பின்தொடரும் அழிவு என்றறிக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுரைந் தற்று (208)
தீய செயல்களைச் செய்தவருடைய அழிவு தன் நிழல் தன்னை விடாமல் தொடர்ந்து காலடியிலேயே தங்குவது போன்றதாகும்.
காட்டரசன் அரிமா (சிங்கம்) அந்தக் காட்டை ஆண்டு வந்தார். கொடியவர்... கொடுங்கோலர்... கோவக்காரர்... போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரர். அவர் ஆட்சியுரிமை பெற்றது கூட தன் தந்தையைத் தானே கொலைசெய்துதான். எவரையும் மதிப்பதில்லை... எடுத்தெறிந்து திமிரோடு பேசுவதில் அவருக்கு நிகர் வேறு எவருமில்லை. யாரும் அவரை நெருங்குவதில்லை.
அவ் அரிமா அரசனுக்குத் தோழி ஒருவர் இருந்தார்.'அறம் செய விரும்பு; ஆறுவது சினம்...' என்று தொடங்கும் ஒளவையின் ஆத்திசூடியை அத்தோழி அவ்வப்பொழுது அரிமாவுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருந்தார். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து பணிவோடு செயல்பட அரிமாவுக்கு இயலவில்லை.
அன்றொரு நாள் காட்டைச் சுற்றிப் பார்க்க அரிமா அரசன் சென்றார். ஒவ்வோரிடத்திலும் அரசருக்கு நல்ல மதிப்பு. மயில் தோகை விரித்தும், குரங்கு குட்டிக்கரணம் அடித்தும், நரி தனி நடிப்பு நடித்தும், குயில் பாட்டுப் படித்தும் ... என எல்லாரும் வணக்கம் தெரிவித்தனர்.
அங்கே ஓரிடத்தில், முயல் இளைஞர்கள் சடுகுடு ஆடிக் வணக்கம் சொல்லாமல் கொண்டிருந்தனர். அரிமாவைப் பார்த்தும் சொல்லாமல். விளையாட்டை நிறுத்தாமல் ஆடிக் கொண்டிருந்தனர். அரசன் உறுமியவாறே முயல் பெரியவர்களை அழைத்தார். "நான் காட்டரசன் அரிமா வந்திருக்கிறேன்; உங்கள் இளைஞர்கள் எனக்கு வணக்கம் என்னை அவமானப்படுத்தி விட்டனர்; எனவே அவர்களையும் உங்கள் முயல் இனம் முழுவதையும் நான் இன்றே அழிக்கப் போகிறேன்" என்று, ஒரு லட்சம் தமிழர்களை அழித்து தமிழக மீனவர்களைத் தூக்கிலிடுவதற்கும் திட்டம் தீட்டிய அண்டை நாட்டு அரசனைப் போல் வெறிகொண்டு அறிக்கையிட்டார். முயல் பெரியவர்களும் தாய்மார்களும் அதிர்ந்து போயினர். ஓரிரு முயல் நாட்டாமைகள் (தலைவர்கள்) இளைஞர்களைப் பார்வைகளாலும் சொற்களாலும் கடித்துக் குதறினர்.
அவ்வேளையில் வீரவேலுநாச்சி, குயிலி போன்ற ஒரு வீராங்கனை முயல் சொன்னார்; எங்கள் அரிமா அரசே, நடந்த நடக்கக் கூடாததற்காக எல்லார் சார்பாகவும் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன் ஐயா, இந்த எளிய பெண்ணிடமிருந்து ஓர் எளிய கருத்து,
ம் ... என்ன... விரைந்து சொல்' அரிமா.
'அரசே... ஒரே நேரத்துல எங்க எல்லாரையும் அழிச்சிட்டிங்கன்னா... அதனால என்ன பயன்? நாங்க உங்க அடிமைகள்... உங்களுடைய சாப்பாட்டு வேளைகளில் நாங்க ஒவ்வொருத்தரா வர்றோம் சாப்பாட்டுக்கு நீங்க அலைய வேண்டியதில்லை... எங்களையும் நீங்க அழிச்சிடலாம் ...' என்றதும் அரிமா அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
'சரியான நேரத்துக்கு வரணும்..முதல்ல.. அந்த சடுகுடு இளைஞர்கள் வந்தாகணும்...' ஆணையிட்டபின் அரிமா அரசன் சென்று விட்டார். காலை, பகல், மாலை... ஒரு நாள் முடிந்தது. மூன்று முயல் இளைஞர்கள் இரையாகி விட்டனர். இரண்டாம் நாள் விடிந்தது. காலையில் முயல் இளைஞர் சென்றார்... அரசர் கொன்று தின்றார். பகல் வேளை நெருங்கியது. 'நாலு பேரைப் இனியும் தொடரக் கூடாது' பலி கொடுத்து விட்டோம் என்ற எழுச்சியுரை ஆற்றிவிட்டு 'வெற்றி வேல்... வீர வேல்...' என்று முழக்கமிட்டுப் பெற்றோரிடம் ஆசி பெற்று, வீர இளைஞன் பகத்சிங் போன்று விரைந்தார். வழியில் கிணறு ஒன்று இருந்தது. கிணற்றுக்குள் உற்றுப் பார்த்தார். தன் உருவம் தெரிந்தது. திட்டம் வகுத்தார். அருகிலிருந்த மர நிழலில் ஓய்வெடுத்தார்.
