நான் யார்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம்  (02.01.2024) 
I: 1யோவா:  2: 22-28
II:திபா 98: 1. 2-3. 3-4
III: யோவா: 1: 19-28

மனித வாழ்வு என்பது கடவுள் நமக்கு கொடுத்த உன்னதமான கொடை. இந்த புதிய ஆண்டை கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்றார். இந்த ஆண்டிலே புது ஆற்றலோடும் ஆர்வத்தோடும் நேர்மறை எண்ணத்தோடும் முழு ஈடுபாட்டோடும் நம் கடமைகளைச் சிறப்பாகச் செய்திட "நான் யார்?" என்ற தெளிவைப் பெற வேண்டும். இந்த உலகத்திலே தன்னை முழுவதும் அறிந்த மனிதர்கள் வாழ்விலே பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் பெறுகின்றனர். தன்னை முழுமையாக அறியாதவர்கள் பல்வேறு துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளாகின்றனர்.

இன்றைய நற்செய்தியில் "நான் யார்?" என்ற புரிதலை திருமுழுக்கு யோவான் கொண்டிருந்தார். திருமுழுக்கு யோவானின் வாழ்வையும் போதனைகளையும் செயல்பாடுகளையும் கண்ட யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும்  அனுப்பி  "நீர் யார்?" எனக்கேட்க  அதற்கு திருமுழுக்கு யோவான் "நான் மெசியா அல்ல" என்று பதிலளித்தார். இது திருமுழுக்கு யோவானின் உண்மை தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால் தன்னை மெசியாவாக உலகிற்கு சுட்டிக்காட்டி நற்பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய நோக்கத்தை அறிந்து மெசியாவாகிய இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்தினார். திருமுழுக்கு யோவான் ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யாத ஒரு செயலுக்காக நம்மைப் பிறர் பாராட்டும் பொழுது அதை புகழ்ச்சிக்காக ஏற்றுக்கொள்ளாமல்  உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

ஒரு ஊரிலே ஒரே பெயரைக் கொண்ட இரு நபர்கள் வாழ்ந்து வந்தனர். இரு நபர்களில் ஒருவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் ஒரு போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பினார். அவருக்கு ஊக்கப் பரிசாக 5 லட்சத்தை ஒரு நிறுவனம் வழங்க முன்வந்தது. அப்படிப்பட்ட சூழலில் அந்த ஐந்து லட்சத்தை கொடுப்பதற்காக அந்த ஊருக்கு அந்த நிறுவனத்தின் பணியாளர்கள்  வந்தனர்.இவர்கள் அந்த ஊரில் பெயரைக் கேட்டு விசாரித்த பொழுது தவறுதலாக மற்றவருடைய வீட்டிற்கு சென்று விட்டனர். அதே பெயரைக் கொண்ட அந்த மற்ற நபர் நினைத்திருந்தால் அந்த பணத்தை தான் வாங்கிக்கொண்டு சுயநலத்தோடு இருந்திருக்கலாம். ஆனால் அந்த நபர் "இந்த பணத்திற்கு சொந்தக்காரர் நானல்ல" என்று கூறி உண்மையான விளையாட்டு வீரரின் வீட்டை காட்டினார்.இவரின் நேர்மைத் தன்மையைக் கண்டு அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் வியப்புற்றனர். பிறரின் நற்செயலுக்காக  நாம் பெயர் வாங்க கூடாது.  மாறாக "அந்த பாராட்டுதலுக்கு உரியவன் நானல்ல" என்பதை சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் மேற்கூறிய நிகழ்வும் திருமுழுக்கு யோவானின் வாழ்வும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இத்தகைய மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்றால் நம்மைப் பற்றியத் தெளிவு நமக்கு வேண்டும். "நான் யார்?" என்ற கேள்விக்கு நம் வாழ்க்கையில் பதில் கிடைத்தால் நமது வாழ்க்கை ஆற்றல் மிக்கதாகவும் வெற்றியின் பாதையை நோக்க கூடியவையாகவும் அமையும். திருமுழுக்கு யோவான் தான் எந்த நோக்கத்திற்காக கடவுளால் அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கத்தில் தெளிவாக இருந்து தன் பணிகளைச் செய்தார். எனவே தான் அவரால் "நான் மெசியா அல்ல" என்று கூற முடிந்தது. திருமுழுக்கு யோவான் இயேசுனுடைய வருகைக்காகப்  பாதையை ஆயத்தப்படுத்தி தாழ்ச்சியோடும் உண்மையோடும் நேர்மையோடும் வாழ்ந்து வந்தார். தாழ்ச்சி, உண்மை மற்றும் நேர்மை போன்ற தலையாகிய பண்பு நம் வாழ்விலே இருக்கும்பொழுது நம் வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக மாறும். நம்முடைய மனச்சாட்சிக்குப் பயந்து உண்மையாக வாழ்கின்ற பொழுது நம் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வாக மாறும். இத்தகைய வாழ்வைப் பெற்றுக் கொள்ளத் தான் இந்தப் புத்தாண்டில் அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கு யோவான் தன்னை யார் என தெளிவாய் புரிந்துகொண்டு தன்னுடைய இறை பணியை செய்தது போல நாமும் நம்முடைய உண்மையான வாழ்வின் வழியாகவும் தாழ்ச்சி நிறைந்த வாழ்வின் வழியாகவும் நேர்மையான வாழ்வின் வழியாகவும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அருளை வேண்டுவோம். அதேபோல திருமுழுக்கு யோவான் எவ்வாறு தன்னையே முற்றிலும் அறிந்திருந்தாரோ, அதேபோல நம்மைப் பற்றியும் நம் வாழ்வைப் பற்றியும் நம்முடைய செபத்தின் வழியாகவும் நம்முடைய நல்லெண்ணத்தின் வழியாகவும் அறிந்துகொள்ள தேவையான அருளைத் தொடர்ந்து வேண்டுவோம்.புதிதாக பிறந்துள்ள இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசீர்வாதத்தையும் நிறைவையும் அளிக்க நம்மையே முழுவதும் கடவுளிடமும் அர்ப்பணிப்போம்.

இறைவேண்டல்
உண்மையுள்ள இறைவா! புனித திருமுழுக்கு யோவானைப் போல எங்களுடைய அன்றாட வாழ்வில் உண்மைக்குச் சான்று பகரும் மனநிலையைத் தாரும். "நான் யார்" என்ற  புரிதலைப் பகுப்பாய்வு செய்யப் புனித திருமுழுக்கு யோவானுக்கு  கொடுத்ததைப் போல தேவையான ஞானத்தைத் தாரும். எங்களுடைய சான்று பகரக் கூடிய வாழ்வின் வழியாக   "நீரே மெசியா" என உலகம் அறிந்துகொள்ள  நாங்களும் ஒரு கருவியாகப் பயன்பட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்