இறையாட்சியை நம்முள் உணர்வோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு| Daily Reflection

பொதுக்காலம்,32 வாரம் வியாழன்
I: சாஞா:7: 22 - 8: 1
II: திபா 119: 89,90. 91,130. 135,175
III: லூக்:  17: 20-25

இறையாட்சி அல்லது விண்ணரசு என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டு ஒத்தமைவு நற்செய்தி நூல்களில் எண்பது தடவை வருகின்றது. "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது.  மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்ற அறைகூவலோடு இயேசு தன் பணியைத் தொடங்கியதை மாற்கு 1:15 ல் நாம் வாசிக்கின்றோம்.


"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது "என மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். இன்னும் இயேசு தன் போதனைகளில் விண்ணரசை கடுகுவிதை,புளிப்புமாவு, வலை, புதையல், முத்து போன்ற பலவற்றுடன் ஒப்பிட்டு உவமைகள் வழியாகப் போதித்தார் . இவ்வாறாக இயேசுவின் வாழ்வும் போதனையும் இறையரசை மண்ணில் விதைக்கும் வண்ணமே அமைந்திருந்தன.  அவருடைய புதுமைகள் கூட இறையாட்சி நெருங்கி வருவதற்கான அடையாளங்களாகவே கருதப்பட்டன.

அவ்வாறெனில் இந்த இறையாட்சியைப் பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு வேண்டும். இறையாட்சி என்பது இறைவனின் ஆட்சி. இவ்வுலக ஆளுமை  போன்று அல்லாமல் கிறிஸ்துவை தலைமையாகக் கொண்டு தந்தைக் கடவுளால் எழுப்பப்படும் ஆட்சி. இவ்வாட்சியில் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அமைதி என நல்லவை மட்டுமே தழைத்தோங்கும்.  இது முற்றிலுமாக கடவுளின் கொடையே. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சி எங்கே உள்ளது எனக் கேட்டவர்களுக்கு "இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்று இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகள் நமக்கு ஆழமான வாழ்வியல் பாடத்தை கற்றுக்கொடுக்கின்றன. 

ஆம். அன்புக்குரியவர்களே இறைவனை நம்மில் ஆழமாக உணர்வதே இறையாட்சி நமக்குள் இருப்பதற்கான முதல் அறிகுறி. தந்தை கடவுளை நாம் உணரும் போதெல்லாம் நாம் அன்பாலும் நேர்மையாலும் சமத்துவ சகோதரத்துவ சமாதான எண்ணங்களாலும் நிரப்பப்படுகிறோம். அதற்கேற்ற செயல்களைச் செய்யத் தூண்டப்படுகிறோம். இன்னும் தெளிவாகச் சொன்னால் கடவுளை ஒருவர் மற்றவரிடம் பிரதிபலித்து வாழ்வதுதான் இறையாட்சி. இயேசு இறைவனின் திட்டத்தை முழுமையாக ஏற்று தேவையிலும் வருத்தத்திலும் உள்ளோர்க்கு அருகிருந்து பாவிகளை மன்னித்து பிறருக்காய் தன்னை ஈந்து இறையாட்சியை அமைப்பதற்கான வழிமுறையை நமக்குக் கற்றுத்தந்துள்ளார். அவரை நாம் பின்பற்றி வாழ்ந்து இறையாட்சியை நம்முள் உருவாக்க முயற்சிப்போம்.

இறைவேண்டல்
இறைவா எங்கள் அரசரே! உம்மைப் போல உருமாறி உமது ஆட்சியை எம்முள் உணரவும் ,எமது சொல்லாலும் செயலாலும் இறையாட்சியின் அடையாளங்களாய்த் திகழவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்