நற்கருணை : கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும் | Maundy Thursday | ஆர்.கே. சாமி | VeritasTamil

28 மார்ச்  2024                                                                                          

புனித வாரம் -வியாழன்

விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14 

1 கொரிந்தியர் 11: 23-26                                                                    

யோவான் 13: 1-15

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

முதல் வாசகம் :

இன்றைய முதல் வாசகம் பாஸ்கா விழாவின்  தோற்றத்தை விவரிக்கிறது. மோசே  இஸ்ரயேலரை  பாஸ்கா விழாவை ஆண்டின் முதல் மாதத்தில் நினைவுகூர்ந்து  கொண்டாடப் பணிக்கிறார்.  ஏனென்றால் இது அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் புதிய வாழ்க்கையின் தொடக்கத்தையும் தந்த நிகழ்வு. அன்று குடும்பந்தோறும்   குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாகத் தேர்வுச் செய்ய வேண்டும்.  ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களுடைய வீடுகளின் கதவுக் கம்பங்கள்  மீது பூசப்பட வேண்டும். இரத்தம் இஸ்ரயேலர்  இருக்கும் வீடுகளுக்கு  அடையாளமாக இருக்கும், ஆண்டவர் அவற்றைக் கடந்து செல்வார். அவர்கள்  ஆட்டுக்குட்டியைக் கொன்று,  நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். 

ஆண்டவர் இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்து செல்வதால், இது ‘ஆண்டவரின் பாஸ்கா' எனப்படுகிறது.  ஆண்டவர் அவர்களைக்   காப்பாற்றிய பிறகு, அவர்கள் தங்கள் பழைய அடிமைத்தன வாழ்க்கையை விட்டுவிட்டு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப்  பயணம் செய்ய வேண்டும்.  

இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் கடவுள் செய்யும் இரத்த உடன்படிக்கை உறவு - மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம், மக்கள் மரணம் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்பதும்,   அவர்கள்  கடவுளால் ஒரு புதிய வாழ்க்கைக்கு வழிநடத்தப்படுகிறார்கள் என்பதையும்  வாசகம் நினைவூட்டுகிறது.


இரண்டாம் வாசகம்

இவ்வாசகத்தில் திருத்தூதர் பவுல் அடிகள் இராவுணவின் போது இடம்பெற்ற  ஒரு நிகழ்வை விவரிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம் சீடர்களுடன் இவ்விருந்தைப் பகிர்ந்து கொண்டார். “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்று இயேசு கட்டளையாகப் பணித்ததை எடுத்துரைக்கிறார். 

இந்த நிகழ்வு கிறிஸ்தவ இறையியலில் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது நற்கருணை  ஏற்படுத்தப்பட்டதையும் நமக்கு எடுத்தியம்புகிறது.  அப்பம்   மனிதகுலத்திற்காக உடைக்கப்பட்ட இயேசுவின் உடலையும்  திராட்சை இரசம் பாவ மன்னிப்புக்காக அவரால் சிந்தப்பட்ட இரத்தத்தையும்  குறிக்கிறது.


நற்செய்தி

இன்றைய நற்செய்தியில் திருத்தூதர் யோவான், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம் சீடர்களுடன் நிகழ்த்திய பாஸ்கா இராவுணவின்  போது மேற்கொண்ட  ஒரு நிகழ்வை விவரிக்கிறார். 

இந்த நிகழ்வில், இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் பணிவு மற்றும் சேவையில் தாழ்ச்சியின் இன்றியமையாதத் தன்மையை வெளிப்படுத்துகிறார். இது பொதுவாக பணியாளர்களுக்கான ஒரு முன்மாதிரி படிப்பினையாக உள்ளது.   இயேசு, பூமியில் தனது காலம் முடிவடைவதை அறிந்திருந்ததால் தமது பிரியாவிடைக்கு முன்பாக  இந்த செயலைத் தானே செய்யத் தேர்ந்தெடுத்தார்.

