நாம் அடிமைகளா இல்லை அதிகாரமுள்ளவர்களா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 25 ஆம் புதன் 
I: எஸ்: 9: 5-9
II: தொபித்து 13:2, 3, 6, 7, 8
III: லூக்:  9: 1-6

இன்றைய இரு வாசகங்களும் கடவுள் நமக்கு அளிக்கும் சதந்திரமான மகிழ்வான வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றன. அத்தகைய வாழ்வு வாழ நாம் அடிமைகளாக இருக்கிறோமா?  அல்லது அதிகாரம் கொண்டுள்ளோமா எனச் சிந்திக்க வேண்டும். 

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்ரா இறைவனின் கருணையை நினைந்து பெருமையாகப் பேசுகிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை மறந்து உடன்படிக்கையை மீறினர். அவர்களுடைய பாவங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததால் ,தங்களைவிட குறைவாக மதிக்கப்பட்ட பிற இனத்தவரின் நாடுகளில் அவர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்தனர். ஆயினும் கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு விடுதலை அளிக்க மனமிரங்கினார். எருசலேம் ஆலயத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை மன்னன் சைரஸ் மனதில் வரவழைத்தார். 

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் துன்பத்திற்கு ஆளாக நமது பாவங்களும் பலவீனங்களும் காரணமாகின்றன. தீயது என்று தெரிந்தும் உலக மாயைகளுக்கு நாம் அடிமைகளாகி விடுகிறோம். குடி போதைப் பழக்கங்கள் , சிற்றின்ப இச்சைகள், பணம் பதவி மோகம், பொழுது போக்கு,  தொலைக்காட்சி தொடர்கள், சமூக வலைதளங்கள், உணவு, இன்னும் பலவற்றிற்கு நாம் அடிமைகளாய் இருக்கின்றோம். இவற்றில் லயித்து கடவுளை மறக்கின்றோம். ஆயினும் நம் கடவுள் நம்மீது அன்பு கொண்டு தன் வார்த்தைகளாலும்,  பலரின் வழிகாட்டுதலாலும் நாம் மனம் மாறி விடுதலை பெற அழைக்கின்றார். 

இன்றை நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களுக்கு தீய சக்திகளை விரட்டும் அதிகாரம் அளிப்பதை நாம் வாசிக்கிறோம். அத்தகைய அதிகாரம் நமக்கும் தரப்பட்டுள்ளது. நம்மை அடிமைப்படுத்தும் தீய சக்திகளை விரட்ட இயேசு தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மையே நாம் வென்றெடுக்க வேண்டும் என்ற ஆழமான செய்தியை நாம் இன்று உணர வேண்டும். அடிமையின் மக்களாய் நாம் நற்செய்தியை பறைசாற்ற இயலாது. அதிகாரத்தோடு தீயவற்றை விரட்டி இயேசுவை உலகிற்கு பறைசாற்றத் தயாரா?

இறைவேண்டல்
அன்பு இறைவா அடிமைகளாக அல்ல அதிகாரமுள்ள மக்களாய் நற்செய்தி பறைசாற்ற வரமருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்