புனித சவேரியாரை ஆட்கொண்ட ஆண்டவரே, நம்மையும் ஆட்கொண்டுள்ளார்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் முதல் வாரம் -செவ்வாய்
புனித பிரான்சிஸ் சவேரியார் விழா (மறைப்பணியாளர்)
எசாயா 61:1-3
1 கொரி 9: 16-19, 22-23
மாற்கு 10: 21-24
புனித சவேரியாரை ஆட்கொண்ட ஆண்டவரே, நம்மையும் ஆட்கொண்டுள்ளார்!
முதல் வாசகம்
முதல் வாசகத்தில் எசாயா வழி ஆண்டவர் கூறிய வார்த்தைகளை வாசித்தோம். இதே வாசகப் பகுதியை இயேசுவும் அவர் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்த போது, தொழுகைக்கூடத்தில் வாசித்தார் என்று லூக்கா குறிப்பிட்டுள்ளார் (லூக்கா 4:16-20). வாசித்து முடித்ததும், ‘அவர் “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று”
என்றார்.
ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்ட சிறப்புப் பணியாளர்களை வெறுமனே விட்டுவிடுவதில்லை. அவர்களுக்கு தம் ஆவியைப் பொழிந்து அருள்பொழிவு செய்கிறார். இதனால், அவர்கள் பணி காலத்தில் பொதுநலம் பூண்டு, நீதி நேர்மையோடு, தியாகங்கள் செய்து ஏற்ற பணியை இறுதிவரைசெய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள்.
அடுத்து, அவர்களது முக்கியப் பணி ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தலும், சிறைப்பட்டிருப்போர் டோர் விடுதலை அடையவும்,
பார்வையற்றோர் பார்வைபெறவும் அயராது பாடுபட வேண்டும் போன்றதாகும்.
இரண்டாம் வாசகம்.
இவ்வாகத்தில், பவுல் அடிகளின் உளமார்ந்த உண்மை செய்தியைக் கேட்கிறோம். ஒரு நிருத்தூதர் எனும் வகையில், ‘நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு’ என்கிறார்.
ஆம். நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதனால் ஆண்டவரிடமிருந்து நிச்சயம் நல்ல கைமாறு கிட்டும் என்பதையும் பவுல் உறுதியாகத் தெளிவுப்படுத்துகிறார். ஏற்றுக்கொண்ட பணியை இடையில் உதறித் தள்ளிவிட்டு, சுக வாழ்வைத் தேடி உகத்தின் பின்னே ஓடுவோருக்கு சாபம் தான் கைமாறு என்கிறார். அவர் இறுதிவரை யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அவரையே எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டதாக உண்மை உரைக்கிறார்.
நற்செய்தி.
மாற்கு நற்செய்தியாளர், திருஅவைக்கான இறுதி கட்டளையைப் பிறப்பித்ததை குறிப்பிடுகிறார். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று இயேசு விவரித்ததை நினைவூட்டுகிறார். .
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கையில், இயேசு அவரது இவ்வுலக வாழ்வின் போது அவர் தொடங்ககிய இறையாட்சியின் தொடக்கத்திற்கும், இயேசு மீண்டும் வரும்போது வரவிருக்கும் ஆட்சியின் இறுதி நாட்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் வாழ்கிறோம் என்பதை உணர்கிறேன்.
இக்காலத்தில் இயேசு விதைத்த இறையாட்சியின் நிறைவை எதிர்நோக்கிப் பயணிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவுக்கு முன் வாழ்ந்தவர்களை விட நாம் பாக்கியவான்கள், ஏனென்றால் ஆட்சி வளர்ச்சியடைந்து அதன் முழுமையை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.
எனவே, நம்மில் விதைக்கப்பட்ட கடவுளின் அரசு, பிறரது வாழ்வில் துளிர்விட நாம் என்ன முயற்சி செய்கிறோம்? என்ற கேள்வி நம்மில் இன்று எழுப்புவோம். இல்லையேல் திருவருகைக் காலத்தின் இந்த நான்கு வாரங்களும் நமக்கு எவ்வாகையிலும் பலனளிக்காது.
இன்று அன்னையாம் திருஅவை மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலரான புனித சவேரியாரின் விழாவைக் கொண்டாடுகிறது. இவர் இயேசுவின் கட்டளையை ஏற்று நற்செய்திக்காக தாயகம் விட்டு பல இன்னல்களுக்கிடையில் வெளியேறினார். புனித சவேரியார் ஸ்பெயின் நாட்டில் 1506 ஆம் ஆண்டு, ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர். இவருடைய தந்தை மூன்றாம் ஜான் என்ற மன்னனின் அரசபையில் ஆளுநராக இருந்தார் என்பது வரலாறு. இவரது தந்தை காலமான பிறகு, மேல் படிப்புக்கு பாரிசில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இணைந்தார். அப்போது. புனித இஞ்ஞாசியார் போன்று மிகப் பெரிய பேராசிரியராக மாறவேண்டும் என்ற இலட்சியம் ஏற்றார். இஞ்ஞாசியார் முலம் “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் வரும் பயனென்ன?” (மத் 16:26) எனும் இறைவாக்கால் பெரிதும் கவரப்பட்டார்.
1537 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் குருப்பட்டம் பெற்ற சவேரியார், உரோமை நகரில் இருந்து, கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்திப் பணிக்காக 1542 ஆம் ஆண்டு இந்தியாவின கோவாவிற்கு கப்பல் வழியாக வந்து சேர்ந்தார். சவேரியார் இந்தியாவின் கடற்கரை பகுதியில் நற்செய்தி அறிவித்துவிட்டு மலாக்கா, சீனா மற்றும் ஜப்பானிலும் நற்செய்திப் பணியாற்ற புறப்பட்டார்.
ஜப்பானில் நற்செய்தி அறிவித்தபோது மக்களிடமிருந்து ஒரு சில பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் அவர் அங்கிருந்து சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்போது சான்சியன் என்ற தீவிலே கொடிய காய்ச்சல் தாக்க சவேரியார் தன்னுடைய 46 வது அகவையில் காலமானார் என்பது வரலாற்று உண்மை.
அங்கு அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி கோவாவிற்கு கொண்டுவர முயன்றனர். அப்போது அவரது உடல் அழுகாமல் இருப்பதைக் கண்டு, ஆச்சரியம் மேலிட, பின்னர் மலாக்கவில் அடக்கம் செய்து, தொடர்ந்து அங்கிருத்து கோவாவிற்குக் கொண்டு சென்றனர். அவரது உடல் இன்னமும் அழியா நிலையில் உள்ளது.
நாம் அனைவரும் நற்செய்தியில் அறிவிப்புப் பணியில் ஈடுபட (மத்தேயு 28:19) கடமைப்பெற்றுள்ளோம். இப்பணிக்கு கடல் கடந்து தொலை தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நம் குடும்பங்கள், நம் குழந்தைகள், நம் கணவன் அல்லது மனைவி, நம் உடன் பணிபுரிபவர்களுக்கு நல்ல கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வு வாழந்தாலே போதும்.
நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதனால் ஆண்டவரிடமிருந்து நிச்சயம் நல்ல கைமாறு கிட்டும் என்பதையும் பவுல் உறுதியாகத் தெளிவுப்படுத்தியதை இரண்டம் வாசகத்தில் கேட்டோம், இதற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் புனித பிரான்சிஸ் சவேரிய்யார். அவரது உடல் இன்றும் அழியாமல் உள்ளதை நாம் காண்கிறோம்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, , உமது ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்து நான் உமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்து விளங்க அருள்தாரும். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452