ஆண்டவர் உயிர்த்தார்- நானும் ஒரு சான்று | ஆர்.கே. சாமி | VeritasTamil
1 April 2024
பாஸ்கா எண்கிழமை - திங்கள்
தி. பணிகள் 2: 14, 22-33
மத்தேயு 28: 8-15
முதல் வாசகம் :
இன்று தொடங்கி, பாஸ்கா காலத்தின் ஏழு வாரங்களில் இடம்பெறும் முதல் வாசகமானது, திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். தொடக்கக் காலத்து திருத்தூதர்களும் சீடர்களும் உயிர்த்தெழுந்த ஆண்டவரோடான அனுபவங்களை எவ்வாறு வாழ்ந்தும், இயேசு விண்ணேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த அனுபவங்களை மக்களுக்கு எவ்வாறு அறிவித்தாதோடு, சாட்சியம் பகர்ந்தார்கள் என்பதையும் நாம் கேட்கவுள்ளோம்.
இன்றைய முதல் வாசகம், புனித பேதுருவும் மற்ற திருத்தூதர்களும் சீடர்களும் பெந்தெகொஸ்தே நாளில் தூய ஆவியாரைப் பெற்ற பிறகு, பேதுரு ஆற்றிய முதல் பேருரையைக் கொண்டுள்ளது. இதில், கடந்த காலங்களில் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை பேதுரு துணிவுடன் மக்கள் மத்தியில் அறிவிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் சொன்னபடி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். பேதுருவும் மற்ற திருத்தூதர்களும் உயிர்த்தெழுந்த ஆண்டவரகிய இயேசுவுக்கு சாட்சிகள் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.
நற்செய்தி :
இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குச் சென்ற பெண்கள், கல்லறை திறக்கப்படிருப்பதைக் கண்டு, ஆரம்பத்தில் பயந்தார்கள். ஆனால் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இயேசுவின் சீடர்களிடம் தாங்கள் கண்டதைக் குறித்துச் சொல்ல விரைந்தார்கள். அவர்கள் செல்லும் வழியில், அவர்களை இயேசு இடைமறித்து, அஞ்ச வேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியளித்து, வாழ்த்தினார். அத்துடன் அவர்களை நோக்கி, ‘என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்று அறிவிக்கப் பணித்தார்.
இதற்கிடையில், கல்லறையில் நிறுத்தப்பட்டிருந்த சில காவலர்கள் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களிடம் கூறவே, தலைமைக் குருக்கள் மற்றொரு பொய் நாடகத்தை மக்கள் மத்தியில் அரங்கேற்ற முனைந்தனர். காவலர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இயேசுவின் உடலை, அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டார்கள் என்று பொய்யுரைக்குமாறு காவலர்களுக்குக் கட்டளையிட்டனர். அதற்கு அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் யூதச் சமயத் தலைவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலின் உண்மையை மறைக்க விரும்பினர்.
சிந்தனைக்கு :
சதி செய்து இயேசுவைக் கொன்றக் களவாளிக் கூட்டம், அத்தோடு நின்றுவிடவில்லை. அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலைச் சீடர்கள் திருடிச் சென்றதாக மற்மொரு நாடகத்தை அரங்கேற்ற விழைந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு கல்லறைக் கல்லைப் புரட்டியது மட்டுமல்ல, காவலையும் தாண்டிக் கடந்து சென்றது. காவலாலும் கல்லாலும் இயேசுவை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை. சொன்னபடி அவர் உயிர்த்தெழுதார். நற்செய்தி வாசகத்தில், கல்லறையைக் காணவந்த பெண்கள், கல்லறை வெறுமையாய் இருப்பதைக் கண்டு, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டு அச்செய்தியை சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார்கள்.
இயேசு அவர்கைள இடைமறிக்கிறார். அந்தப் பெண் சீடர்களிடத்தில் “அஞ்சாதீர்கள்” என்று சொல்வதன் வழியாக தாம் சொன்னதுபோன்றே அவர் உயிர்த்துவிட்டார் என்பதை நிரூபிக்கிறார். அந்த பெண் சீடர்கள் இயேசுவின் உடலுக்கு என்னவாயிற்றோ என்று அச்சமுற்றிருக்கலாம். இயேசு அந்த அச்சத்தைக் களைந்து நம்பிக்கையூட்டுகிறார். குழப்பத்தில் நாம் எதையும் நம்பமாட்டோம். எனவே, அச்சீடர்களைத் தெளிவுப்படுத்துகிறார்.
நிறைவாக, என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றொரு பணியைக் கொடுத்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார்.
இயேசு இங்கே ‘என் சகோதரர்களிடம் சென்று' என்பதைக் கவனிக்க வேண்டும். இயேசு தம் திருத்தூதர்களையே ‘சகோதரர்கள்' என்கிறார். ஆகவே, பிரிந்த சகோதரர்கள் விவிலியத்தில் ‘இயேசுவின் சகோதரர்கள் என்பதை மரியாவின் மற்ற பிள்ளைகள் என்பதை மறுக்க நம்மால் முடியும். ‘இயேசுவின் சகோதரர்கள் என்பதை மரியாவின் மற்ற பிள்ளைகள் என்பது மற்றொரு கட்டுக்கதை. இன்று ‘மரியாவின் மற்ற பிள்ளைகள்’ என்பது ஒரு கட்டுக்கதை என்பதை இயேசுவே தெளிவுப்படுத்துகிறார்.
இயேசுவின் உயிர்ப்புக்கு நாம் ஒவ்வொருவரும் சான்று பகரவேண்டும். பெயரளவில் கிறிஸ்தவர்களாக அல்லது கிறிஸ்துவுக்கு உரியவர்களாக வாழ்வதில் பொருளில்லை.. அஞ்சாதீர் என்று இன்று ஆண்டவர் நம்மைத் திடப்படுத்துகிறார். உயிருக்கு அஞ்சிய பேதுரு தூய ஆவியாரைப் பெற்றபின் துணிந்தார்.
கல்லறைக்குச் சென்ற பெண்கள் இயேசவைக் கண்டதும் ‘அவரது காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்’ (28:9) என்று மத்தேயு குறிப்பிடுக்கிறார். ஆகவே, உயிர்த்த இயேசு வெறும் ஆவி அல்ல என்பதும் புலனாகிறது. உடலில் இறந்தவர் உடலோடு உயிர்த்தார் என்பதுற்கு இன்று நாம்தான் சாட்சிகள்.
மேலும், உயிர்ப்பு இல்லையென்றால் சிலுவைக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமலிருந்திருக்கும். ‘கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1 கொரி 15:14) என்று அக்காலத்திலேயே புனித பவுல் அறிவித்தார். இன்று நம் திருஅவை உயிர் வாழ்கின்றதென்றால், அதற்கு இயேசுவின் உயிர்ப்பே மூலகாரணம் என்பதை மனதில் கொள்வோம்.
ஆகவே, ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்பது வந்துபோகும் ஒரு கொண்டாட்டம் அல்ல. மாறாக, ஒவ்வொரு உயிர்ப்பு பெருவிழாவும் நம்மிலும் நமது மனிதநேய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்பு.
இறைவேண்டல்
மரணத்தை வென்ற இயேசுவே, உமது உயிர்ப்புக்குச் சான்று பகரும் வாழ்வை நான் அனுதினமும் வாழந்திட என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452