21 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் | வேரித்தாஸ் செய்திகள்

86 வயதான திருத்தந்தை  ஜூலை 9 ஆம் தேதி மூவேளை  ஜெபத்தை நிறைவு செய்த  பிறகு, புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடம்  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

திருஅவையில் புதிய கர்தினால்களை நியமிக்கும் கர்தினால்கள் அவைக்கூட்டம் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வத்திக்கானில் இடம்பெறும் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 புதிய கர்தினால்களின் பெயர்களையும் வெளியிட்டார்.

திருப்பீடத்தின் மூன்று துறைகளின் தலைவர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட பேராயர்கள், மலேசிய ஆயர், ஹாங்காங் ஆயர், யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, சலேசிய துறவுசபையின் அதிபர் உட்பட 21 பேர் திருஅவையில் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


புதிய கர்தினால்களின் பெயர்ப்பட்டியல்:

  1. பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட், ஆயர்களுக்கான பேரவையின்  தலைவர் (அமெரிக்கா)
  2. பேராயர் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ், விசுவாசக் கோட்பாட்டிற்கான பேரவையின்  தலைவர் (அர்ஜென்டினா)
  3. பேராயர் கிறிஸ்டோப் பியர், அமெரிக்காவுக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் (பிரான்ஸ்)
  4. யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் பியெர் பாத்திஸ்தா பிட்ஸபாலா, (இத்தாலி)
  5. பேராயர் எமில் பால் செர்ரிக், இத்தாலியின் அப்போஸ்தலிக்க தூதுவர் (சுவிட்சர்லாந்து)
  6. ஆயர்  ஸ்டீபன் சோவ் சாவ்-யான், SJ, ஹாங்காங் ஆயர்  (சீனா)
  7. பேராயர் ஜோஸ் கோபோ கானோ, மாட்ரிட் பேராயர் (ஸ்பெயின்)
  8. பேராயர் ஸ்டீபன் பிரிஸ்லின், கேப் டவுன் பேராயர் (தென்னாப்பிரிக்கா)
  9. பேராயர் கிளாடியோ குகெரோட்டி, ஓரியண்டல் தேவாலயங்களுக்கான பேரவையின்  தலைவர் (இத்தாலி) 
  10. பேராயர்  ஏஞ்சல் சிக்ஸ்டோ ரோஸி, கோர்டோபாவின் பேராயர் (அர்ஜென்டினா)
  11. பேராயர் லூயிஸ் ருக்கேடா அபரிசியோ,  பொகடா பேராயர் (கொலம்பியா)  
  12. பேராயர் கிரஸிகுர்ஸ் ரிஸ்,லோட்ஸ் பேராயர் (போலந்து)
  13. பேராயர் ஸ்டீபன் அமேயு மார்ட்டின் முல்லா, ஜூபாவின் பேராயர் (தென் சூடான்)
  14. பேராயர் புரோட்டேஸ் ருகம்ப்வா, தபோரா பேராயர் (தான்சானியா) 
  15. ஆயர்  செபாஸ்டியன் பிரான்சிஸ், பினாங்கு ஆயர்  (மலேசியா)
  16. ஆயர்  பிரான்சுவா-சேவியர் பஸ்டில்லோ, அஜாசியோ ஆயர் (பிரான்ஸ்)
  17. ஆயர்  அமெரிகோ இமானுவேல் அல்வெஸ் அகுயார், லிஸ்பன் (போர்ச்சுகல்) துணை ஆயர்
  18. அருள்தந்தை  ஏஞ்சல் பெர்னாண்டஸ் ஆர்டைம், சலேசியன் சபை அதிபர்  (ஸ்பெயின்)
  19. பேராயர் அகோஸ்டினோ மார்செட்டோ, அப்போஸ்தலிக்க நன்சியோ (இத்தாலி)
  20. பேராயர் டியாகோ ரபேல் பேட்ரான் சான்செஸ், குமானாவின் முன்னாள் பேராயர்  (வெனிசுலா)
  21. அருள்தந்தை  லூயிஸ் பாஸ்குவல் டிரி, OFM கப்புச்சின்  (அர்ஜென்டினா) 

2013 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து,  66 நாடுகளில் இருந்து 121 கர்தினால்களை தேர்வு செய்துள்ளார்.

கர்தினால்கள்  சபையின்  பத்து உறுப்பினர்கள் கடந்த கூடுகையில் இருந்து 80 வயதை எட்டியுள்ளனர், இதனால் எதிர்கால திருத்தந்தையை தேர்வு செய்யும்  தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தனர். கர்தினால்  ஏஞ்சலோ காமாஸ்ட்ரி மற்றும் கர்தினால்  லியோனார்டோ சாண்ட்ரி உட்பட மேலும் ஏழு கர்தினால்கள் இந்த  ஆண்டு இறுதிக்குள் 80 வயதை எட்டுகிறார்கள்.  

 தற்போது திருஅவையில் 121 கர்தினால்கள் உள்ளனர், அவர்களில் 81 (67%) பேர் திருத்தந்தை  பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இவர்களை  திருஅவையில் அதிகாரப்பூர்வமாக கர்தினால்களாக உயர்த்துவது செப்டம்பர் 30ஆம் தேதி, உலக ஆயர்கள் கூட்டத்தொடருக்கு முன்னர் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இதனை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களின் பணிக்கான திருத்தந்தையின் சேவையில் ஒத்துழைக்க உள்ள இந்த புதிய கர்தினால்களுக்காக செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

_அருள்பணி வி.ஜான்சன் SdC

(News source from CNA and Vatican News)