நமது ஒன்றிப்பில் திருஅவை மிளர்கிறது | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5ஆம் வாரம் - வெள்ளி
முதல் அரசர் 11: 29-32; 12: 19             
மாற்கு  7: 31-37


நமது ஒன்றிப்பில் திருஅவை மிளர்கிறது.

முதல் வாசகம்.

பின்னணி

அரசர் சாலமோனின் ஆட்சியின் தொடக்கம் சிறப்பானதாக இருந்தாலும், முடிவு அவ்வாறு அமையவில்லை. வேற்று தெய்வ வழிபாட்டால் அவர் உள்ளம் தம் தந்தை  தாவீதின் உள்ளத்தைப்போல  கடவுளுக்குப் பணிந்திருக்கவில்லை. ஆண்டவருக்குத் தீயதெனப்பட்டதைத் துணிந்து செய்தார். அதிக வரிகளால் மக்களை வாட்டினார். இதன் காரணமாக மக்கள் சாலமோனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். 

சாலமோனுக்குப் பிறகு அவரது மகன் ரெகபெயாம் அரசரானார். பின்னர் தன்னோடு இருந்த இளைஞர்களின் ஆலோசனைகளை ஏற்று, தந்தை சாலமோனைப் போலவே நடந்துகொண்டதால், மக்கள் ரெகபெயாமை விரட்டிவிட்டு, எரொபவாம் என்பவரை அரசராக்கினர்.

யார் இந்த எரொபவாம்?

இவர் முதலில்,  சாலமோன் அரசரின்  பணியாளராக இருந்தவர். பின்னர், அவனுடைய திறமைகளைக் கண்ட சாலமோன்  அவருக்குப் பணியாளர்களைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தார். 
இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் அகியா இந்த எரொபவாம்  அரசரைச்  சந்திக்கிறார். அவர் சவுல், தாவீது மற்றும் சாலமோனின் காலத்தில் இருந்த 12 கோத்திரங்களில் யூதா மற்றும் பென்யமின் ஆகிய இரு கோத்திரங்களைத் தவிர்த்து, மற்ற பத்து கோத்திரங்களுடம் பிரிந்து   சென்று தனி அரசு ஒன்றை நிறுவப் பணிக்கிறார். 

‘இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்’ என்று கடவுள் கூறியதாக இறைவக்கினர் அகியா கூறுகிறார். இவ்வாறு இஸ்ரயேலர் சாலமோனுக்குப் பின் கி.மு. 931-ல், வடநாடு, தென்நாடு என இரண்டாகப் பிரிந்தது. வடநாடு இஸ்ராயேல் என்றும் தென்நாடு யூதேயா என்றும் அழைக்கப்பட்டன.


நற்செய்தி


நற்செய்தியில், நேற்று தீர் பகுதியில் ஒரு கானானிய புறவினத்துப் பெண்ணைச் சந்தித்து உரையாடிய இயேசு இன்று, தெக்கப்பொலி ("பத்து நகரங்கள்") என்று அழைக்கப்படும் புறவினத்தார் அதிகம் வசிக்கும் பகுதிக்கு தன் சீடர்களுடன் வருகிறார். யூதர்கள் மத்தியில் மட்டுமல்ல, புறவினத்தாரும் நற்செய்திக்கு உரியவர்கள் என்பதை இயேசு உணர்த்துகிறார்.

