வாழ்க்கையின் பொக்கிஷத்தை அன்பிலும் கருணையிலும் முதலீடு செய்யுங்கள் - திருத்தந்தை லியோ | Veritas Tamil

உங்கள் வாழ்க்கையின் பொக்கிஷத்தை அன்பிலும் கருணையிலும் முதலீடு செய்யுங்கள் - திருத்தந்தை லியோ

ஞாயிற்றுக்கிழமையன்று  மூவேளை செபத்திற்காக புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை லியோ, புனித லூக்காவின் நற்செய்தி பகுதியைப் பற்றி சிந்தித்து, விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையின் "பொக்கிஷத்தை" எவ்வாறு முதலீடு செய்கிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

"உங்களுடைய செல்வத்தை  விற்று தர்மம் செய்யுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளை அல்லது புதயலை பற்றிக் கொள்ளாமல், மற்றவர்களின் நன்மைக்காக, குறிப்பாக மிகவும் தேவைப்படுபவர்களின் நன்மைக்காக அவற்றை தாராளமாகப் பயன்படுத்துமாறு விசுவாசிகளை வலியுறுத்தினார்.

"இது பொருள் மற்றும் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, நமது திறமைகள், நமது நேரம், நமது பாசம், நமது இருப்பு, நமது இரக்கம் ஆகியவற்றை செயல்படுத்துவது பற்றியது" என்று அவர் கூறினார். ஒவ்வொரு நபரும், "கடவுளின் திட்டத்தில் ஒரு தனித்துவமான, விலைமதிப்பற்ற நன்மை - ஒரு உயிர்துடிப்புள்ள மூலதனம்", அதை வளர்த்து முதலீடு செய்ய வேண்டும். "இல்லையெனில் அது வறண்டு அதன் மதிப்பை இழக்கும்" என்று அவர் தொடர்ந்தார்.

நமக்கு கொடுக்கப்பட்ட இந்த புதையலை அல்லது திறமையை  "ஒரு திருடனைப் போல,  நுகர்வுப் பொருளாக மாற்றுபவர்களால் வீணடிக்கப்படலாம் அல்லது எடுத்துக்கொள்ளப்படலாம் என எச்சரித்தார்.  நம்மிடமிருக்கும்  திறமையை  செழிப்பாக்க ஓர் இடம், சுதந்திரம் மற்றும் உறவு தேவை என்று அவர் வலியுறுத்தினார் - மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு அன்பு தேவை. இது "நமது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்து மேம்படுத்துகிறது. நம்மை எப்போதும் கடவுளைப் போல ஆக்குகிறது."

இயேசு சிலுவையில் தம்மை முழுமையாகக் கையளிக்க எருசலேமுக்குச் செல்லும் வழியில் இந்த வார்த்தைகளைப் பேசியதை நினைவு கூர்ந்த திருத்தந்தை லியோ, கருணையின் செயல்களே  நம் வாழ்வின் பொக்கிஷத்தை "பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள விதத்தில் வைப்பதற்கான  வங்கி" என்று சுட்டிக்காட்டினார். இரண்டு சிறிய நாணயங்களுடன் "உலகின் பணக்காரர்" ஆக மாறும் ஏழை விதவையின் நற்செய்தியின் உருவத்தைப் போல, மிகச்சிறிய செயல் கூட எல்லையற்ற மதிப்பைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.

புனித அகஸ்டினை மேற்கோள் காட்டி, மக்கள் வெண்கலத்தை வெள்ளியாகவோ அல்லது வெள்ளியை தங்கமாகவோ மாற்றிக் கொள்வதில் மகிழ்ச்சியடையலாம் என்று  குறிப்பிட்டார்.  ஆனால் அன்பினால் "கொடுக்கப்படுவது" எல்லையற்ற பெரிய ஒன்றை அளிக்கிறது: அது முடிவில்லா வாழ்வாக மாற்றப்படும் "ஏனென்றால் கொடுப்பவர் மாற்றப்படுவார். இந்த உண்மையை அன்றாட வாழ்வில் காண வேண்டும் - தனது குழந்தைகளை நெருக்கமாக வைத்திருக்கும் தாயில், அல்லது  இரண்டு நபர்கள் ஒன்றாக இருக்கும் போது உணரும் நெருக்கம்  "ஒரு ராஜா மற்றும் ராணி"  இருப்பதை  போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதுபோன்று  நாம் இன்னும் பல உதாரணங்களைக் கொடுக்க முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.

நாம் எங்கிருந்தாலும் - அது வீட்டிலோ, ஆலயத்திலோ, பள்ளியிலோ, அல்லது பணியிடத்திலோ - "அன்பு செலுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் இழக்காதீர்கள்" என்று அனைவரையும்  ஊக்குவித்தார். இதுவே, இயேசு நம்மிடம் கேட்கும் விழிப்புணர்வு என்று அவர் கூறினார்: ஒவ்வொரு தருணத்திலும் இயேசு நம்முடன் இருப்பது போல, ஒருவருக்கொருவர் கவனத்துடனும் தயார் நிலையிலும் மற்றும் உணர்திறன் மிக்கவராகவும்  இருக்க வேண்டும்

தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை இந்த விருப்பத்தை "விடியல் நட்சத்திரம்" என்று அழைக்கப்படும் மரியாளிடம் ஒப்படைத்து, பிளவுபட்ட உலகில் அனைத்து விசுவாசிகளும் "கருணை மற்றும் அமைதியின் காவலாளிகளாக" இருக்க உதவுமாறு வேண்டிக்கொண்டார்.