இயேசுவின் சாட்சிகளாய்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனித ஸ்தேவான் விழா 
I: திப:  6: 8-10; 7: 54-60
II:திபா 31: 2-3. 5,7. 15-16
III: மத்:10: 17-22

கிறிஸ்து பிறப்பு காலத்தில் இருக்கும் நாம் இன்று புனித ஸ்தேவான் நினைவைக் கொண்டாடுகிறோம். புனித ஸ்தேவானைப் பற்றி நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். இயேசுவைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை பெருகி வந்த போது கிரேக்கக் கைம்பெண்களைப் பந்தியில் முறையாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது எனவே திருத்தூதர்கள் தங்களுடைய இறைவார்த்தைப்பணி பாதிக்கப்படாமல் இருக்கவும் அதே நேரத்தில் குற்றச்சாட்டுகள் எழாத வண்ணம் அனைத்துப் பணிகளும் சரியாக நிறைவேற்றப்படவும்  மற்றவரிடம் நன்மதிப்புப் பெற்ற மற்றும் தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஏழுபேரைத் திருத்தொண்டர்களாக நியமிக்க முடிசெய்யப்பட்டது. இவ்வேழு பேரிலும் ஸ்தேவான் மிக முக்கியமானவராகவும் ஆவியால் நிறைந்து மிகுந்தவராகவும் கருதப்பட்டார்.

தூய ஆவியார் அவருக்கு அருளிய ஞானமும் ,அருளும்  அவரை  அருஞ்செயல் செய்பவராகவும் ,கைது செய்தவர்கள்முன் துணிச்சலுடன் வார்த்தையைப் பேசுபவராகவும் மாற்றியது. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் "நீங்கள் பகைவர் முன் ஒப்புவிக்கப்படும் போது என்ன பேசுவது எப்படிப் பேசுவது என கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல. உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற வார்த்தைகள் புனித ஸ்தேவானின் வாழ்வில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம். 

புனித ஸ்தேவான் இயேசுவை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தவர். இயேசு சிலுவையில் உயிர்துறக்கும் தருவாயிலும் "தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்" என்று கூறியதைப் போல ஸ்தேவானும் "ஆண்டவரே இப்பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என வேண்டினார்.இவ்வாறு இயேசுவைப் போல் மன்னித்தார். "தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு மொழிந்ததைப் போல " ஆண்டவராகிய இயேசுவே எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும் " என்று வேண்டிக்கொண்ட ஸ்தேவான் இயேசுவின் சாட்சியாய் உயிர் துறந்தார். 

ஸ்தேவானின் இச்சாட்சிய வாழ்வு நம்மையும் சாட்சியாய் வாழத் தூண்டுகிறது. அதற்கு முதலில் நாம்  இறைவனிடம் தூய ஆவியானவரால் நிரப்பப்பட ஜெபிக்க வேண்டும். தூய ஆவியானவர் நம்மில் அசைவாடுவதை நாம் உணர்பவர்களாய் இருக்க வேண்டும். அவர் தரும் ஞானத்தை நம்  செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். யார் முன்னிலையிலும் இயேசு ஆண்டவர் என அறிக்கையிடத் துணிய வேண்டும்.

இரண்டாவதாக "கிறிஸ்துவின் மனநிலை உங்களில் இருக்க வேண்டும்"என புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய தன் மடலில் கூறுவதைப்போல கிறிஸ்துவின் மனநிலையை நாம் உள்வாங்கி வாழ வேண்டும்.  இயேசுவைப் போல இறைவேண்டலிலும், அனைவரையும் அன்பு செய்வதிலும் , மன்னிப்பதிலும் ,நற்செயல் புரிவதிலும் நாம் நிலைத்திலிருந்து கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்க வேண்டும்.அதையே புனித ஸ்தேவான் செய்து காட்டினார்.எனவே புனித ஸ்தாவானை நம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ முயற்சி செய்வோம். இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா புனித ஸ்தாவானை இயேசுவுக்கு சாட்சியாக வாழ அழைத்து உமது ஆவியாரால் திடப்படுத்தியதைப் போல எங்களையும் உமது ஆவியால் நிரப்பி திடப்படுத்தும். இயேசுவின் மனநிலையைப் பெற்றுக் கொண்டவர்களாய் நாங்கள் வாழ வழிகாட்டும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்