உண்மைக்குச் சாட்சியம் சீடத்துவத்தின் இலட்சியம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 21ஆம் வாரம் -வெள்ளி
29 ஆகஸ்ட் 2026 
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு

1 கொரி 1: 26-31
மாற்கு  6: 17-29

உண்மைக்குச் சாட்சியம் சீடத்துவத்தின் இலட்சியம்!

முதல் வாசகம்.

இந்த வாசகத்தில், கடவுள் உலகத்தின் பார்வையில் பலவீனமாகவும், தாழ்ந்தவர்களகவும்  கருதப்படுகிறவர்களையே தேர்ந்தெடுத்து, தமது வல்லமையை வெளிப்படுத்துகிறார் என்று பவுல் கூறுகிறார். மனிதர்களின் ஞானம், செல்வம், பதவி அல்லது பெருமை ஆகியவற்றால் நாம் கடவுளுக்கு முன் பெருமை கொள்ள முடியாது. நம்முடைய ஞானமும், நீதியும், தூய்மையும், மீட்பும் கிறிஸ்துவிலிருந்தே வருகின்றன.

எனவே, மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்’ என்கிறார’ பவுல். 

நற்செய்தி.

இன்று,  திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவுகூரப்படுவதால், நற்செய்தியானது, மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருமுழுக்கு யோவான், ஏரோது தனது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை திருமணம் செய்தது தவறு என்று கண்டித்தார். இதனால் ஏரோதியாள் யோவானின் மீது கோபம் கொண்டாள். ஏரோது யோவானை சிறையில் அடைத்திருந்தாலும், அவன் யோவானை ஒரு நீதிமானாக மதித்து, அவருடைய படிப்பினைக்கு செவிசாய்த்தான்.  

ஆனாலும், ஏரோதின் பிறந்தநாள் விருந்தில், ஏரோதியாளின் மகள் நடனமாடி ஏரோதைக் கவர்ந்தாள். அவள் கேட்ட எதையும் தருவதாக ஏரோது வாக்குறுதி அளித்தான். அவளுடைய தாயின் தூண்டுதலால், திருமுழுக்கு யோவானின் தலையைத் தட்டில் கொண்டு வர வேண்டும் என்று அவள் கேட்டாள். வாக்குறுதியாலும் விருந்தினர்களின் முன்னிலையாலும் கட்டுப்பட்ட ஏரோது, யோவானைக் கொல்ல உத்தரவிட்டான். காவலர்  அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள் என்று மாற்கு பதிவுச் செய்துள்ளார். 

சிந்தனைக்கு.

இன்று திருஅவை திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூர்கிறது. உண்மைக்காகவும் நீதிக்காகவும் துணிந்து நிற்க வேண்டும்; மனிதர்களைத் திருப்திபடுத்த உண்மையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற படிப்பினையை இன்று அறிய வருகிறோம்.  மேலும்,  தவறான ஆசை, பெருமை, பழிவாங்கும் மனம் ஆகியவை நம்மை தீமையான முடிவுகளுக்கு அழைத்துச் செல்லும் என்பதும் இன்றைய அழுத்தமான போதனையாகும். 

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், “உங்களுள் மனித அளவுகோலின்படி ஞானிகள் பலர் இல்லை; வலிமைமிக்கவர்களும் உயர்குடியினரும் பலர் இல்லை” என்று கூறுகிறார். உலகத்தின் பார்வையில் பலவீனர்களாகத் தோன்றுகிறவர்களையே கடவுள் தேர்ந்தெடுத்து, தமது பணிக்குப் பயன்படுத்துகிறார். ஆகவே, நம்முடைய திறமை, பதவி, செல்வம் அல்லது சமூக அந்தஸ்து அல்ல; கடவுள்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையே நமது உண்மையான பெருமை என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வுலகில் நமக்குப் பெருமை சேர்க்கும் அனைத்தும் ஒருநாள் நம்மைவிட்டு நீங்கக்கூடும்.  எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் அது சாவோடு வராது.” ஆம், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும், அது நம்முடன் நிரந்தரமாக இராது ; மனித வாழ்க்கையும் செல்வமும் நிலையற்றவை. 

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அரசன் ஏரோதிடம் உண்மையைத் துணிந்து எடுத்துரைக்கிறார். “உன் சகோதரனுடைய மனைவியை நீ வைத்திருப்பது முறையல்ல” என்று அவர் அஞ்சாமல் கூறுகிறார். உண்மையைப் பேசியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியில் கொல்லப்படுகிறார். யோவானின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்கிறது: உண்மையைப் பேசுவது எப்போதும் எளிதானது அல்ல; ஆனால் உண்மைக்காக நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே நமக்கான அழைப்பு.  உண்மைக்குத் துணைபோகும் ஒவ்வொருவருக்கும் தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தை.
 
இன்று  பல சூழ்நிலைகளில் உண்மைக்கும் வசதிக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. குடும்பத்தில், பணியிடத்தில், சமூகத்தில்—சில நேரங்களில் உண்மையைச் சொன்னால் நமக்கு இழப்பு ஏற்படலாம். ஆனால் யோவான் திருமுழுக்கு நமக்கு நினைவூட்டுவது இதுதான்: உண்மைக்காக ஏற்படும் இழப்பு, கடவுளின் பார்வையில் தோல்வி அல்ல அதுவே நமது வெற்றிக்கான மகுடம். 

எனவே, நமது பலவீனங்களையும் குறைகளையும் கடவுளிடம் ஒப்படைத்து, அவர் நம்மைத் தேர்ந்தெடுத்த கருவிகள் என்பதை நம்புவோம். உலகம் மதிக்கும் பெருமையைத் தேடாமல், உண்மை, நேர்மை, தாழ்மை, துணிவு ஆகியவற்றோடு வாழ்வோம். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும்  ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ எனும் வரிகளுக்கேற்ப வாழ்வோமானால்  நம்ராலும்  கிறிஸ்துவின சீடர்களாக மகுடம் சூட்ட முடியும். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, ‘நான் பெருமைப்பட வேண்டுமானால், ஆண்டவரில் மட்டுமே பெருமைப்படுவேன்’ என்ற புனித பவுலின் வார்த்தைகளை என் வாழ்வின் வழிகாட்டியாகக் கொண்டு வாழ அருள்புரிவீராக. ஆமென் 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image