இருப்பதைப் பகிர்ந்தால் கிறிஸ்தவம் தழைக்கும்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

23மே 2024  

பொதுக்காலம் 7ஆம் வாரம் - வியாழன்

யாக்கோபு திருமுகம் 5: 1-6

மாற்கு 9: 41-50

முதல் வாசகம்.

அநியாயமான வழிகளில்  செல்வங்களைச் சம்பாதித்து, மற்றவர்களைப் புறக்கணித்து அல்லது சுரண்டி  ஆடம்பரமாக வாழும் செல்வந்தர்கள் மீதான வலுவான எச்சரிக்கையாக இந்த வாசகப் பகுதி அமைகிறது.  

முதலில், செல்வந்தர்களுக்கு நேரக்கூடிய  துன்பங்கள் பற்றி எச்சரிக்கப்படுகிறது.   அவர்களின் செல்வங்களும் உடைமைகளும் தற்காலிகமானதே என்று கூறப்படுகிறது.

அவர்கள் சேமித்து வைத்திருக்கும் அனைத்தும்  கடைசி நாட்களில் அவர்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் யாக்கோபு. மேலும்,  தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியவர்கள் அந்த  தொழிலாளர்களின் அழுகையை முன்னிட்டு கடவுள் தண்டிப்பார் எனவும் ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு  எச்சரிக்கைவிடப்படுகிறது. 

அடுத்து,  செல்வர்களில் அதிகப்படியான ஆடம்பரத்தில்  வாழ்பவர்களும்  தீர்ப்புக்கு ஆளாவார்கள் என்றும்  விவரிக்கப்படுகிறது.  மொத்தத்தில், அநியாய வழிகளில்  தங்கள் செல்வங்களைச் சம்பாதித்து, மற்றவர்களின் வைற்றில்  அடித்து  மகிழ்ச்சியுடன் வாழும் செல்வந்தர்கள்  எதிர்கொள்ளக்கூடிய   கடுமையான விளைவுகளைப் பற்றியும் வாசகத்தில் அறிய வருகிறோம்.   


நற்செய்தி.

பாவத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும், நம்பிக்கை மற்றும்  நீதியை பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் இயேசுவின் போதனையை இன்று வாசித்தறிகிறோம்.  

கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்றறிந்து  அவர்களுக்கு  ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கக் கொடுப்பவர், ஆண்டவரிடமிருந்து  வெகுமதியை நிச்சயமாக பெறுவார். இதில், ஒரு கோப்பை தண்ணீர் கொடுப்பது போன்ற சிறிய தயவான செயல்கள் கூட இயேசுவின் பெயரில் செய்யப்படும் போது, அது தகுந்த  வெகுமதியைப் பெறும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.  

அடுத்து, நாம் அறியவருவது,  ‘அவனுடைய கழுத்தில் ஒரு பெரிய எந்திரக்கல்லைப் போட்டு, அவனைக் கடலில் எறிந்தால் அது அவனுக்கு நல்லது’ எனும் படிப்பினையாகும். இதில், ஏழை எளியோரை, வலுவிழந்தோரை,  குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாவத்திற்கு இட்டுச் செல்வோருக்கு  எதிராக இயேசு எச்சரிக்கிறார்.  

தொடர்ந்து, பாவத்தைத் தவிர்க்கத் தீவிரமான வழிமுறைகளை இயேசு முன்வைக்கிறார்.  ‘உன் கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால் அதை வெட்டி எறிந்துவிடு’ என்கிறார் ஆண்டவர்.  இரண்டு கைகளுடன் அணையாத நெருப்பில் (நரகத்தில்) துன்புறுவதைவிட ஊனமுற்றவனாய் விண்ணகம் நுழைவது  நலம் என்கிறார்.

அவ்வாறே,  கால், கண் போன்ற உறுப்புகளும்  பாவத்திற்கு உடந்தையாக இருந்தால்  அவற்றையும்  வெட்டி எறிவது மேல் என்கிறார். எனெனில், அவற்றோடு நரகத்தில் துன்புறுவதைவிட ஒற்றை கால், ஒற்றைக் கண்ணோடு நிலைவாழ்வில் மகிழ்ந்திருப்பது மேல் என்கிறார்.

