தேவை அறிந்து உதவி செய்ய தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 24 ஆம் செவ்வாய்  
I: 1 திமொ:   3: 1-13
II: திபா: 101: 1-2. 2-3. 5. 6
III: லூக்: 7: 11-17

பிறருக்கு உதவிக்கரம் நீட்டுதல் என்ற பண்பானது நம்முடைய மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிற பொழுது வாழ்க்கையிலே வெற்றியின் கனியை சுவைக்க முடியும். பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அவரின் தாய் உதவிகரமாக இருந்தார். எனவே அவர் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்திற்கு சென்றார். கல்விக்கண் திறந்த காமராஜர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி உதவி செய்தார். எனவே எண்ணற்ற குழந்தைகள் கல்வி கற்றனர்.  ஒவ்வொரு ஆசிரியரும் தாங்கள் இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு உதவும் கரம் நீட்டுபவர்களாக  தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அவர்கள் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வழிகாட்டுகின்றனர். இவ்வாறாக மனிதர்கள் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவும் கரமாக இருந்து வழிகாட்டும் பொழுது, வாழ்வில் வசந்தத்தையும் நிறைவையும் பெறுகிறோம்.

ஜெபிக்கும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்கள் உயர்வானவை என்று புனித அன்னை தெரசா அவர்கள் கூறியுள்ளார். புனித அன்னை தெரசா ஜெபத்தைக் குறைவாக மதிப்பிடவில்லை. மாறாக,  ஜெபத்தோடு நின்றுவிடாமல் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தேடிச்சென்று உதவக்கூடிய நல்லுள்ளம் படைத்தவராக இருக்கிறார். நயீன் என்னும்  ஊரில்   கைம்பெண் ஒருவர் தன் ஒரே மகனை இழக்கிறார். அந்தப் பெண் கணவனை  முதலில் இழந்திருக்கிறார். இருந்த போதிலும் தன் மகனுக்காக அவர் வாழ்ந்திருக்கிறார்.இப்போது மகனையும் இழந்த நிலையில் வாழ வழியின்றி அனாதையாக கைவிடப்பட்டார்.செய்வதறியாது திகைத்த நிலையில் வாழ்ந்த அவரின் நிலையைக் கண்டு இயேசு தாமாகவே மனமிரங்கி இறந்த அம்மகனுக்கு உயிரூட்டினார்.

நம்மில் எத்தனை பேர் நாமாக முன் முந்து கேட்காமலேயே பிறரின் தேவையை அறிந்து உதவியிருக்கிறோம்? அவ்வாறு நாம் உதவியிருந்தால் அந்த இடத்தில் நாம் இயேசுவை பிரதிபலித்திருக்கிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.மாறாக பல சமயங்களில் உதவி கேட்டு வருபவர்களைக் கூட நாம் உதாசீனப்படுத்துகிறோமே! அத்தகைய மனநிலையை நாம் நிச்சயமாக மாற்ற வேண்டும். நம் முகக்கண்களை மட்டுமல்ல அகக்கண்களையும் திறந்து தேவையில் இருப்பவர்களைத் தேற்ற வேண்டும்.நம் காதுகளை மட்டுமல்ல நம் இதயத்தையும் திறந்து உதவிக்காக சத்தமின்றி எழும் குரல்களை நாம் கேட்க வேண்டும். அப்போது இயேசு நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் உலகிற்கு காட்ட இயலும். எனவே தேவையில் இருக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவும் பண்பை வளர்த்துக்கொள்ளத் தயாராவோம்.

இறைவேண்டல்
எங்களின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் சொல்லும் முன்பே உணர்ந்து நிறைவேற்றும் இறைவனே! உம்மைப் போல பிறரின் தேவை அறிந்து உதவும் மனத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்