இல்லறத்தை இனிக்க வைக்கும் அன்பு | VeritasTamil
அன்பு என்னும் மூன்றெழுத்து அகிலத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. பிறந்த குழந்தை முதல், இழப்பை தழுவும் முதியவர் வரை அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள். அன்பு சக்திவாய்ந்த ஒரு காந்தம் ஒரு நொடியில் அனைவரையும் தன்பால் ஈர்த்து விடும். அன்புக்கு நிறம் உருவம் வடிவம் இல்லை. ஆனால் கண்ணுக்கும் புலப்படாத மின்சக்தி போன்று வெளிப்படுகிறது. குடும்பம் ஒரு கோவில்.... தொடங்கும் அன்பின் சடங்குகள் இறப்பு வரை நீடிக்கின்றது. ஆணையும் பெண்ணையும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றிணைத்து வாழ வைக்கிறது. குடும்பம் என்னும் விளக்கு எரிய அன்பு என்னும் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
குறுந்தொகை காட்டும் அன்பு
ஆண் சக்தியின் வடிவம்! பெண் அன்பின் வடிவம்! பெண் இல்லறத்தை நல்லறமாக பேணிக்காக்கும் குடும்ப விளக்காக கருதப்படுகிறாள் குடும்பத்தில் தன்னை இணைத்துக் காண்டு ஒன்றாகி விடுகிறாள். காரணம்? அன்பு தான்! குறுந்தொகைக் காட்டும் அன்பை இன்று காண்போம் 'யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புல பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' - குறுந்தொகை 40 நான் யார்? நீ யார்? என் தந்தை யார்? நும் தந்தை யார்? இருவரும் எந்த வகையில் உறவினர்கள்? ஆனால், இன்று நாம் இருவரது நெஞ்சங்களும் செம்மண் நிலத்தில் விழுந்த மழைத்துளி போல் தன் நிறத்தை விடுத்து செம்மண் நிலத்தில் நிலத்தைப் பெற்று ஓடுகிறது. நம் நெஞ்சங்களும் அன்பில் இணைந்து தகுதிகள். பெருமைகள், மறந்து இன்று அன்பில் இணைந்து ஈருடல் ஓர் உடலாக ஆனது எப்படி என்று? தலைவி இப்பாடலில் வியக்கிறார்.
திருக்குறள் காட்டும் குடும்ப அன்பு
கண் + அவன் = கணவன் கண்ணை போன்றவர் கணவன். இல்+அவள் =இல்லாள். இல்லத்தில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பவள் மனைவி.
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள்
பெண் கணவன் மனைவி திருமணம் என்னும் சடங்கு மூலம் ஒன்றாக இணைக்க படுகிறார்கள். உடலாலும், உள்ளத்தாலும், உணர்வாலும், இணைந்து குடும்ப உறவை பேணி காக்கிறார்கள். ஒருவர் மற்றவரின் சிறிய குறைபாட்டினை பெரிதுபடுத்தாமல், அன்பை மட்டும் மையப்படுத்தி வாழ வேண்டும். 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' எனவே ஒருமனப்பட்டு மனமுவந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
-என்று வள்ளுவர் அன்பையும் அறத்தையும் மையப்படுத்துகிறார். தலைவனுக்கு தலைவி உணவு பரிமாறுகிறாள். தலைவன் சுவைத்து உண்கிறான். தலைவி மகிழ்கிறாள். திடீரென்று சாப்பிட்ட இலையில் இருந்து நீண்ட தலைமுடி ஒன்றை எடுக்கிறான். தலைவியின் முகம் வாடி விடுகிறது. தலைவன் தலைவியின் முகத்தை பார்த்து ..கண்ணே இந்த தலைமுடி உன் தலையில் இருந்தாலும் அழகு! இலையில் இருந்தாலும் அழகு என்று பாராட்டுகிறார். மகிழ்ச்சி பொங்குகிறது. இதுதான் குடும்ப அன்பு.
நற்செய்தி காட்டும் குடும்ப அன்பு
கடவுள் அன்பானவர். அன்பான கடவுள் தன் ஒரே மகனை மானுடம் செழிக்க மனுவாக செய்தார். கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்து. ஒன்றித்து வாழ அருள் புரிந்தார். கடவுளின் அன்பு மனுக்குலம் வாழ அன்பினால் ஒன்றித்து வாழ ஆணையிட்டார் . 'இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல் எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்' (துவ 10:8)
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றஸ் மரந்தளிர்த் தற்று
இல்லறத்தில் ஊற்றுக்கண் அன்பே! அன்பு மட்டும் வாழ்வை இனிதாக்கும்! பாசத்தில் பண்பில் வளர வைக்கும் அகத்திலும் புறத்திலும் அன்பு கொண்டு வாழ்வோம்.
- திரு.ஆரோக்கியம்
(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)