நிறைவாக, சீடர்கள் அனைவரும்   உப்பின் தன்மையைக் கொண்டிருக்கவும், ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழவும் ஆண்டவர் அழைப்புவிடுக்கின்றார்.  


சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில்,  யாக்கோபு, “உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று; உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன” என்றும்,  நற்செய்தியில் இயேசுவோ, ஒருவர் தன்னுடைய சீடர் என்பதற்காக அவருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என்றும்  கூறுகிறார்கள். ஆம்,  “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக்கா 12:15) என்பதுதான் இயேசுவின் பொன்மொழி.

இன்றைய இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கும்போது, எனக்கு நல்வழியில் ஔவையார் உரைத்த பாடல் நினைவுக்கு வருகிறது:

‘பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?’

இரவும் பகலுமாக பாடுபட்டு பணத்தைச் சேர்த்து, சேர்த்து வைத்து துன்புறுவோருக்கும் அல்லல்படும் உற்றார் உறவினருக்கும் ஒரு சல்லிக்காசு கொடுத்துதவாமல், தர்மம் செய்ய மனமில்லாமல் இருப்போருக்கு அவர்களது செல்வத்தால் ஒரு பயனும் கிட்டாது. கஞ்சன் எனும் பெயர்தான் மிஞ்சும். உடலை (கூடுவிட்டு) ஆவி போகும் போது, அது  எதையும் உடன்  கொண்டு செல்வதில்லை. 

“என் தாயின் கருப்பையினின்று
பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;
அங்கே திரும்புகையில் பிறந்த
மேனியனாய் யான் செல்வேன் (யோபு 1:21) என்று ஞான நூல்களில் ஒன்றான யோபுவில் வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் ஒரு நல்ல சீடர், ஒருபோதும் செல்வந்தராக வாழ முடியாது. கூடுவிட்டு ஆவி போனபின் கூடவே வரக்கூடியவை நாம் செய்த புண்ணியங்கள்தான்.  முதல் வாசகத்தில், புனித யாக்கோபு, செல்வந்தர்கள் விரைவில் கடுமையான சூழலை  எதிர்கொள்வார்கள் என்றும், அவர்களின் செல்வங்களும் உடைமைகளும் தற்காலிகமானதே என்றும் விவரிக்கிறார். 

கறிஸ்தவம் என்பது செல்வத்தைப் பெருக்க வழி சொல்லும் மறை அல்ல. மாறாக, இருப்பதை பகிர வலியுறுத்தும் மறை. நம்மில் பகிர்தல் இல்லையேல் நமது சீடத்துவம் உண்மை சீடத்தவமாகாது.  நமது ஞானம், அறிவு, சொத்து, உடமைகள்  அனைத்தும் பகிரப்பட வேண்டும். இவர்களே இயேசு வலியுறுத்தும் எளிய மனதோர்.  அடுத்தவரைப்போல வாழ வேண்டும் என்று பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவர்  கிறிஸ்தவர் அல்ல. அடுத்திருப்பவரை வாழ வைப்பவர்தான் கிறிஸ்தவர்.

அடுத்து வருவது பாவம் பற்றிய அறிவுறுத்தல். 'பிறரைப் பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டிச் கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது''   என இயேசு கற்பிக்கிறார். கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகளை நாம் அடக்கி ஆள வேண்டும்.  இது கடினமாகத் தோன்றலாம். பாவம் என்ற கல்லறைக்குப் பல வழிகள் உண்டு. ஆனால் தர்ம தேவன் கோயிலான விண்ணகத்திற்கு இயேசுவே வழி.    

நிறைவாக, ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு தான தர்மங்கள் செய்வதில்   முன்னிலை வகிக்க வேண்டும்.     ‘பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா’ என்பதில் பொதிந்துள்ள பேருண்மையை மனதில் கொண்டு இயேசுவின் சீடராக வாழ்வோம். 


இறைவேண்டல்.

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்ற அன்பு இயேசுவே, எந்நாளும் செல்வத்தில் மோகம் கொள்ளாமல், இருப்பதைப் பகிர்ந்து வாழும் வரத்தை எமக்கருள்வீராக. ஆமென்

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452