அவநம்பிக்கை சீடத்துவத்தைச் சீரழிக்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 22ஆம் வாரம் -திங்கள்
31 ஆகஸ்ட் 2026
1 கொரி 2: 1-5
லூக்கா 4: 16-30
அவநம்பிக்கை சீடத்துவத்தைச் சீரழிக்கும்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகப் பகுதியில் பவுல் அடிகள் கொரிந்தியர்களிடம் சென்றபோது மனித ஞானத்தையோஅவரது பேச்சுத்திறமையையோ நம்பாமல், இயேசு கிறிஸ்துவையும் சிலுவையில் அறையப்பட்ட அவரையும் மையமாக வைத்து போதித்ததாகக் கூறுகிறார். முதலில், பவுல் தன்னைப் பெருமைப்படுத்தாமல், தாழ்மையுடன் அவர்களிடம் சென்றார் என்றும் அவர் மனிதர்களின் ஞானத்தைக் காட்டிலும் கடவுளின் வல்லமையை நம்பினார் என்றும் சாட்சியமாக கூறுகிறார்.
மேலும், தனது செய்தி வெறும் அறிவார்ந்த பேச்சாக இல்லாமல், தூய ஆவியாரின் வல்லமையால் உறுதிப்படுத்தப்பட்டது என்றும், அவ்வாறே, கொரிந்தியர்களின் நம்பிக்கை மனித ஞானத்தின் மீது அல்ல, கடவுளின் வல்லமையின் மீது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகப் பகுதியில், அன்று ஓய்வு நாளானதால், இயேசு நாசரேத்தில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தபோது, இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும், ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வையற்றவர்களுக்கு பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையையும் அறிவிக்க கடவுள் தம்மை அனுப்பியுள்ளார் என்று இயேசு கூறுகிறார். இவ்வசாகப் பகுதியில்,
இயேசு, எசாயாவின் இறைவாக்கு அவரில் நிறைவேறியுள்ளது என்று அறிவிக்கிறார். ஆரம்பத்தில் மக்கள் அவரைப் பாராட்டினாலும், பின்னர் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு, எலியா மற்றும் எலிசா காலத்தில் இஸ்ரயேலர்களை விட பிற இனத்தவர்களுக்கு கடவுளின் அருள் வெளிப்பட்ட நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார்.
இதனால் கோபமடைந்த மக்கள் இயேசுவை நகரத்திற்கு வெளியே கொண்டு சென்று மலையிலிருந்து தள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் இயேசு அவர்களிடையே கடந்து அங்கிருந்து சென்றுவிடுகிறார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
நம் ஆண்டவரின் பொதுப் பணியின் தொடக்கம் எவ்வளவு ஆழமான சிந்தனையைத் தருகிறது! யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதும், கப்பர்நாகூமைத் தமது ஊழியத்தின் மையமாக ஏற்படுத்தியதும் அடுத்ததாக, இயேசு தமது சீடர்களை அழைக்கத் தொடங்கினார் என்று அறிகிறோம். முதல் வாசிப்பில் புனித பவுல், கொரிந்தியர்களிடம் பேசும்போது மனித ஞானத்தையும் பேச்சுத்திறமையையும் சார்ந்திருக்கவில்லை என்று கூறுகிறார். மாறாக, “இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும்” மையமாகக் கொண்டு அறிவித்தார். அவர்களுடைய நம்பிக்கை மனித ஞானத்தின் மீது அல்லாமல், கடவுளின் வல்லமையின் மீது இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
நற்செய்தியில் இயேசு தமது சொந்த ஊரான நாசரேத்திற்குச் செல்கிறார். ஏசாயாவின் இறைவாக்கை வாசித்துவிட்டு, “இன்று இந்த மறைநூல் வாக்கு உங்கள் காதுகளில் நிறைவேறிற்று” என்று அறிவிக்கிறார். ஆரம்பத்தில் மக்கள் அவருடைய அருள்மிகு வார்த்தைகளைக் கேட்டு வியந்தனர். ஆனால், “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” என்று கூறி அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
இங்கே ஒரு முக்கியமான உண்மை நமக்குத் தெரிகிறது: அலட்சியம் சில நேரங்களில் நம்பிக்கைக்குத் தடையாக மாறிவிடுகிறது. நாசரேத்து மக்கள் இயேசுவை தங்களுக்குத் தெரிந்த ஒருவராக மட்டுமே பார்த்தார்கள்; ஆனால் அவரில் செயல்பட்டுக் கொண்டிருந்த கடவுளின் வல்லமையை அறிந்துகொள்ளவில்லை.
நற்செய்திகளைப் புரட்டிப் பார்த்தால், இயேசு நாசரேத்தை விட்டு வெளியேறிய பிறகும், அவர் அந்த ஊரில் சில காலங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக இருந்திக்கூடும். ஆனால், அவர் மீண்டும் நாசரேத்திற்குத் திரும்பியதாக எந்தப் பதிவும் இல்லை. அவர்கள் அவரை இழந்தார்கள்.
நம்முடைய வாழ்க்கையிலும் இதே நிலை ஏற்படக்கூடும். “இவரை எனக்குத் தெரியும்”, “இவர் இப்படித்தான்”, “அந்த குடும்பமே இப்படித்தான்” என்று நம்முடைய அறிவாலும் அனுபவங்களாலும் மதிப்பிட்டு ஒதுக்குவோம். ஆனால் கடவுள் நம்முடைய புரிதல்களைவிட மிகப் பெரியவர். அவருடைய மதிப்பீடு வேறு.
“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற எண்ணம், கடவுளின் அருளை, தயவை ஏற்றுக்கொள்ள முடியாதபடி நம்மைத் தடுக்கலாம். நாசரேத்து மக்கள் இயேசுவை அறிந்தவர்கள். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நாமும் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருக்கலாம், ஞாயிறுதோறும் ஆலயத்திற்குச் செல்லலாம், மறைநூலை வாசிக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமானது, இயேசு வந்தது நம்முடைய வாழ்க்கையை வெறுமனே மேம்படுத்துவதற்காக அல்ல மாறாக, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை முழு மனிதனாக மீட்டு, புதிய வாழ்க்கையை அளிப்பதற்காக என்பதை ஏற்பதாகும்.
முதல் வாசகத்தில் பவுல் தன்னைப் பெருமைப்படுத்தாமல், தாழ்மையுடன் கொரிந்தியர்களிடம் சென்றார் என்றும் அவர் மனிதர்களின் ஞானத்தைக் காட்டிலும் கடவுளின் வல்லமையை நம்பினார் என்றும் சாட்சியமாக கூறுகிறார். பவுலின் இக்கூற்று நமக்கு சிறந்த படிப்பினையாக உள்ளது. ஆண்டவரின் படிப்பினையிலும், அவரது வெளிப்பாட்டிலும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்முடைய இதயங்களைத் திறந்து, “ஆண்டவரே, என் புரிதலைவிட உமது வல்லமையை நம்ப எனக்கு அருளைத் தாரும்” என்று மன்றாட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நாசரேத்து மக்களைப் போலன்றி எனது நம்பிக்கை எனது மனித ஞானத்தின் மீது அல்ல, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த உமது வல்லமையின் மீது நிலைத்திருக்கட்டும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