 இங்கே அவர் ஒரு காது கேளாதவரைச் சந்திக்கிறார். இயேசுவைப் பற்றியும் அவருடைய குணப்படுத்தும் வல்லமைப் பற்றியும் அப்பகுதி மக்கள்  கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  காது கேளாதவரை  இயேசு குணப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 

இயேசு கூடியிருந்த கூட்டத்திலிருந்து விலகி சென்று சிறு சடங்குப்பூர்வமாக அவரைக் குணப்படுத்துகிறார்.  காதில் விரல்களை வைப்பது; உமிழ்வது, அவனது நாக்கைத் தொடுவது, மற்றும் "எப்பத்தா - திறக்கப்படு" என்று கட்டளையிடுவது போன்றவற்றை  ஒன்றன்பின் ஒன்றாகச் செய்கிறார்.  குணமடைந்த பிறகு, அந்த வல்ல செயல்களைப் பற்றி வெளியே பேசக்கூடாது என்று இயேசு கட்டளையிடுகிறார், ஆனால் அவரது கட்டளை மீறப்பட்டு பலருக்கும்  உற்சாகமாக அறிவிக்கப்பட்டது.


சிந்தனைக்கு.


கடவுள் ஒரு இனமாக உருவாக்கி வளர்த்த மக்கள் கீழ்ப்படியாமையால் பிளவுப்பட்டார்கள். ஒரே தந்தையின் (யாக்கோப்பின்) மக்கள் சிதறுண்டு போயினர். பிளவுக்கு வழிவகுத்து,  அவர்கள் ஏற்படுத்திய அரசும் அன்னியர்களால் அழிக்கப்பட்டது. அரசர்களும் அழிந்து போனார்கள்.  பின்னர் ஆயனில்லா ஆடுகளானார்கள். அவர்களை மீண்டும் கூட்டிச் சேர்க்க கடவுள் மனுவுருவானார். மனுவுருவானவரையும் அவர்கள் ஏற்கவில்லை.  அவரைப் பிடித்துத் துன்புறுத்த வழி தேடினர். எனவே, அவரது கவனம் புறவித்தார் மேல் மையமிட்டது.  

’உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” (மாற்கு 4:25) என்று இயேசு கூறியபடி, நம்பிக்கையற்றவர்கள் மத்தியில் வல்ல செயல்களால் பயனில்லை என்றே, இயேசு எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கே இறையரசுக்கான செய்தியைக் கொண்டு செல்கிறார். இவ்வாறு நம்பிக்கைக்கொண்ட புறவினத்தார் பயனடைந்தனர். இவர்களுக்கானப் பணியை இயேசு பவுல் அடிகள் மூலம் மேலும் தொடர்ந்தார்.  இன்று நம் மத்தியிலும் தமது திருவுடலாகிய திருஅவையின் வழி தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

இதில் வியப்பு என்னவெனில், திருஅவைக்கும் கீழ்ப்படியாதோர், அதனை பிளவுப்படுத்துகிறார்கள். வடநாடு முற்றிலும் அழிந்ததைப்போல், பிரிவினைக்கு வித்திடுவோருக்கும் ஒரு முடிவு வரும் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக அறிவுறுத்தப்படுகிறோம். இயேசுவின் திருவுடலான திருஅவையில் நம்பிக்கை அற்றவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படலாம். எனவே, திருஅவையில், நமது நம்பிக்கை வாழ்வில் கவனம் செலுத்துவோம். 

திருஅவை அதன் பிறப்பால் புனிதமானது. ஆனாலும், நமது பலவீனங்களால் அதிலும் குறைகள் உள்ளதை மனதார ஏற்று, ஒன்றித்திருக்க முற்படுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் நமது குறிக்கோள். பிரிந்துபோவோர் ஒருபோதும் இயேசுவின் சீடர்களாகத் திகழ முடியாது. ஏனெனில், அவர் பல திருஅவைகளை அல்ல, ஒரே திருஅவையைத்தானே தோற்றுவித்தார். அவரே அதற்குத் தலையாகவும் உள்ளார். 


இறைவேண்டல்.


‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ என்று எங்களுக்காக மன்றாடும் அன்பு இயேசுவே, உம் திருவுடலில் என்றும் நான் பயனுள்ள உறுப்பாக இணைந்திருக்க அருள்புரிவீராக. ஆமென்


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Rosary James (not verified), Feb 09 2024 - 10:00am
Amen 🙏 🙏 🙏