ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 பிப்ரவரி 2024, பொதுக்காலம் 4ஆம் வாரம் - வெள்ளி
மலாக்கி 3: 1-4                  
லூக்கா  2: 22-40 

இன்று இயேசு பிறப்பு பெருவிழாவுக்குப் பின் நாற்பதாவது நாள். இன்றைய திருப்பலி   குழந்தைப் பருவ நிகழ்வுகளின்  நிறைவாக அமைகிறது,   இயேசு பிறந்து நாற்பது நாள்களுக்குப் பிறகு, யூத சட்டத்தின்படி கடவுளுக்குக் காணிக்கையாக   ஒப்புக்கொடுக்க அவர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வை  தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி, கடவுளின் தூதர் ஒருவர்  அறிவித்த  செய்தியை குறிப்பிடுகிறார்.  “இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்று.  

இதற்கொப்ப  நற்செய்தி வாசகத்தில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை யோசேப்பும் மரியாவும்  எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.  மலாக்கி இறைவாக்கினர் வாக்கு நிறைவேறிற்று.


நற்செய்தி

எருசலேம் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப் பெற்றோர்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டும். அதாவது,   ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.    எனவே, யோசேப்பும் மரியாவும் அவர்களது கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதற்காகக் குழந்தையை அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.  மேலும், அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு செம்மறியைக் கொண்டு செல்ல இயலாத நிலையில், இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க உடன் கொண்டு சென்றார்கள். 

இந்த அர்ப்பணத்தினால் தான் அவர்  பிற இனத்தாருக்கு மீட்பு அருளும் ஒளியாகவும் பிறந்த இனத்திற்கு பெருமையும் சேர்க்க முடிந்தது. இவருடைய அர்ப்பணமான செயல்கள் பலருக்கு எழுச்சியைக் கொடுக்கும் என்று ஆலயத்தில் முன்னறிவிக்கப்படுகிறது.
.
அப்போது, எருசலேம் ஆலயத்தில் மில் சிமியோன்  எனும் ஒரு நேர்மையாளரை அவர்கள் சந்திக்கிறார்கள்.
அவர் இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர் எனவும், தூய ஆவியின் தூண்டுதலால் அவர் அன்று கோவிலுக்கு வந்திருந்தார் எனவும் லூக்கா குறிப்பிடுகிறார்.

அத்தோடு, மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன என்று அவர் பெருமிதம் கொள்கிறார். தொடர்ந்து, பாலகன் இயேசு வளர்ந்து,   இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார்  என்றும், அன்னை மரியாவின்   உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றும் இறைவாக்குரைக்கிறார்.

அங்கு இரண்டாம் நபராக, வயது முதிர்ந்த  அன்னா எனும் கைம்பெண் இறைவாக்கினரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் குழந்தையுப் பற்றிய உண்மையை அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.

சிந்தனைக்கு.

இயேசு பாலகனை அவரது பெற்றோர் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததை  விழாவாக கொண்டாட திருஅவை நம்மை அழைக்கிறது. மேலும், இயேசு உலக மக்கள் அனைவருக்கும்  ஓளியாகத் தோன்றினார்  எனும் உண்மையையும்  இன்று நினைவுகூர்கிறோம்.

யூதர்களுக்குத் திருச்சட்டத்தின்படி தலைப்பேறு ஆண்குழந்தைகள் அனைத்தும் ஆண்டவருக்குரியன (வி்ப.13: 2)  இயேசுவும் தலப்பேறான குழந்தை என்பதால் இச்சட்டத்திற்கு உட்டப்பட்டவராகிறார். அவரது பெற்றோர்கள் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசுவை அர்ப்பணம் செய்கிறார்கள். இங்கே திருக்குடும்பத்தின் ஏழ்மை வெளிப்படுகிறது. அவர்கள் வசதிக்குறைந்தவர்கள் ஒரு செம்மறிக்குப் பதிலாக,  இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.

இயேசுவின் இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில் அவருடைய பெற்றோரைத் தவிர வேறு இரு முதியவர்கள் பங்கேற்று குழந்தையை வாழ்த்தி ஆசி கூறியதை காண்கிறோம்.  அவர்கள் சிமியோன் எனும் நேர்மையாளர்  மற்றும் அன்னா  எனும்  ஒரு விதவைப்பெண்.

கடவுளுக்கு ‘அர்ப்பணம்’ என்பதில் முழுமை அடங்கியுள்ளது. இங்கே நமது அர்ப்பணத்தைப் பேரம் பேச இயலாது. இயேசு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்பதால்,  அவர் தன்னையே முழுமையாய் இறையரசுப் பணிக்காய் அர்ப்பணித்தார்.  எனவேதான், இயேசு ஆலயத்தில் காணாமல் போனபோது, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என்னுடைய தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?  (லூக் 2:49) என்று தன் பெற்றோரை கேட்டார்.

அடுத்து, இன்றைய விழா உணர்ந்தும் மற்றொரு செய்தி துன்பங்களை ஏற்றுக்கொள்வதாகும்.   “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்று மரியா தன்னை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணித்தார். இதன் காரணமாக எழுந்தத் துன்பங்களை ஏற்றுக்கொண்டார். 

கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை வாழ்வில் அர்ப்பண வாழ்வுக்குப் பஞ்சமில்லை. ஆயர்களாக, அருள்பணியாளர்களாக, அருட்சகோதர சகோதரிகளாக உலகம் முழுவதும் மணத்துறவு, கீழ்படிதல் மற்றும் எளிமை ஆகிய மூன்று அடிப்படை தன்மைகளை ஏற்று இறைமக்களுக்காக வாழ்வோர் ஆயிரமாயிரம். இவர்களது முன்மாதிரியில் திருஅவை பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்து வாழும் பொதுநிலையினரின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. 

இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின் வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது என்பதை அறிந்த நாம், அவரில் நம்மை அர்ப்பணித்து வாழும்போது, நமது வாழ்வும் நிறைவுபெறும் என்பதை ஏற்க வேண்டும்.  முழு அரப்பணம் என்பது சுயநல மற்றது, பிரதிபலன் எதிர்ப்பாராதது. திருமுழுக்கால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவோடு கொண்ட அருள் வாழ்வுக்கு அர்ப்பணமானவர்கள் என்பதை உணர்ந்து, நமது அரப்பண வாழ்வைத் தொடர்வோம். நமது குடும்ப உறுப்பினர்களை அர்ப்பண பூக்களாக இறைவேண்டலில் ஒப்புக்கொடுப்போம். 

இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உமது நற்செய்திக்கான எனது அர்ப்பண வாழ்வில், நான் மேன்மேலும் சிறந்தோங்க என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.

நல்ல பெற்றோராக இருந்து, தன்னுடைய குழந்தைக்கு செய்ய வேண்டிய மறை கூறித்த காரியங்களை மரியாளும், வளனாரும் செய்து கொடுத்தது போல, இன்றைய காலச் சூழலில் பெற்றவர்கள் செய்து கொடுத்து வருகின்றோமா? என்கின்ற வினாவோடும் பங்கேற்பது சிறப்பானது.


எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்ற பெரிய பெரிய வார்த்தைகளில் இன்று வார்த்தைப்பாடுகள் எடுத்தாலும், அருள்நிலை இனியவர் தன் அழைத்தலில் நிலைக்கவும், நல்ல முறையில் வாழவும் வேண்டுமென்றால், தான் தேவ அழைத்தல் முகாமிற்கு சென்ற அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Rosary James (not verified), Feb 02 2024 - 8:47am
Amen 🙏 🙏 🙏