நேரம் நண்பகல் 12.30 ஆனது... ஒன்று... 1.30 ஆனது... பசி... அரிமா அரசனுக்கு... தன் குகையிலிருந்து 'எங்கடா இந்த முயல்' என்று கத்திக் கொண்டே வெளியில் வந்தது.
'ஐயா... அரிமா அரசே...' குரல் கேட்டு நின்றார் அரிமா... 'ஏன் பிந்தினாய்?' கோவத்தோடும் பசியோடும் பாய்ந்து வந்தார்.
'அரசே... நான் என்ன சொல்வேன்... அத எப்படிச் சொல்வேன்' என்று 'ஒ'வென்று அழத் தொடங்கினான் முயல் இளைஞன்... 'அரசே நான் சரியான நேரத்துக்கு வந்து விட்டேன்...' ஆனா இந்தக் கிணத்துக்குள்ள ஓர் அரிமா 'நான் தான் அரசன்... நான் சொல்றபடி தான் கேட்கணும். மீறினால் உன்னையும் அந்த அரிமா அரசனையும் கொன்றொழிப்பேன் என்றார்... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அரசே...' என்று முயல் இளைஞன் தூள் கிளப்பினான்.
'எங்கே அவன்'... என்று சொன்னவாறே... கிணற்றருகில் சென்றார்...
'அரசே அங்கே போகாதீங்க... உங்களக் கொன்னுருவானாம்.'
ஆனால், அரிமா கிணற்றுக்கருகில் போய் 'டேய் எவன்டா அவன் என் காட்டுக்குள்'.
அதே சொற்கள் மீண்டும் எதிரொலித்தன... 'டேய் எவன்டா அவன் என் காட்டுக்குள்.'
அரிமா மீண்டும் கோவத்தோடு கிணற்று விளிம்பில் நின்று கொண்டு 'உன்னை விடமாட்டேன்டா...' மீண்டும் கிணற்றுக்குள்ளிருந்து 'உன்னை விட மாட்டேன்டா...'
அரிமா... கிணற்றுக்குள் பார்த்தார்... தன்னைப் போலவே இன்னோர் அரிமா... ஆத்திரம் கொண்ட ஆணவ அரிமா கிணற்றுக்குள் பாய்ந்தார்.
உள்ளே... வேறோர் அரிமா இல்லை... தன் நிழல் தான் அது என்று அறிந்தார். அரைகுறை தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் உயரத்திலிருந்து குதித்ததால் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்து முனகினார்...'
அடேய் சின்னப்பயலே முயலே... என்னை ஏமாற்றி விட்டாயேடா...'
செய்தி காட்டுத் தீ போல் பரவியது. முயல்களும் அரிமா அரசனால் பாதிக்கப்பட்ட விலங்குகளும் கிணற்றைச் சூழ்ந்து நின்றனர். மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுவது போன்ற மனநிலையில் கற்களைக் கைகளில் எடுத்தனர். அந்தோ...! பரிதாபம்...
முயல் இளைஞனின் அறிவுக் கூர்மையான துணிவுச் செயலை விலங்குப் பெரியவர்கள் எல்லாம் பாராட்டினர். முயல்கள் அனைவரும் பெருமையும் பெருமகிழ்ச்சியும் கொண்டனர்.
அரிமா அரசனுக்குத் தன் நிழல் தன்னைப் பின்தொடரும் என்பது தெரிந்திருந்தும் ஆத்திரத்தில் அறிவிழந்து அழிவைத் தேடிக் கொண்டார்.
ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம். ஆனால் அழிவே தீயவர்க்கு முடிவாகும். தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவோம். காப்போம்! அரம்பர்களிடமிருந்தும் கயவர்களிடமிருந்தும் ஆணவத்தை விட்டொழிப்போம்! அழிவிலிருந்து உயிர்களைக் உயிர்களை வாழ்விக்கும் உலகைக் காப்போம்.