மண்ணகத்தோர் தாயே, வாழ்க உம் திருப்பெயர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
20 மே 2024 .
பொதுக்காலம் 7ஆம் வாரம் - திங்கள்
புனித கன்னி மரியா, திரு அவையின் அன்னை
தொடக்க நூல் 3: 9-15, 20
யோவான் 19: 25-27
முதல் வாசகம்.
இன்றைய நமது வாசகங்கள் இயேசுவின் வாழ்வில் மட்டுமல்ல, திருஅவையின் வாழ்விலும் அன்னை மரியாவின் பங்கை நமக்கு நினைவூட்டுகின்றன.
இன்று, தொநூ 3:9-15,20, மற்றும் திப 1:12-14 என இரு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருத்தூதர் பணிகள் நூலில் எடுக்கப்பட்ட வாசகத்தில், 'இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று லூக்கா கூறுவதைச் நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
இந்த மேல் அறியில்தான் இயேசு இராவுணவின் போது புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த இடத்தில்தான் பெந்தகோஸ்து அன்று தூய ஆவியார் இறங்கிவர திருஅவை பிறந்ததோடு, அதன் பயணமும் தொடங்கியது. அன்றுதான் திருஅவையின் தாயாக அன்னை மரியாவும் தமது திருப்பணியைத் தொடங்கினார்.
தொ.நூ. வாசகத்தில், 'மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் பணி வாகத்தில், 'இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
நற்செய்தி.
நற்செய்தியில் கல்வாரியில் இயேசு உயிர்விடும் முன், நடைபெற்ற ஒரு சிறப்புமிகு நிகழ்வை அறிய வருகிறோம். இயேசு சிலுவையில் இருந்து கீழே பார்க்கையில், அவர் தனது தாயையும் அவருடைய அன்பான சீடரையும் காண்கிறார். அவர் தன் தாயை யோவானிடம் ஒப்படைக்கிறார். இது இயேசு தம் அன்னை மரியாவை திருஅவையிடமும், திருஅவையை மரியாளிடமும் உரிமையோடு ஒப்படைத்ததைக் குறிக்கிறது. இந்த நிகழ்வு நடைபெறாமலேயே இயேசு இறந்திருக்கக் கூடும். ஆனால், கடவுள் அவ்வாறு திட்டமிடவில்லை. அன்னை மரியாவை இயேசு வழியாகவே நமது அன்னையாக ஒப்படைத்தார். இதுதான் திருஅவையில் ஏற்பட்ட அன்றும், இன்றும் இனி என்றும் நிலைத்திருக்கும் ஒரு திருப்புமுனை.
சிந்தனைக்கு.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 3, 2018 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் அன்னை புனித கன்னி மரியாவின் புதியதொரு விழாவுக்கு ஒப்புதல் அளித்து அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பெந்தெகொஸ்து நாளுக்குப் பின் வரும் திங்கட்கிழமையன்று கொண்டாடப்பட வேண்டிய உலகளாவிய, விழாவாக, ‘மரியா திருஅவையின் தாய்' என்னும் தலைப்பில் அன்று முதல் விழாக் கொண்டாடுகிறாம்.
முதல் வாசகத்தில், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கிறோம். இதில் ‘இணைந்திருத்தல்' என்பதுதான் என்னைக் கவர்ந்த சொல்லாக உள்ளது. ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக விளங்க வேண்டும் என்றால் கணவுனும் மனைவியும் இன்பதிலும் துன்பதிலும் நோயிலும் உடல் நலத்திலும் என்றும் இணைந்திருக்க வேண்டும். அவ்வாறே, அன்னை மரியா தாய்மை உணர்வோடும், பாசத்தோடும் சீடர்களோடு இணைந்திருந்தார். அங்கே இறை வேண்டல் இருந்தது, இறையொளி இருந்தது.
இயேசு, எவ்வாறு தன் சீடர்களைக் கோழி தன் குஞ்சுகளைக் காப்பதுபோல் காத்து வந்தாரோ அவ்வாறே அன்னை மரியா, இயேசுவின் இடத்தில் நின்று, திருத்தூதர்களை ஒருவர் மற்றவர்களோடு இணைத்திருந்தார். புனித லூக்கா, 'ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று குறிப்பிடுகிறார். இங்கே ஒரே மனத்தோடு என்பதை நாம் கவனதித்தில் கொள்ள வேண்டும். ஆம், மேல் மாடியில் தூய ஆவியார் வரும் வரை, அன்றைய சீடர்களுக்கும் அன்னை மரியாவும் ஒரே எண்ணம் கொண்டவர்களாக, கருத்து வேறுபாடின்றி அன்பில் நிலைத்திருந்தார்கள் என்பதை மறுப்பதற்கு இடமில்லை. பெந்தகோஸ்து அன்று இணைபிரியா ‘தாய்-பிள்ளைகள்' ஆனார்கள், அனைவரும் உள்ளத்தாலும் ஒரே நம்பிக்கையினாலும் ஒன்றித்திருந்தார்கள். அன்னை மரரியா இல்லாமல் இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு முழுமை அடைவதில்லை. இன்று அன்னை கன்னி மரியாவை, திருஅவையின் தாய் எனக் கொண்டாடி மகிழும் நாம், அவரோடு இணைந்து இறைவனின் மனுக்குல மீட்புத் திட்டத்தில் ஒருமனதோராய் பங்கு பெற அழைக்கப்படுகிறோம்.
அன்னை மரியா இயேசுவின் தருவுடலாகிய திருஅவையை ஈன்றெடுத்தவர். அவர் என்றுன்றும் நம்மோடு இருந்து நமக்காகப் பரிந்து பேசும் உன்னத தாய் என்பதை நினைவில் கொள்வோம். அருள் நிறைந்த அவர் நம்மோடு வாழ்கிறார். அவர் வியாகுலத் தாய். துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் குவிந்தாலும், கிஞ்சிற்றும் தளர்ந்து விடாமல் நம்பிக்கையில் வாழவும் மீட்புப் பெறவும் கடவுளிடம் நமக்காக மன்றாடும் மனுக்குலத்தின் ஒரே தாய் அவர் என்பதை நினைவல் கொள்வோம்.
மனுக்குலத்தின் மாட்சியாக விளங்கும் அன்னை மரியே வாழ்கா!
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உமது தாயும் எங்கள் அன்புத் தாயுமாகிய அன்னை மரியாவைப்போல் துன்பங்கள் பல என்னைத் தாக்கினாலும் கொஞ்சமும் நம்பிக்கையில் தளர்ந்துவிடாமல், தாழ்ச்சியோடும், தன்னம்பிக்கையோடும், பணிவோடும் சமூகத்தில் வாழும் வரம் அருள்வீராக. ஆமென்
அகிலம் போற்றும் அன்னை மரியே! எங்களுக்காக வேண்டுக்கொள்ளும். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452