இறப்பிலும் வாழ்வு தொடர்கிறது | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

உனக்காக நான் வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட, உன்னால் வாழ்கிறேன் என்று பிறர் சொல்ல வாழவேண்டும்.

வாழ்வு என்பது ஒரு கொடை. எத்தனை ஆண்டுகள் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வதைவிட எப்படி வாழ்ந்தோம் என்று சொல்வதில்தான் அதிக பெருமை உள்ளது.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக, நாட்டைக் காப்பாற்றும் பணியில் தங்களைக் கரைத்துக்கொண்டிருக்கின்ற இராணுவ வீரர்களை இச்சமூகம் பெரும்பாலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய இராணுவ வீரர் சுந்தர பாண்டியன். காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்தார். நிறைமாதக் கர்ப்பிணியான இவரது மனைவி சுகப்பிரியாவிடம், “உன்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் உன்னிடம் வந்து விடுவேன் " என்று பாசத்துடன் பேசிவிட்டு, இராணுவ முகாமைவிட்டுக் கிளம்புவதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்பு இராணுவ முகாம்மீது விழுந்த பனிச்சரிவில் இவர் சிக்கி உயிரிழந்தார்.

இராணுவத்தைப் பற்றியே சரிவர அறிந்திராத விவசாய கிராமமான பள்ளக்காப்பட்டியிலிருந்து முதன்முதலில் இராணுவத்தில் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் இராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிக் கையேடுகளைத் தமது ஊர் இளைஞர்களுக்குக் கொடுத்தும், ஒடும் பயிற்சி, மலையேறும் பயிற்சி, கயிறு ஏறும் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளைத் தம் ஊர் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தும் வந்தவர் சுந்தர பாண்டியன். இதன் காரணமாகவே இவரது கிராமத்தைச் சுற்றியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட இளையோர் இன்று இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

பிறர் நலனுக்காக வாழ்கின்ற வாழ்வே உண்மையான வாழ்வு. இவ்வாறு வாழ்பவர்கள் இறந்தாலும் அழிவதில்லை. இன்னொருவர் வழியாக அவர் வாழ்கின்றார்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image