உலகப் பற்று அல்ல, இறைப்பற்று! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 23 ஆம் வாரம்-புதன்
9 செப்டம்பர் 2026
1 கொரி 7: 25-31
லூக்கா 6: 20-26
உலகப் பற்று அல்ல, இறைப்பற்று!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில் புனித பவுல் திருமணம் மற்றும் திருமணமில்லா வாழ்க்கை குறித்து அறிவுரை வழங்குகிறார். அக்காலத்தில் இருந்த கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைமையில் இறைவனை மையமாக வைத்து வாழ வேண்டும் என அவர் கூறுகிறார்.
திருமணமாகாதவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பவுல் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குகிறார்; ஆனால் இது கட்டளை அல்ல. மேலும், திருமணம் செய்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பொறுப்புடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாதவர்கள் இறைவனுடைய பணியில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் வாழ்க்கையில் துன்பங்களும் சிரமங்களும் இருப்பதால், உலகப் பற்றுகளில் அதிகமாக சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.
நிறைவாக, இவ்வுலகின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது என்பதால், உலகப் பொருட்களையும் உறவுகளையும் இறுதி இலக்காகக் கருதக்கூடாது, மறாக, மகிழ்ச்சி, துக்கம், செல்வம், வறுமை போன்ற அனைத்தையும் கடந்து, இறைவனுடைய அரசையும் அவருடைய விருப்பத்தையும் முதன்மையாகக் கொள்ள வேண்டும்என்று பவுல் அடிகள் கொரிந்தியரைக் கேட்டுக்கொள்கிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு பேறுபெற்றவர்கள் யார், எச்சரிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதை எடுத்துரைக்கிறார்.
ஏழைகள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையரசு அவர்களுக்குரியது, பசியோடு இருப்பவர்கள் நிறைவு பெறுவார்கள் என்றும், இப்போது அழுகிறவர்கள் ஒருநாள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் ஆறுதல் வார்த்தைகளை முன்வைக்கிறார்.
இறுதியாக, இறை நம்பிக்கைக்காக மனிதர்களால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இகழப்படும்போது, அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில், செல்வத்தில் திருப்தியடைந்தவர்கள், இப்போது நிறைவாக இருப்பவர்கள், சிரித்துக்கொண்டிருப்பவர்கள், அனைவராலும் புகழப்படுபவர்கள் குறித்து இயேசு எச்சரிக்கை விடுக்கிறார் என்றும் இயேசுவின் போதனைகளை லூக்கா பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
நமது அன்றாட வாழ்க்கைக்கு உலகத்தில் அளவுகோலாக எதுவும் இல்லை. இறைவனுடைய அளவுகோலால் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்று இயேசு கற்றுத்தருகிறார். செல்வம், வசதி, புகழ் ஆகியவை மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை என்பது இன்று தெளிவுப்படுத்தப்படுகிறது.
ஆம், இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நம்முடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு முக்கியமான கேள்வியை சிந்தனைக்கு முன்வைக்கின்றன. “இந்த உலகத்தில் நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்கிறோம்?”
நம்முடைய வாழ்க்கையில் பணம், பதவி, சொத்து, உறவுகள், மகிழ்ச்சி, புகழ் என்று பல விடயங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. ஆனால் இன்றைய இறைவார்த்தை, இவை அனைத்தும் நிலையற்றவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “இவ்வுலகின் தோற்றம் மறைந்து போகிறது” என்று கூறுகிறார்.
அதாவது, இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. இன்று நம்மிடம் இருப்பது நாளை இல்லாமல் போகலாம். இன்று நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்; நாளை துன்பம் வரலாம். இன்று நம்மிடம் செல்வம் இருக்கலாம்; நாளை அது இல்லாமல் போகலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இதனால் பவுல் உலக வாழ்க்கையை வெறுக்கச் சொல்லவில்லை. மாறாக, உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றுக்கு அடிமையாகிவிடாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். நாம் பணம் சம்பாதிக்க வேண்டும். குடும்பத்தை கவனிக்க வேண்டும். நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நம்மிடம் செல்வம் குவிந்திருக்கலாம் இருக்கலாம்; ஆனால் செல்வம் நம்மை ஆளக்கூடாது என்பதே படிப்பினை.
இன்றைய நற்செய்தியில், “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; இறையரசு உங்களுக்குரியது.”
இயேசு கூறும் வார்த்தைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. உலகத்தின் பார்வையில் பணக்காரர்கள் வெற்றி பெற்றவர்கள், வசதியாக வாழ்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், புகழ் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இயேசுவின் பார்வை வேறுபட்டது. இயேசு ஏழைகளையும், பசியால் வாடுகிறவர்களையும், அழுகிறவர்களையும், துன்பப்படுகிறவர்களையும் நினைவுகூல்ந்து, அவர்களிடம் இறைவன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறுகிறார்.
இங்கே இயேசு வறுமையையும் துன்பத்தையும் விரும்புங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, இந்த உலகத்தில் துன்பப்படுகிறவர்களை இறைவன் காண்கிறார்; அவர்களுடைய கண்ணீருக்கும் பசிக்கும் மதிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறார்.
“செல்வந்தர்களே, உங்களுக்கு ஐயோ!” என்பதில் இயேசு செல்வத்தைச் சாபம் என்று கூறவில்லை. ஆனால் செல்வத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, இறைவனை மறந்து வாழ்வது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்.
நமக்கு நல்லதொரு ஆடம்பர வீடு இருக்கலாம்; ஆனால் அந்த வீட்டில் அன்பு இல்லையென்றால் என்ன பயன்? நம்மிடம் பணம் இருக்கலாம்; ஆனால் மனதில் அமைதி இல்லையென்றால் என்ன பயன்? நமக்கு பல நண்பர்கள் இருக்கலாம்; ஆனால் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் நண்பராக இல்லையென்றால் என்ன பயன்?
நமக்கான உண்மையான பேறு பணத்திலும், புகழிலும், வசதியிலும் இல்லை. மாறாக, உண்மையான பேறு இறைவனோடு கொண்ட உறவில் உள்ளது.
இன்று இயேசு நம்மை உலகத்தை விட்டு ஓடச் சொல்லவில்லை. உலகத்தில் இருந்துகொண்டே உலகப் பற்றுக்கு அடிமையாகாமல் வாழுங்கள் என்று அழைக்கிறார். நம்மிடம் செல்வம் இருந்தால், அதை பிறருடன் பகிர்வோம். நாம் வசதியாக இருந்தால், துன்பப்படுகிறவர்களை நினைவில் கொள்வோம்.
நிலையற்றவற்றில் நம்பிக்கை வைத்து, இறைவனோடான உறவை மறுப்பதைவிட, நிலையான இறைவனில் நம்பிக்கை வைப்பதே நமக்கான மீட்புச் செய்தி.
இறைவேண்டல்.
இயேசுவே, எங்கள் வாழ்வின் உண்மையான செல்வமாக நீரே இருப்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்,
+6 012 228 5452
