சாவடி பணியாளரிடம் சிறிது பணம் கொடுத்து, அவரை நன்றாகக் கவனித்துகொள்ள வேண்டுகிறார் என்று கதையைக் கூறிய பின், அந்த மூவரில் யார் உண்மையான அண்டை வீட்டார் அல்லது அடுத்திருப்பவர் யார் என்று இயேசு கேட்டபோது, அவர்தான் பரிவிரக்கம் காட்டியவர்தான் என்று அறிஞர் பதிலளிக்கிறார். இயேசு அவரைப்   போய் அவ்வாறே செய்யும்படி கூறுகிறார்.
 
சிந்தனைக்கு.

நற்செய்தியில், காணப்பட்ட திருச்சட்ட அறிஞருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பது நிச்சயமாக அறிந்திருப்பார். ஆனாலும், ஏன் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க வேண்டும்? ஆம், இயேசு அப்படி என்ன சொல்லப்போகிறார் என்பதற்காகக் கேட்டிருக்க வேண்டும்.   இயேசுவோ அவரிடம் ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் என்ன வாசிக்கிறீர்?’ என்று பதில் கேள்வி கேட்டு, அவருடைய வாயாலே அதற்குப் பதிலையும் சொல்ல வைக்கின்றார். தோராவின் இரண்டு முக்கிய கட்டளைகளான இறையன்பும், பிறர் அன்பும் இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது (இ.ச 6:4: லேவி 19:18).
நம் ஆண்டவர் செய்ததைப் போல இன்னொருவரின் இதயத்தை நம்மால் படிக்க முடியாவிட்டாலும், நம்மை    பொறி வைத்து, சோதித்து, இறை வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதையே குறிக்கோளாகக் கொண்ட பிறருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை இயேசுவிடமிருந்து நாம்  கற்க வேண்டும்.
வாழ்க்கைக்கான ஆழமான ஆன்மீக பதில்களை உண்மையாகத் தேடி, திறந்த இதயத்துடன் இயேசுவிடம் வருவதன் முக்கியத்துவத்தையும் இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒருபோதும் இயேசுவை சோதிக்கக்கூடாது. மாறாக, மனத்தாழ்மையுடன், அவர் எல்லா உண்மைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்றும், வாழ்க்கையில் நாம் தேடும் ஒவ்வொரு பதிலும் அவரிடம் உள்ளது என்றும் நாம் நம்ப வேண்டும்.
 அந்த திருச்சட்ட அறிஞர், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதை அறிந்திருந்தபடியால், அவர் இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றிய கட்டளைகளை இயேசுவுக்குப் பதிலாகத் தருகிறார்.  ஆனாலும், இயேசு அவரை விடுவதாக இல்லை.  உவமையக்கூறி   'உனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்கிறார்.  நிறைவாக யாரை அவர்கள் பகைவராக நினைத்தார்களோ அவர்களில் ஒருவரை தனக்கு அடுத்திருப்பவராக பதில் சொல்ல வைக்கிறார். இயேசுவின் புரட்சியை இங்கே காணமுடிகிறது.  சமாரியர்கள் மட்டில் யூதர்கள் கொண்டிருந்த ஒருதலைப்பட்சமான எண்ணங்களை இங்கே இயேசு  திருத்த முனைகிறார். இந்த சமாரியனை தன் அழகான கதைக்கு கதாநாயகனாக்குகிறார் இயேசு.
குருக்கள் விலகிச் செல்ல இந்த சமாரியர், அருகில் செல்கிறார், பரிவுகொள்கிறார், முதலுதவி செய்கிறார், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்கிறார். இயேசு இங்கே மனதநேயத்தை வலியுறுத்துகிறார்.  நிலைவாழ்வுக்கு மனிதநேயப்பணிகள் இன்றியமையாதவை என்பதை உணர்த்துகிறார்.  மனிதநேயம் என்பது குலம் கோத்திரம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதரும் என் சகோதரன் எனும் உன்னதமான எண்ணம் நம்மில் மேலோங்கினால், நிலைவாழ்வுக்குத் தடையில்லை. 
 
இறைவேண்டல்.

நிலைவாழ்வுக்கு மனிதநேயம் எத்துணை அவசியம் என்பதை உணர்த்திய ஆண்டவரே, பரிவிரக்கத்தின் ஊற்றாக நான் திகழ்ந்திட என்னை காத்தருள்வீராக. ஆமென். 
 

ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452