சிலுவையே மீட்புக்கு வழி; விழிப்பே ஆண்டவரை எதிர்கொள்ளும் வழி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 21ஆம் வாரம் -வியாழன்
27 ஆகஸ்ட் 2026 

1 கொரி 1: 17-25
மத்தேயு  25: 1-13 

 
சிலுவையே மீட்புக்கு வழி; விழிப்பே ஆண்டவரை எதிர்கொள்ளும் வழி!

முதல் வாசகம்

இந்த வாசகத்தில் பவுல், சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை என்பதை வலியுறுத்துகிறார். மேலும், கிறிஸ்து தம்மை அனுப்பியது வெறும் ஞானமான பேச்சுகளுக்காக அல்ல; சிலுவையின் நற்செய்தியை அறிவிக்கவே என்பதோடு,  உலகத்தின் பார்வையில் சிலுவையின் செய்தி மடமையாக தோன்றினாலும் இறைமக்களாக உள்ள நமக்கு அது கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு என்கிறார் பவுல். 

நிறைவாக, நமது ஞானத்தையும் அறிவையும் விட கடவுளின் ஞானம் உயர்ந்தது என்பதோடு,  நமது சொந்த அறிவு அல்லது திறமையை நம்பாமல், சிலுவையில் வெளிப்பட்ட கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் நம்ப வேண்டும் என்பது பவுல் அடிகளின் முக்கிய படிப்பினையாக உள்ளது.

நற்செய்தி.

இன்றைய த வாசகத்தில் இயேசு பத்து கன்னியர்களின் உவமையை கூறுகிறார். அவர்களில் ஐந்து பேர் மணமகனின் வருகை்கான குறிக்கப்பட்ட நேரம் அறிந்திராததினால், முன்யோசனையோடு,  (புத்திசாலிகள்)   தங்கள் விளக்குகளுடன் கூடுதலாக எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள். மற்ற ஐந்து பேர் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

மணமகன் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நள்ளிரவில் மணமகன் வருவதாக அறிவிக்கப்பட்டபோது, புத்திசாலி கன்னியர்கள் தங்கள் விளக்குகளை ஏற்றி தயாராக இருந்தார்கள். ஆனால் எண்ணெய் இல்லாதவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரத்தில் மணமகன் வந்துவிட்டார். தயாராக இருந்த ஐந்து பேர் மணவிருந்துக்குள் சென்றார்கள்; கதவும் மூடப்பட்டது என்று முடிக்கப்படுகிறது இந்த உவமை.

சிந்தனைக்கு.
 
இன்றைய வாசகங்கள் நமக்கு இரு முக்கியமான உண்மைகளை எடுத்துரைக்கின்றன: அவை,  இறைமக்களாகிய நாம் உலகத்தின் ஞானத்தைவிட கடவுளின் ஞானத்தை நம்புவது மற்றும் ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் தயாராக இருப்பது இன்றியமையாதது என்பதாகும்.

முதல் வாசகத்தில், புனித பவுல்  சிலுவையை முன்வைத்து, சிலுவையைப் பற்றிய செய்தி உலகத்தாருக்கு மடமையாக தோன்றலாம் என்றும், அது  நமக்கோ  கடவுளின் வல்லமையும் ஞானம் உள்ளது  என்கிறார்.  மனிதர்களாக நாம் நம்முடைய அறிவு, செல்வம், அதிகாரம், திறமை ஆகியவற்றை நம்பி செயல்படுகிறோம்.  ஆனால் கடவுள் செயல்படும் விதம் பல நேரங்களில் மனித சிந்தனைக்கு மாறாக இருக்கிறது என்பதை நாம் அறிந்துணர்வதில்லை.  

சிலுவை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகத்தின் பார்வையில் சிலுவை தோல்வியின் , அவமானத்தின் மற்றும் பலவீனத்தின்   அடையாளமாக உள்ளது.  அது கொலைக் கருவி. ஆனால் கடவுளின் பார்வையில்  அதுவே வெற்றி, வல்லமை, மீட்பின்  அடையாளம்.  இயேசுவின் தியாகத்தின் வழியாகவே நமக்கு மீட்பு கிடைத்தது.  கடவுள் இயேசுவுக்கு  சிலுவையைத் தேர்ந்துகொண்டார். 

