இறைமகனை நாம் எதிர்கொள்ளும் போது அவர் நம்மை பாராட்டுவாரா?
திருவருகைக் காலம் இரண்டாம் வியாழன்
I: எசா: 41: 13-20
II:திபா 145: 1,9. 10-11. 12-13
III: மத்: 11: 11-15
திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நமக்கு திருமுழுக்கு யோவானைப்பற்றிய சிந்தனை தரப்படுகிறது. பாலைநிலத்தில் குரலொன்று ஒலிக்கிறது என இறைவாக்கினர் எசாயா எழுதி இருப்பது திருமுழுக்கு யோவானைப் பற்றியே. இறைவாக்கினர்களில் இறுதியானவர் இவர். இயேசுவின் வருகைக்காக யூத மக்களை ஆயத்தப்படுத்தும் மிக முக்கியப்பணி இவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயத்தமில்லாத ஒருவர் பிறரை ஆயத்தம் செய்ய இயலுமா?
திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காக ஆயத்தமாயிருந்தார். தன்னடக்கம், நேர்மை, துணிவு, நோன்பு போன்ற உயரிய பண்புகளைக் தன்னகத்தே கொண்டிருந்த இவர், இயேசுவுக்கு முன்னோடியானார்." இதோ இறைவனின் செம்மறி " என இயேசுவை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. இன்று இயேசுவால் பாராட்டப்படுகிறார். மனிதராய் பிறந்தவர்களில் திருமுழுக்கு யோவானைப் போல சிறந்தவரில்லை என்ற பாராட்டு அவருக்கு அளிக்கப்படுகிறது. இவ்வார்த்தைகள் இன்று நமக்கும் ஒரு பெரிய பாடமாக அமைகிறது.
திருமுழுக்கு யோவானைப்போல நாமும் இறைமகனால் பாராட்டப்பட வேண்டுமெனில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென இன்று ஆழமாக நாம் சிந்திக்க வேண்டும்.
முதலாவதாக நம்மை நாமே ஆயத்தப்படுத்த வேண்டும். ஆண்டவருடைய வருகைக்காக நமது வாழ்க்கைப் பாதையை செம்மைப்படுத்த வேண்டும். மமன மாற்றம், மன உறுதி இவை இரண்டும் மிக அவசியம்.
இரண்டாவதாக பிறரை ஆயத்தப்படுத்துதல். திருமுழுக்கு யோவான் தன் வாழ்வால் பிறருக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்ததைப் போல, நாமும் நம் வாழ்வால் மற்றவரை வழிநடத்த வேண்டும்.
மூன்றாவதாக இறைவனை பிறருக்கு அறிமுகம் செய்பவர்களாக நாம் விளங்க வேண்டும். நம் வாழ்வு, சொல், செயல் அனைத்திலும் இறைவன் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நாம் வாழ்ந்தால் இயேசு கூறியதைப் போல விண்ணரசில் சிறியோரான நாமும் யோவானைவிடவும் பெரியவராய் விளங்க இயலும். எனவே திருமுழுக்கு யோவானின் மனநிலையை நமதாக்குவோம். அதற்கு தேவையான அருளைத் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே! திருமுழுக்கு யோவானை போல நாங்களும் உம்முடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்த அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்