அவர் வழியில் நடப்போருக்கு வெகுமதி உண்டு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் 2-ம் வாரம் -வெள்ளி
எசாயா: 48: 17-19
மத்தேயு   11: 16-19


அவர் வழியில் நடப்போருக்கு வெகுமதி உண்டு!


முதல் வாசகம்


நாம்   திருவருகைக் கால பயணத்தைத் தொடரும் இக்காலக்கட்டத்தில்,  ஆண்டவராகிய  இயேசுவைப் பின்பற்றுபவர்கள் செழிப்பான வாழ்வுக்கு இட்டுச் செல்லப்படுவார்கள்  என்ற நம்பிக்கை விதைக்கப்படுகிறது.  கடவுள், ஏசாயாவின்  மூலம், அவர் வழியில் நடக்கத் தயாராக இருப்பவர்களுக்கு நல்ல வெகுமதியும் ஆசீர்வாதமும் அளிப்பதாக வாக்களிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில்,   ஆண்டவரைத்  தேடுபவர்களுக்குக் கடவுள் ஆசீ வழங்குவதாக வாக்களிக்கிறார்.  ஆண்டவர்  மீட்பராக வரும்போது     நீதிமான்களுக்கு அவர்களின் நற்பணியை முன்னிட்டு வெகுமதிகள் வழங்கப்படும் என்று எசாயா முன்னுரைக்கிறார். இதனால், வெகுமதி பெறுவதற்காக அவர்கள் நல்லதை மட்டுமே செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை, மாறாக,  அவர்கள் கடவுள் விரும்புவதை நிறைவேற்றுவதால் வெகுமதிக்குத் தகுதிப்பெறுகிறார்கள் என்பதாகும்.
ஆண்டவராகிய கடவுளுக்கு இஸ்ரயேல் மக்கள் செவிசாய்க்கும்போது அவர்களுக்குப் பின்வரும் மூன்று நன்மைகள் கிட்டும் என்று உறுதியளிக்கிறார் எசாயா. 
1.  அவர்கள் செழிப்புற்று வாழ்வார்கள்.  
2. அவர்கள் எதிரிகளை எளிதில் வெற்றிக்கொள்வார்கள். 
3. அவர்களுடைய தலைமுறை  பலுகிப் பெருகும்.
இவ்வாறாக, ஆண்டவரின் திருவுளத்தை அறிந்து  அவற்றை நிறைவேற்றுபவர்கள் கைமாறு பெறுவர் என்ற உறுதிபாட்டை எடுத்துரைக்கிறார்  எசாயா.


நற்செய்தி

நற்செய்தியில், இயேசு,   தெருவில் விளையாடும் குழந்தைகளை  உருவகமாகக் காட்டி, அடிக்கடி விளையாட்டுக்கான விதிகளை அவர்கள் மாற்றிக்கொள்வது போல்,  இஸ்ரயேலர்  தங்கள் தெய்வங்கைள மாற்றிக்கொண்டு பிரமாணிக்கமற்ற வாழ்வு வாழ்கிறர்கள் என்றும், அவர்கள்  கடவுள் வழி மறந்து, இன்பம் தருவனவற்றையே  நாடுகிறார்கள் என்கிறார்.  

இதற்கு எடுத்துக்காட்டாக,  திருமுழுக்கு யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. யூதர்கள் ‘அவன் பேய்பிடித்தவன்’ என்றார்கள் என்றும்,  மானிட மகனான இயேசு வந்தபோது, அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள்  என்றும் வேதனையுறுகிறார்


சிந்தனைக்கு


யூதர்கள் திருமுழுக்கு யோவான் மீதும், இயேசுவின் மீதும் கொண்டுள்ள புரிதலை இயேசு இன்று விவரிக்கிறார். திருமுழுக்கு யோவான்,  மிகவும் கண்டிப்பானவர் என்றும் அவர் தம் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை  என்றும்   அவரைப் பற்றி குறைகூறி வந்தனர் ஒரு தரப்பினர்.  