முதல் வாசகத்தின் சிலுவைப் பற்றிய பவுல் அடிகளின்  படிப்பினையும்  இன்றைய நற்செய்தியில் வரும் பத்து கன்னியர்களின் உவமையையும்  மிகவும் அழகாக இணைத்துப் பாரக்கலாம். ஐந்து கன்னியர்கள் புத்திசாலிகள். அவர்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள். மற்ற ஐந்து பேர் விளக்குகளை எடுத்துச் சென்றாலும், கூடுதல் எண்ணெயை எடுத்துச் செல்லவில்லை. மணமகன் வருவதில் தாமதம் ஏற்பட்டபோது அனைவரும் தூங்கிவிட்டார்கள். ஆனால் நள்ளிரவில் மணமகன் வருகிறார் என்ற செய்தி வந்தபோது, தயாராக இருந்தவர்கள் உடனடியாக அவரை வரவேற்க முடிந்தது.

இந்த பத்து கன்னியர் உவமையில்  எண்ணெய் என்பது நமது ஆன்மீகத் தயார்நிலையை நினைவுபடுத்துகிறது. நம்பிக்கை, இறைவேண்டல் , அன்பு, நல்ல செயல்கள், மன்னிப்பு, இறைவார்த்தையின்படி வாழ்தல் ஆகியவற்றால் நமது உள்ளம் நிரம்பியிருக்க வேண்டும். இவை நமது விளக்குக்கான எண்ணெயாக உள்ளன.

பத்து கன்னியர்களிடமும் விளக்குகள் இருந்தன. வெளியில் பார்த்தால் அவர்கள் அனைவரும் தயாராக இருப்பது போலத் தெரிந்தது. ஆனால் இதில் வேறுபாடு அவர்களிடம் இருந்த எண்ணெயில் இருந்தது. அதேபோல் நம்மிடமும் கிறிஸ்தவ அடையாளங்கள் இருக்கலாம். திருப்பலிக்கு வரலாம், இறைவேண்டல், பக்தி முற்சிகள் இவற்றோடு,  சிலுவை அணியலாம், திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் நாம் கேட்க வேண்டிய மிக முக்கிய கேள்வியானது, “என் உள்ளத்தில் இறைவனுக்கான உண்மையான அன்பும் தயார்நிலையும் இருக்கிறதா?” என்பதே.

ஆம், அனுதினமும் வெளிப்புற பக்தியோடு மட்டும் நின்றுவிடாமல், நமது இதயத்தையும் இறைவனுக்காகத் தயார்படுத்த வேண்டும். ஆன்மீக வாழ்க்கையை கடைசி நேரத்திற்கு தள்ளிவைக்கவோ, ஒத்தி வைக்கவோ   கூடாது ஞானமற்ற ஐந்து கன்னியர்கள் எண்ணெய் வாங்குவதை கடைசி நேரத்தில் நினைத்தார்கள். ஆனால் அந்த நேரம் அவர்களுக்கு போதவில்லை. நாளை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று யாராலும் உறுதி செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு நாளையும் இறைவன் கொடுத்த நற்கொடையாக ஏற்றுக்கொண்டு, அவருடன் உறவில் வாழ வேண்டும்.

 இனறு ஆண்டவர் நம்மிடம் மூன்று கேள்விகளைக் கேட்பதாக நினைத்துக்கொள்வோம்:
•    என் விளக்கில் எண்ணெய் இருக்கிறதா? — என் நம்பிக்கை இயேசுவில் வேர் ஊன்றிய நம்பிக்கையா? 
•    ஆண்டவரைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேனா?   
•    நான் எதை மையமாகக் கொண்டு வாழ்கிறேன்? உலக ஞானத்தையா’ அல்லது  கடவுளின் ஞானத்தையா? 

நம் வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தின் இறுதி இலக்கு ஆண்டவருடன் இருப்பதே. அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாது. இப்பயணத்தின் இறுதி நாளை நாம் அறியோம். ஆகவே இயேசுவின் வார்த்தைகளை மனதில் பதிப்போம். கண் கெட்ட பின் சூரிய வணக்கம் வீண்’ என்பார்கள். அதுபோல காலம் கடந்தபின் வருந்துவதும் வீண். 
“ஆகையால்  நமது விளக்கு அணையாமல் இருக்கட்டும். நமது இதயத்தில் நம்பிக்கையின் எண்ணெய் நிறைந்திருக்கட்டும்.  

இறைவேண்டல்.

ஆண்டவரே, நீர் எப்போது வந்தாலும், “ஆண்டவரே, நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லக்கூடியவனாக / சொல்லக்கூடியவளாக நான் இருந்திட என்னை வழிநடத்தும். ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image