உன்னைப் போல் பிறரையும் அன்பு செய்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

நற்செய்தி வாசகம்
மு.வா: தோபி: 3: 1-11, 16-17
ப.பா: திபா: 128: 1-2. 3. 4-5
ந.வா:மாற்: 12: 28-34

 உன்னைப் போல் பிறரையும் அன்பு செய்! 

இன்று முதன்மையான கட்டளைகளைப் பற்றிய விளக்கத்தை நம் ஆண்டவர் இயேசு நற்செய்தியில் விளக்குகிறார்.  அதிலே இரண்டாவதாக அவர் கூறுவது என்ன? " உன் மீது நீ அன்பு கூறுவதுபோல் உனக்கு அடுத்திருப்போரையும் அன்பு கூறுவாயாக என்பதே. இங்கு நம்மில் எத்தனை பேர் நம்மை நாமே அன்புசெய்கிறோம்? பல நேரங்களில் நம்மீது நாம் அன்பு காட்டுவதில்லை.

நம்மீது நாம் அன்பு கொண்டிருந்தால் நோய்கள் பெருகியிருக்காது. உறவுகள் குறுகியிருக்காது. அறிவும் அனுபவமும் குன்றியிருக்காது. ஏழ்மை இருக்காது. தற்கொலைகள் இருக்காது. உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பாங்கு இருக்காது.

மாறாக  நேர்மறையாகக் கூறினால் நம்மை நாம் அன்பு செய்தோமேயானால் நம்மைப் பற்றிய நல்ல எண்ணம் இருக்கும். உயர்வடைய கனவுகள் இருக்கும். வாழ்வில் நிறைவு இருக்கும். மகிழ்ச்சி இருக்கும். மனதிலே நன்றி உணர்வு இருக்கும். இவை அனைத்தும் நம்மோடு நின்று விடாது பிறரையும் போய்ச் சேரும். எனில் நம்மை நாம் அன்பு செய்யத் தவறுகிறோம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். ஒரு மருத்துவர் நோயாளிக்கு ஊசி போடும் போது "கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க " என அன்பான குரலில் சொல்லிவிட்டு பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்போது அந்நோயாளிக்கு ஊசி போட்டுக்கொண்டதே தெரியவில்லை. நீங்கள் போகலாம் என்று சொன்ன மருத்துவரிடம் "ஊசி போட்டீங்களா.  தெரியவே இல்லையே " என நோயாளி கூறினார். 
இச்சிறு நிகழ்வில் நாம் அறிவது என்ன? ஊசி போடுவதால் வலி உண்டாகும்.  அது நம் அனைவருக்கும் தெரியும். அது போலத்தான் அந்த மருத்துவருக்கும் அது தெரியும். தான் போட்டுக்கொண்டாலும் அந்த வலிதானே என எண்ணிய அவர் தன்னிடம் வந்த அந்த நோயாளி அவ்வலியை உணரக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்தார் அல்லவா. இது மிகச் சாதாரணமான நிகழ்வுதான்.  ஆனாலும் தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி என்பதை எளிதாய் நாம் புரிந்து கொள்ள நமக்கு இந்நிகழ்வு உதவுகிறது.

நமக்கெல்லாம் சுய அன்பு அவசியம். நம்மையே நாம் கடவுளின் பிள்ளையாக உணர வேண்டும். நம் உடலைப் பேண வேண்டும். அறிவைப் பெருக்க வேண்டும். தவறுகளைத் திருத்த வேண்டும். விபத்துக்கள் ஆபத்துகளிலிருந்து கவனமாய் காத்துக்கொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உடல், உள்ள, ஆன்ம நலனைப் பேண வேண்டும். இதெல்லாம் சுய அன்பாக மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறருக்கும் இவை அனைத்தும் குறைவுபடும் போது அவற்றை நம்மால் செய்ய இயலும். இதுதான் தன்னைப் போல பிறரை நேசிப்பதற்கு சமம். இந்த சுய அன்பு சுய நலமாக மாறும் போது நாம் அன்பு கட்டளையை மீறுகிறோம்.

நாம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டவர்கள். நம்மிடம் உள்ள கடவுளின் சாயலை நாம் அன்பு செய்வதே பிறரிடம் உள்ள கடவுளின் சாயலைக் காண வைக்கும். அன்பு செய்யத் தூண்டும். இதுவே கடவுளை நாம் அன்பு செய்வதற்கு சமம். நம்மைப் போல பிறரையும் நேசிக்க புறப்படுவோமா!

 இறைவேண்டல் 
அன்பு செய்ய கற்றுக்கொடுத்தவரே! இயேசுவே ! தன்னைப் போல பிறரையும் நேசிக்க எமக்கு கற்றுத்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்