தீ மூட்டத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 29 வியாழன்
I: உரோ: 6: 19-23
II: திபா 1: 1-2. 3. 4,6
III: லூக்: 12: 49-53
இந்த உலகத்தில் ஒரு பொருள் ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல் கொண்டது என்றால் அது நெருப்பு மட்டுமே. நெருப்பிற்கு ஒன்றை ஆக்கவும் தெரியும். அழிக்கவும் தெரியும். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தீ மூட்டவே வந்தேன் என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் தீ என்பது நேர்மையையும் உண்மையையும் நீதியையும் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு இந்த உலகத்திற்கு தன்னுடைய போதனைகள் வழியாகவும் தன்னுடைய வாழ்வின் வழியாகவும் மதிப்பீடுகளின் வழியாகவும் உண்மையையும் நேர்மையையும் நீதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவ பிள்ளையும் உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் வாழ அழைக்கப்பட்டுள்ளனர். தீ எவ்வாறு பிறருக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகின்றதோ, அதேபோல நாமும் நம்முடைய வாழ்வில் ஒளியாக இருந்து பிறருக்கு வழிகாட்ட அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவர் இயேசு எந்நாளும் பிறருக்கு வழியாய் ஒளியாய் இருந்து வழிகாட்டியுள்ளார். பார்வையற்றோருக்கு பார்வை கொடுத்தார். நோயுற்றவரை நலமாக்கினார். பாவிகளை மன்னித்து வழிகாட்டினார். போதனைகளின் வழியாக நெறிப்படுத்தினார். இவ்வாறாக ஆண்டவர் இயேசு பிறருக்கு ஒளியாக இருந்தார்.
நம்முடைய திருஅவை 2000 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்பதற்கு காரணமான புனித பவுலடியாரின் பணிகளை மறக்க முடியாது. ஏனெனில் புனித பவுலடியார் இயேசுவை அறிவதற்கு முன்பாக இருள் நிறைந்த இலக்கோடு சென்றார்.இயேசுவை முழுமையாக அறிந்த பிறகு இயேசுவின் உண்மையான சீடராக மாறினார். இயேசுவோடு இருந்த சீடர்களைக் காட்டிலும் இயேசுவை காட்சியால் மட்டும் கண்ட புனித பவுலடியார் மிகுந்த துடிப்போடும் ஆர்வத்தோடும் நற்செய்தியை உலகமெல்லாம் அறிவிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். இயேசுவின் நற்செய்தி என்ற நெருப்பை மக்கள் மத்தியில் பற்றி எரியச் செய்தார். அதன் விளைவாக உயர்ந்தது தான் நம்முடைய கத்தோலிக்கத் திருஅவை.
நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் இருள் நிறைந்த வழியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருமே இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த ஒளியைக் கொடுக்க முயற்சி செய்வோம். நோயாளிகளுக்கும் பாவிகளுக்கும் உரிமை இழந்தவர்களுக்கும் அன்போடும் பரிவோடும் ஒளியாய் இருந்து வழிகாட்ட முன்வருவோம். இயேசு இந்த உலகில் கொண்டுவந்த நெருப்பு நல்ல நோக்கத்தோடு பற்றி எரிந்த நெருப்பு. ஆனால் அலகை கொண்டு வந்த நெருப்பு இருளில் தள்ளக்கூடிய நெருப்பு. எனவே இயேசு கொண்டுவந்த புனிதத்தின் நெருப்பை நம்முடைய வாழ்வில் கண்டு வழிநடக்க, நம்மையே அவர் பதம் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின் பாதையில் பிறருக்கு ஒளியாக இருந்து வாழ்வு கொடுக்க முடியும்.
இறைவேண்டல்
ஒளியாம் இறைவா! ஆண்டவர் இயேசுவைப் போல பிறர் வாழ்வு வளம் பெற ஒளி கொடுக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.