நற்கருணை விருந்தே விண்ணக விருந்தின் முன்சுவை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் முதல் வாரம் -புதன்
எசாயா 25: 6-10a
மத்தேயு 15: 29-37


நற்கருணை விருந்தே விண்ணக விருந்தின் முன்சுவை!

முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், எசாயா கடவுள் வெளிப்படுத்திய இறுதிகால செய்தியைப் பகிர்கிறார். இறுதியில் கடவுளின் படையினர் உலகில் நிலவும் அனைத்து தீய சக்திகளையும் அழித்துவிடுவார் என்றும், இனி சாவு இருக்காது என்றும் தெளிவுப்படுத்துகிறார். இந்த வெற்றியின் நிமித்தம் கடவுள் தம் மக்களுக்கு விண்ணக விருந்தொன்றை படைப்பார் என்கிறார் எசாயா. அந்த விருந்தில் கடவுளின் உணவு அனைருக்கும் வழங்கப்படும் என்று கூறுகிறார். அவற்றில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் அடங்கும்.

இந்த வெற்றிக்குக் கதாநாயகராக விளங்குபவர் மீடபராகிய இயேசு என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. அவரே, எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார் என்றும், இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” என்ற வாக்குறுதியையும் எசாயா வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் முன்னறிவிக்கிறார்.


நற்செய்தி


நற்செய்தியில்,  இயேசு அவரிடத்தில் கொண்டுவரப்பட்ட எல்லா மக்களின் தேவைகளையும் பார்த்து, திரளான மக்களுக்கு உணவளிப்பதன் மூலம் அவர் கடவுளின் இரக்கத்தை  வெளிப்படுத்தியதை மத்தேயு வெளிப்படுத்துகிறார். 

தமது மறைபோதகத்தைக் கேட்கக் கூடி வந்த மக்கள்,  மூன்று நாள்களாக அவரது பாதம் அமர்ந்து போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த  திரளானோரின் வயிற்றுப் பசியைத்  தீர்க்க முனைகிறார் இயேசு. அவரது எண்ணமும் செயலும் சீடர்களுக்கு வியப்பாக இருந்தது.  “இவ்வளவு   மக்களுக்கு உணவளிக்கப்  போதுமான உணவு இந்த பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்ற கேள்வி சீடர்களின் சிந்தனையைத் தாக்கியது.    

அங்கு  சீடர்கள் கண்ணில் பட்டது, “ஏழு அப்பங்களும் சில மீன்களும்தான். அவற்றைப் பெற்றுக்கொண்ட இயேசு,  தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.


நாம் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த திருவருகைக்கால வெளிச்சத்தில் மேற்கண்ட வாசகங்களையொட்டி சிந்திக்கையில், இயேசுவின் பணியின் மூலம், கடவுளின் ஆட்சி மண்ணகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது என்பது புலனாகிறது. முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறியதைப்போல், மெசியாவின் வருகையின்போது,  கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர்கள் ஆகியோர் உட்பட அனைவரும் கடவுளின் இரக்கத்தைப் பெறுவர் என்ற  செய்தி இயேசுவில் நிறைவேறுகிறது.  இறையாட்சின் பலனை அவர் வழியாக  அனைவரும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் மக்களினங்கள் அனைவருக்கும் பெரிய விருந்தொன்றை ஏற்பாடு செய்வதாகக் கூறுகின்றார். இயேசு, மக்களினங்கள் அனைவருக்கும் உணவளித்தன்மூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்.

எளிய மக்கள் இயேசுவோடு மூன்று நாள்களாக உணவு இல்லாமல் இருந்ததை எண்ணிப் பார்த்தால் நம்ப முடியவில்லை.  அவர்கள் முன்னிலையில் நோயுற்றவர்களை அவர் போதித்து, தொடர்ந்து குணமாக்கும்போது அவர்கள் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.    அவர்களைத் துன்புறுத்தும்  வெளிப்படையான வயிற்றுப்  பசி இருந்தபோதிலும், அவர்கள் அவரை விட்டு வெளியேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணப்படவில்லை. நம் வாழ்க்கையில் ஆன்மீகப் பசிக்கு அல்ல வயிற்றுப் பசிக்கே முந்திக்கொள்ளும் நமக்கு  இது ஓர்அற்புதமான பாடம். 

இந்த முதல் சீடர்கள், இயேசுவைக் கண்டுபடித்தார்கள். எனவே, அவரை விட்டு விலக மனமில்லாதவர்களாக அனைத்தையும் மறந்து அவரோடு ஒன்றித்துக் கொண்டார்கள்.  உலகம் துறந்த இயேசுவோடான இதே ஒன்றிப்பைதான், நாம் ஒருநாள் அவரோடு விண்ணகத்தில் விருந்துண்டு கொண்டாடவுள்ளோம். அதன் முன்சுவையாக உள்ளதுதான் நமது நற்கருணை கொண்டாட்டம். நற்கருணை (திருப்பலி) கொண்டாட்டத்தில் நாம் ஆண்டவரோடும் அவரது மக்களோடும் ஒன்றிக்கும் போது, அதே ஒன்றிப்பை இறப்பிற்குப் பின்னும் தொடர்வோம். 

இறைவேண்டல்.

எங்களை விண்ணக வாழ்வுக்கு மீட்க வந்த ஆண்டவரே, எனது ஊனங்களையும் குணப்படுத்தி, உமது விண்ணக விருந்தில் நானும் பங்குபெற வரமருள்வீராக. ஆமென். 

  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452