மதமாற்றம் செய்ததாக உத்திரபிரதேசத்தில் போதகர் உள்பட ஆறு பேர் கைது || வேரித்தாஸ் செய்திகள்

மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர்  மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம்  ஜூலை 23 அன்று  உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.

ஜூலை 23 அன்று வடக்கு உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள படேசர் கிராமத்தில் உள்ள அவர்களின் பிரார்த்தனை பவனில் (ஜெபக்கூடம் ) ஞாயிற்றுக்கிழமை ஜெப வழிபாட்டின்போது ஜெபக்கூட  தலைவர் வினோத் குமார் ஜேம்ஸ் மற்றும் மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர் .

ஜூலை 24 அன்று, கைது செய்யப்பட்ட போதகர் உள்பட ஏழு பேரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போதகர்  வினோத் குமார் ஜேம்ஸின் மகன் விக்ராந்த் குமார் ஜான் கூறுகையில், இது எங்கள் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜெப வழிபாட்டில் 50 பேர் கொண்ட போலீஸ் குழு வந்து தேவாலயத்திற்குள் நுழைந்து ஜெப வழிபாட்டினை தடுத்து நிறுத்தி மத மாற்றங்களை நடத்தியதாக குற்றம் சாட்டினர். மேலும் ஜெபக்கூடத்தில் இருந்த விவிலியம் மற்றும் பிற கிறித்தவ நூல்களையும் கைப்பற்றி சென்றதாக கூறினார்.  

ஞாயிறு வழிபாட்டில்  கலந்து கொண்ட 700-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இடையூறு செய்து அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போதகர் அவர்களின் மகன் ஜானின் கூற்றுப்படி, காவல்துறை திட்டமிட்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும்  மேலும்  வலதுசாரி சித்தாந்தத்திற்கு பெயர் பெற்ற இந்து தலைவர் ஜிதேந்திர குமார், என்பவர் 
தான் ஜெபக்கூடத்தின் மீது புகார் அளிக்க தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார் என்றும் அவர் கூறினார்.

போதகர்  ஜேம்ஸ் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ஜெப வழிபாடுகளை நடத்தியுள்ளார். இது நூற்றுக்கணக்கான மக்களை  ஈர்த்ததாகவும் அதனால் மக்கள் இவரை தேடி வருவதால்  இந்து  தலைவர் ஜிதேந்திர குமார் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்து மக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதற்காக  ரூ. 45,000  வழங்குவதாகவும், அதற்குப் பதிலாக வேலைகளை வழங்குவதாகவும் போதகர் மீது அவர் தனது   குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் இதற்க்கு பதில் அளித்த ஜான் ஒரு நாலும் வேலை வாங்கி கொடுத்தோ அல்லது பணம் கொடுத்தோ யாரையும் மதமாற்றம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 11  மாநிலங்கள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளது. வற்புறுத்தல் ,கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து அதன் மூலம் மக்களை மதம் மாற்றம் செய்வது  ஆகியவற்றைக் குற்றமாக்கும் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளன. இதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில்   அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாரதீய ஜனதா கட்சிக்கு தலைமை தாங்குகிறார், இது இந்து ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது மேலும் பாரதிய ஜனதா கட்சி தற்போது உத்திரபிரதேச  மாநிலத்தை ஆட்சி செய்கிறது. இந்த மாநிலத்தில்  சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் செய்பவர்களுக்கு ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் பிற மதங்களுக்கு இடையேயான திருமணங்களையும் இந்த  சட்டம் தடை செய்கிறது. இது "லவ் ஜிஹாத் எதிர்ப்பு சட்டம்" என்று இந்து குழுக்களால் அழைக்கப்படுகிறது, முஸ்லீம் ஆண்கள் இந்து பெண்களை காதலித்து அவர்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதாக குற்றம் சாட்டினர்.

கிறிஸ்தவ தலைவர்களின் கூற்றுப்படி, 2021 இல் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாப நிலையிலும் ஆபத்தான நிலையிலும் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 

புதுடெல்லியை தலைமையிடமாக  கொண்ட ஒருங்கிணைந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு  (யுசிஎஃப்) கருத்துப்படி, இந்தியாவில் கிறிஸதவர்கள் மிகவும் அதிகமாக துன்புறுத்தப்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில், இந்த மாநிலத்தில் மட்டும் மொத்தம் 400 வன்முறை நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது , அவற்றில் 155 வன்முறைச் செயல்கள் குறிப்பாக கிறிஸ்தவர்களைக் குறிவைத்துள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை UCF இன் விரிவான புள்ளிவிவரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளது.

 
_அருள்பணி வி.ஜான்சன் SdC

(Source from RVA English News)