பேதுரு ஆரம்பத்தில் இயேசுவின் பாதங்களைக் கழுவ அனுமதிக்க மறுத்தபோது,​இந்தச் செயல் அவர்களின் உறவுக்கு அடையாளமாகவும் அவசியமாகவும் இருக்கிறது என்று இயேசு விளக்குகிறார். தம்முடைய சீடர்கள் பணிவுடனும் அன்புடனும் ஒருவரையொருவர் ஏற்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்கு, இந்த தாழ்ச்சிமிகுப் பணிவிடை  செயல் ஒரு முன்மாதிரி என்று இயேசு வலியுறுத்துகிறார்.
 

சிந்தனைக்கு

கத்தோலிக்க மரபுவழியில், இன்றிரவு ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி பொதுவாக ஆலயத்தில்  பலிபீடத்திலிருந்து நற்கருணை பவனியுடன்  முடிவடையும்.   இதனால், இயேசு இரா உணவு கொண்டாடிய மேல் அறையை விட்டு வெளியேறி, ஒலிவத் தோட்டத்தில் கெத்சமணி  என்ற இடத்திற்குச் செல்லும்போது அவருடன் பயணிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இங்கே இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களைத் தன்னுடன் இணைந்து தந்தையோடு இறைவேண்டலில் ஈடுபட கேட்கிறார்.

இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கும்   இயேசுவின் இராவுணவை  “நற்கருணைக் கொண்டாட்டத்தின் அடித்தளமாக” திருஅவை தொன்றுதொட்டு போதித்து வருகிறது. இயேசு தம் சீடரோடு அமர்ந்து இறுதி இராவுணவு அருந்திய நிகழ்ச்சியை புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களும் பதிவு செய்துள்ளன. அப்பகுதிகள்: மத்தேயு 26:17-30; மாற்கு 14:12-26; லூக்கா 22:7-39; யோவான் 13:1-17:26 என்பவை ஆகும். எனவே, நற்கருணை ஏற்றபடுத்தப்பட்டதற்கும் நற்கருணை கொண்டாட்டத்திற்கும்  ஆழமான விவிலிய ஆதாரம் உள்ளதை மறுப்பதற்கில்லை. புனித பவுல் அடிகள கொரிந்திருக்கு எழுதிய முதல் திருமுகத்திலும் (அதிகாரம் 11)  நற்கருணைக்கான தூய்மை தன்மையை மிகவும் அறிவுறுத்தினார்.

மேலும், இன்று  கத்தோலிக்க திருஅவையின் மிக முக்கியமான நாள். இன்று ஆண்டவர் இயேசு தாமே, குருத்துவத்தை ஏற்படுத்திய நாள். குருத்துவம் இல்லையென்றால் கிறிஸ்தவம் என்றோ அழிந்து போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.  காரணம் அருள்பணியாளர்கள் இல்லையென்றால் நற்கருணை கிடையாது; நற்கருணை இல்லையென்றால் கிறிஸ்தவம் கிடையாது. ஆக கிறிஸ்தவத்தின் ஆணிவேராக இருப்பது குருத்துவம். அப்படிப்பட்ட குருத்துவத்தின் மேன்மையை கடவுள் நமக்கு இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளர் என்பதற்கு நன்றிகூற அழைக்கப்படுகிறோம். 
அன்று கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுத்த இந்த பாஸ்கா கொண்டாட்டத்தின் கடமையை இன்றளவும் யூதர்கள் கடைபிடித்து வருகின்றனர். இயேசு நமக்கு அளித்த இந்த புதிய பாஸ்கா நற்கருணை கொண்டாட்டத்திற்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்? சிந்திப்போம்.

இறைவேண்டல்

குருத்துவத்தைத் தந்த  தலைமைக் குருவாகிய இயேசுவே, உமது திருவுடலாகிய நற்கருணைக்கு நான் என்றும் கீழ்ப்படிந்து, நற்கருணையே எனது வாழ்வின் உச்சமும் ஊற்றுமாக உள்ளதென்பதில் நம்பிக்கைக் கொண்டு வாழ என்னை ஆசீர்வதியும். ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452