இளைஞர் திருவிழா 2025 - ஜாம்ஷெட்பூர் | Veritas Tamil

ஜாம்ஷெட்பூர் - இளைஞர் திருவிழா 2025: சவாலான உலகில் நம்பிக்கையின் யாத்திரிகர்கள்
ஜாம்ஷெட்பூர் செப்டம்பர் 15, 2025 – ஜாம்ஷெட்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாங்கோவில் உள்ள புனித ஜோசப் சமூகக் கல்லூரியில், இயேசுவின் சீடத்திகள் சபையினரால் Sisters Disciples of the Divine Master (PDDM), ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதுமாக ஜெபம், கற்றல், மற்றும் கூட்டுறவுக்காக ஒன்றுசேர்ந்தனர். “நம்பிக்கையின் யாத்திரிகர்கள்” என்ற மையக்கருத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இன்றைய விரைவாக மாறிவரும் உலகில் தங்கள் கிறிஸ்தவ அழைப்பை ஏற்க இளைஞர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த நாள் ஜெபம் மற்றும் வரவேற்புரையுடன் தொடங்கியது. அவர், திருத்தந்தை பிரான்சிஸின் "அன்பான இளைஞர்களே, திருஅவைக்கு உங்களின் உத்வேகம், உங்களின் உள்ளுணர்வு, உங்களின் விசுவாசம் தேவை" என்ற வார்த்தைகளால் நிகழ்வின் நோக்கத்தை விளக்கினார்.
மறைமாவட்ட விசுவாசப் பயிற்சி மற்றும் ஆயர் பணியின் இயக்குநரும், மாநில ஆயர் பேரவையின் ((JHAAN)) துணைச் செயலாளருமான அருட்தந்தை வலேரியன் லோபோ, முக்கிய அமர்வை வழிநடத்தினார். அவர் இளைஞர்களை "நம்பிக்கையின் யாத்திரிகர்களாக" கிறிஸ்துவுடன் நடக்க ஊக்குவித்தார். மேலும், புனித பவுலின் உற்சாகமூட்டும் வார்த்தைகளான, "நம்பிக்கையினால் மகிழ்ச்சியுடன் இருங்கள், துன்பத்தில் பொறுமையுடன் இருங்கள், ஜெபத்தில் நிலைத்திருங்கள்" (ரோமர் 12:12) என்பதை அவர் வலியுறுத்தினார். கிறிஸ்தவ நம்பிக்கை என்பது கடவுளின் அன்பில் (ரோமர் 5:5) வேரூன்றிய ஒரு செயல்திறன் மிக்க சக்தி என்பதை, நிஜ வாழ்க்கை உதாரணங்களைக் கொண்டு அவர் விளக்கினார். மேலும், இளைஞர்களை இந்த உலகில் மன உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும்இ மற்றும் சாட்சியுடனும் வாழ அழைப்பு விடுத்தார்.
சிலுவையின் வெற்றி
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, சிலுவையின் வெற்றிப் பெருவிழாவுடன் இணைந்து நடைபெற்ற திருப்பலி இருந்தது. அருட்தந்தை லோபோ தலைமை தாங்கிய இந்த வழிபாட்டில், சிலுவையை நம்பிக்கையின் மற்றும் வெற்றியின் அடையாளமாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொள்ள இளைஞர்கள் அழைக்கப்பெற்றனர்.
இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள்
இந்த நிகழ்வில், இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமான பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. இளைஞர் பணியின் உதவி இயக்குநர் அருட்தந்தை கொர்னேலியஸ் டிக்ரா, "டிஜிட்டல் உலகில் கவனம் செலுத்துதல்" என்ற தலைப்பில் பேசினார். தொழில்நுட்பத்தை பொறுப்புடன், வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சகோதரி சாந்தி லூயிஸ்,(PDDM), ஆசீர்வதிக்கப்பட்ட கார்லோ அகுடிஸ்-ன் சாட்சியைப் பற்றிப் பேசினார். டிஜிட்டல் கருவிகளை நற்செய்தி அறிவிப்புக்காகப் பயன்படுத்தி, எளிமையுடன் தூய்மையான வாழ்வு வாழ்ந்த அவரைப் பற்றி எடுத்துரைத்து, "திவ்ய நற்கருணைதான் விண்ணகம் செல்வதற்கான பெரும் வழி" என்ற அவரது வார்த்தைகளை இளைஞர்களுக்கு நினைவுபடுத்தினார்.
நம்பிக்கைக்கான பயணம்
சகோதரி ஆனந்த குமாரி, (PDDM)-ன் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்கள் நிகழ்த்திய “இயேசு என்னை விடுவிக்கிறார்” என்ற நாடகம், கல்விச் சுமை, சமூக அழுத்தங்கள் மற்றும் டிஜிட்டல் கவனச் சிதறல்கள் ஆகியவற்றின் போராட்டங்களைச் சித்தரித்தது. இந்தச் சவால்களில் இருந்து இயேசு எவ்வாறு விடுதலை மற்றும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை அது காண்பித்தது.
கல்லூரியின் முதல்வர், சகோதரி சாந்தி,(PDDM), தங்கள் நிறுவனத்தின் விளிம்புநிலை மக்களுக்குச் சேவை செய்வதற்கான பணியை எடுத்துரைத்து, விசுவாசத்தை செயலுடன் இணைக்குமாறும், பொறுப்புகளை ஏற்க இளைஞர்களை ஊக்குவிக்குமாறும் கூறினார்.
இந்த நாள் முழுவதும் ஜெபம், இசை, உணவு, மற்றும் கூட்டுறவு நிறைந்ததாக இருந்தது.இயேசுவின் சீடத்திகள் சபை சகோதரிகளின் தாராளமான விருந்தோம்பல் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தது. பங்கேற்பாளர்கள் "நம்பிக்கையின் யாத்திரிகர்களாக" வாழ வேண்டும் என்ற புதிய மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் அங்கிருந்து புறப்பட்டனர். நிகழ்வின் இறுதியில், சகோதரி கார்மல் பர்வா,(PDDM), அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். "நம்பிக்கை நம்மை ஏமாற்றாது, ஏனெனில் கடவுளுடைய அன்பு தூய ஆவியின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது" (ரோமர் 5:5) என்ற புனித பவுலின் வார்த்தைகள், இந்த நிகழ்வின் முழு சாராம்சத்தையும் வெளிப்படுத்தின.
Daily Program
