பிறர் நலம் பேணுதலே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
23 மார்ச் 2024
தவக்காலம் 5ஆம் வாரம் - சனி
எசேக்கியேல் 37: 21-28
யோவான் 11: 45-57
முதல் வாசகம்:
இன்றைய முதல் வாசகமானது, இஸ்ரயேலர் பாபிலோனில் அடிமைப்பட்டிருக்கும்போது, அவர்களின் புலம்பலைக் கேட்ட கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக வெளியிட்ட மீட்புச் ஆறுதல் செய்தியை வழங்குகிறது.
அவர்கள் கடவுளிடம் திரும்பவும் அவர்களின் உடன்படிக்கை உறவைப் புதுப்பிக்கவும் கடவுள் அழைக்கிறார். அவர்கள் பாபிலோனில் அடிமைப்பட்டும், சிதறடிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தபோதிலும், கடவுள் அவர்களின் இழி நிலையிலும் அவரோடுடனான உறவை மீட்டெடுப்பார் என்று வாக்களிக்கிறார்.
இஸ்ரயேலர் முன்பு தாவீதின் ஆரசரின் கீழ் ஒரு நாட்டினராக ஒன்றித்திருந்ததைப்போல், அவர்கள் மீண்டும் பாபிலோனில் இருந்த மீட்டெடுக்கப்பட்டு, ஒன்றுபடுவார்கள் என்ற வாக்குறுதியை வழங்குகின்றார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார் என்றும், அந்நிய சிலைகளை வழிபடமாட்டார்கள் என்றும் உறுதிகூறுகிறார்.
தொடர்ந்து, ‘நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்’ என்ற உடன்படிக்கை வாக்குறுதியையும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாக அளிக்கிறார்.
நற்செய்தி :
நற்செய்தியில், யூதேயாவில் உள்ள பெத்தானியாவில், மார்த்தா மற்றும் மரியா ஆகியோரின சகோதரன் இறந்து போன இலாசரை ஆண்டவர் இயேசு உயிர்பித்ததைப் பார்த்த யூதர்கள் பலர், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறார்கள். இதைக் கண்ட தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இவனை இப்படியே விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் புனித இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே” என்று பேசத் தொடங்குகிறார்கள். அப்போதுதான் கயபா, “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் – இயேசு – மட்டும் மக்களுக்காக இருப்பது நல்லது” என்பதை இறைவாக்காகச் சொல்கின்றார்.
சாத்தான் வேதம் ஓதும் என்பார்களே, அதுபோன்று கொடியவனாகிய கயபா, மேற்கூறிய வார்த்தைகளை இறைவாக்காக சொல்கின்றான். யூதர்களுடைய பாஸ்கா விழா நெருங்கி வரும் வேளையில், இயேசு எருசலேம் ஆலயத்திற்கு வருவார் என்று குள்ளநரி கூட்டம் எதிர்பார்ந்திருந்தது.
சிந்தனைக்கு:
இன்றைய வாசகங்கள் அடுத்த வாரம் - புனித வார நிகழ்வுகளுக்கு கடவுள் எவ்வாறு தயார் செய்கிறார் என்பதை நமக்கு முன்னுரைக்கின்றன. இயேசுவின் பாடுகள், மரணம் - உயிர்த்தெழுதல் ஆகிய நிகழ்வுகளை துக்கத்துடனும் - மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிகழ்வுகளுக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.
தலைமைக் குருக்களுக்கும் பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையே பதற்றம் நிலவுவதை நாம் கடந்த சில தினங்களாக அறிந்து வருகிறோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், திருச்சட்டத்தை மதிக்கிறோம் என்று சூளுரைக்கும் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவை எதிர்த்தாலும், சாதாரண மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்று யோவான் கூறுகிறார்.
உயிர்கொடுப்பான் தோழன் என்பார்கள். அதற்கு உற்ற எடுத்துக்காட்டு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. கொல்லப்படுவார் என்றறிந்தும், கல்வாரியை நோக்கியப் பயணத்திற்குத் தயாரிகிறார். எளிய மக்கள் பக்கம் இருந்து கடவுள் முதல் வாசகத்தில், ‘நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்’ என்ற உடன்படிக்கை வாக்குறுதியையும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாக அளித்த கடவுள் அந்த வக்குறுதியைத் தொடந்து நிலைநாட்ட தம் மகனை பலியிடவிழைகிறார்.
ஆயனில்லா ஆடுகளைப் போல் இருந்த மக்களை கூட்டிச் சேர்க்க வந்தவரை பலியிட துணிகிறார்கள் அதிகார வர்க்கத்தினர். அதிலும், தலைமைக் குரு கயபா “இனம் முழுதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்னும் வார்த்தைகளைக் கேட்கிறோம். ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும், இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். கயபாவின் கூற்றிலும் ஓர் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
பிறர் நலம் கருதி இயேசு பாடுகளையும் மரணத்தையும் ஏற்கத் துணிந்தார். பிறர் நலம் பேணுதவதில் தான் சீடத்துவத்தின் மாட்சி வெளிப்படும். பல நேரங்களில் நாம், நம்மைச் சுற்றிவேலி அமைத்துக்கொண்டு, ‘நான், எனது குடும்பம், எனது சொத்து, எனது நேரம்' என்ற மனப்போக்கில் காலத்தைக் கழிக்கிறோம். பங்குப் பணிகளிலும் இத்தகைய சுயநலம் மேலோங்கி உள்ளது.
இத்தகைய ஒரு மனப்பான்மையை மாற்றி பிறருக்காக நம்முடைய வாழ்வினை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே உண்மையான சீடத்துவம் என்பதை இயேசு இன்று வலியுறுத்துகிறார்.
இறைவேண்டல்:
மனுக்குல மீட்புக்கு உம் உயிரைக் கையளிக்கத் துணிந்த இயேசுவே, என்னில் உள்ள தன்னலத்தைப் போக்கி, பிறர் வாழ்வடைய என்னை கையளிக்கும் தாராள மனதை எனக்குத் தந்தருள உம்மை மன்றாடுகிறேன், ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452