அவ்வாறே இயேசுவும்  பாவிகளோடு  விருந்துகளில் எப்பொழுதும் உண்பதால் அவர்  கண்டிப்பானவர் அல்ல என்றும், அவர்  பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்றும்  மக்கள் அவர்மீது கொண்டுள்ள அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினர் மற்றொரு பிரிவினர். இயேசுவின் மனிதநேயம்  இவர்களுக்கு இடறலாக இருந்தது.   

ஒருவரைப் பற்றிய நமது அபிப்பிராயம் நமக்குச் சரியாக இருக்கக்கூடும். ஆனால், அதில் உண்மை இல்லாமலும் இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் ஒருதலைபட்சமாக  நாம் தீர்ப்புக்கூறுகிறோம். இத்தைகைய  நமது மனப்போக்கில்   மாற்றம் தேவை. இதனால் பலரின் மனதைப் புண்படுத்துகிறோம் என்பது உண்மையே. 

இஸ்ரயேல் மக்களிடம் உண்மையை  எதிர்ப்பார்த்துதான் கடவுள் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால், அவர்கள் வாக்குறுதிக்கு ஏற்ப வாழவில்லை. அவ்வாறே,    நம்முடைய வாழ்விலும் இறைவன் நமக்கு பல வாய்ப்புக்களையும் வாக்குறுதிகளையும் வழங்குகிறார். அவருடைய குரலுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று நம்மை அழைக்கிறார்.  நம்மில் பெருப்பாலோர்  கடவுளின் எதிர்ப்பார்பைக் கண்டுகொள்வதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, அவரவர் சொந்த மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வழி தறுகிறோம். 
 
நம்மில் நிலவும் இந்த மெத்தனப் போக்கு களையப்பட வேண்டும். ஆண்டவரை ஆலயத்தில்  மட்டும் கண்டு வழிபடுவதில் பயனில்லை.  துன்புறம் மானுடத்திலும் தெருவிலும்  அவரை அடையாளம் காணும் சமூகமாக கிறிஸ்தவம் மாற வேண்டும். ‘யாவே கடவுளை வாயால் அறிக்கையிட்டு, வாழ்வால்  அவரைப் புறக்கணித்தவர்கள்தான் இஸ்ரயேலர். எனவே, அன்னியரிடம்  துன்புற்றார்கள். நமக்கும் நம் குடும்பத்திற்கும் இந்நிலை ஏற்படக்கூடும். 

இயேசுவின் சீடனாக இருப்பதற்கு முதலில் துணிவு வேண்டும். முழுமையான அர்ப்பணம் கொண்டிருக்க வேண்டும். இவற்றோடு தீர்க்கமாக அவரது படிப்பினையைப் பின்பற்றும் ஆர்வமும் விடாமுயற்சியும் வேண்டும். இயேசுவின் சீடத்துவம் தனித்துவமனது என்பதை இந்த திருவருக்கைக் காலத்தில் நினைவுகூர்வோம். முதல் வாசகத்ததில், எசாயா கூறுவதைப்போல ஆண்டவரைத்  தேடுபவர்களுக்குக் கடவுள் ஆசீ வழங்குவார், நீதிமான்களுக்கு அவர்களின் நற்பணியை முன்னிட்டு வெகுமதிகள் வழங்வார்.  

எனவே, இயேசுவை ஆண்டவராக மட்டுமே பார்த்து பழகிவிட்ட நாம், அவரது அழைப்புக்கேற்ப  சீடத்துவப்பணி வாழ்வில் முன்னோக்கிச் செல்வோம். திருவருகைக்காலம் நான்கு மெழுகுத்திரிகளை ஏற்றுவதோடு முடிவதில்லை. 

இறைவேண்டல்.


ஞானத்தின் ஊற்றாகிய அன்பு இயேசுவே, எனது  செயல்களால்  உமது ஞானத்தை வெளிப்படுத்துவனவாக நான் வாழ அருள்புரிவீராக. ஆமென்..


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452