இரக்கத்தைப் பகிர்ந்தால், இறைவன் இதயத்தில் வாழ்வார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

23 பிப்ரவரி  2024,                                                                                          

தவக்காலம் முதல் வாரம் -வெள்ளி

எசேக்கியேல்  18: 21-28                                                                                  

மத்தேயு 5: 20-26  

முன்னுரை:

எசேக்கியேல் இறைவாக்கினர் செதோக்கிய குருகுலத்தில் பிறந்த பூசி என்பவரின் மகன். எசேக்கியேல் என்றால்  ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்று  பொருள். யூதேயா முதன்முறையாக கி.மு. 598-ல்  பாபிலோனியர்களால் தாக்கப்பட்டபோது, இவர் தன் மனைவியை இழந்தார். இவர் சற்று வசதி உள்ளவர் என்பதால் பாபிலோனியர் இவரை முதன்மை குடிமகனாகக் கருதினர். இவரும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் இவர் இறைவாக்கு உரைத்தார்.
 
முதல் வாசகம்

தீயோர்  தங்கள் பாவ வழிகளிலிருந்து உண்மையாக விலகி, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றி, நீதியைக் கடைப்பிடித்தால், அவர்கள் மன்னிக்கப்பட்டு வாழ்வு பெறுவர் என்றும்,   நல்லொழுக்கமுள்ள ஒருவர் அவர் வாழ்ந்த நேர்மையான பாதையிலிருந்து விலகி, தீய செயல்களில் ஈடுபட்டால், அவரும்  அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கிறார். 

தீயோரின் மரணத்தில் கடவுள் மகிழ்ச்சியடைவதில்லை, மாறாக அவர்கள் மனமாற்றம் அடைந்து தீமையிலிருந்து விலகிச் செல்லும்போது மகிழ்ச்சியடைகிறார் என்ற கருத்தையும் இங்கே எசேக்கியேல் முன்வைக்கிறார்.  தனிநபர்கள் அவரவர் தேர்வுக்கும் சொந்த விருப்பங்களுக்கும் பொறுப்பாளிகள் என்ற படிப்பினையையும்  அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.  
 

நற்செய்தி:


இன்றைய நற்செய்தியில்,  மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும் என்று இயேசு தம் சீடர்களுக்கு எச்சரிக்கிறார்.   விண்ணரசில் இணைவதற்கு  அவர்களுடைய வாழ்வானது  முன்னோர்களின் வாழ்வைவிட சிறந்திருக்க வேண்டும் என்று அவர் அவர்களுக்கு அறிவூட்டுகிறார்.  

இயேசு, பலிபீடத்திற்கு காணிக்கை கொண்டு வருவதைக் குறிப்பிடுவது வழிபாட்டின் செயலைக் குறிக்கிறது. மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இயேசு எடுத்துக்காட்டுகிறார், கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்குமுன்  பகைவர்களுடன்  சமாதானம் செய்ய வேண்டியது நிபந்தனையாக உள்ளதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்  

பின்னர் இயேசு மேற்கண்ட தம் படிப்பினையை  விளக்குவதற்கு உதாரணங்களைத் தருகிறார்.   அவர் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு,  நீதிமன்றங்களை  அடைவதற்கு முன்பே, தகராறுகளை விரைவாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.


சிந்தனைக்கு:


இயேசுவின் இன்றைய படிப்பினை நமக்குப் பெரும் சவாலாக அமைகிறது. கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவது ஒரு கடமை எனவும், காணிக்கை தந்து கடவுளை மயக்கிவிடலாம் என்று நினைப்போருக்கு இயேசுவின் இன்றைய படிப்பினை சவாலாக அமைகிறது. ஆம், ‘கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, கண்ணால்   காணக்கூடிய அடுத்திருப்பவரோடு நல்லிணக்கம் இல்லையென்றால் நாம் வெளிவேடர். நமது காணிக்கை ஏற்கப்படாது என்கிறார் ஆண்டவர்.  


நம்மில் பலர் அன்றாட வாழ்க்கை வேறு, வழிபாடு வேறு என்றே வாழ்கிறோம்.  இத்தகைய எண்ணத்தை இயேசு கண்டிக்கிறார். நமது வாழ்வும வழிபாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. யூதர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு மோசே அளித்த திருச்சட்டம் தான் வாழ்வும், உயிருமாக இருந்தது. அதே மனப்போக்கில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். தவக்காலம் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றிறால் போதும் என்றுள்ளோம். இவ்வாறு தவக்காலக் கடமையை நிறைவேற்றுவதில் மகழிச்சியடைகிறோம். 

சட்டத்தையும் விதிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதால் பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்துவிடும் என்றுதான் மனக்கோட்டை கட்டுகிறோம். அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10) எனகிறர் பவுல் அடிகள். ஆகவே, அடுத்திருப்பவரை அன்பு செய்வதில்தான்  சட்டத்தின் நிறைவு அடங்கியுள்ளது. 

ஆகவே, அடுத்திருப்பவரை பகைத்துக்கொண்டு, அல்லும் பகலும் மிகுதியான உடைமைகளுக்காகப் பாடுபடுவதில்  ஒருவருக்கு செல்வம் மட்டுமே சேரும். உறவும் வாழ்வும் பாழாகும் (லூக்கா 12:15). 

அடுத்து, திருப்பலிக்குச் சென்று வருவதால் நாம் புனிதம் பெறுகிறோம். இது மறுக்க முடியாத  உண்மை. ஆனால் அந்த புனிதம் நிலைப்பதில்லை. ஏனெனில், பிறரோடு நாம் கொண்டுள்ள பிணக்கம் இதற்குக் காரணமாகிறது. எனவேதான், பரிசேயர்களின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்ததாக இருக்கட்டும் என்கிறார் ஆண்டவர். 


‘கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்’ 

என்பது கவிஞர் கண்ணதாசன்  அவர்களின் சிந்தனைத்துளி. உண்மைதான், ஏழை எளியோர் மீது இரக்கம் காட்டாதவர் உள்ளம் கடவுளின் இல்லமாக ஒருபோதும் திகழாது.  கடவுளை வெளியே தேடித்தான அலைய வேண்டும். 

தவக்காலம் நோன்பின் காலம், அருளின் காலம், மனமாற்றத்தின் காலம் என்றெல்லாம் ஆண்டுதோறும் கூவிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை. அடுத்திருப்போரின் துன்பத்துயரங்களைக் கண்டும் காணாமல் ஒதுங்கிப்போகும் போது,  தவக்காலம் நமக்குத் துன்பக் காலமாக மாறும் என்பதை மனமார ஏற்க வேண்டும். 


இறைவேண்டல்.


கருணைக் கடலே இயேசுவே, நீர் வாழும் இல்லமாக எனது உள்ளம் ஒளிவீச, என்னில் மனமாற்றத்திற்குத் துணைபுரிவீராக. ஆமென்.


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452