பவுலின் மனமாற்றம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் மூன்றாம் புதன்
 திருத்தூதர் பவுல் - மனமாற்றம் விழா 
I: திப: 22: 3-16
II: திபா 117: 1. 2
III: மாற்: 16: 15-18

இன்று அன்னையாம் திருஅவையோடு இணைந்து திருத்தூதரான புனித பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவரின் மனமாற்ற விழா நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இவரின் மனமாற்றம் இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்ய இவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பாக இருக்கின்றது. புதிய மனிதனாக நமது இலக்கை நோக்கி பயணிக்க மனமாற்ற வாழ்வு என்பது அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருத்தூதர் பவுலடியார்.

நான் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முன்பாக  அருட்பணி பயிற்சி பெற்ற பொழுது  குடி மற்றும் போதை நோயாளிகளுக்கான அருட்பணி செய்வது எப்படி என்பது பற்றி இரண்டு நாட்களுக்கு வகுப்பு இருந்தது. அப்பொழுது குடி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு நலமோடு வாழ்ந்து வருகின்ற ஒரு நபரின் பகிர்தல் மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. அந்த நபர் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இலங்கையில் இருந்து அகதியாக நம் நாட்டிற்கு வந்தவர். அவர் தங்கியிருந்த முகாம் அருகில் மதுக்கடை இருந்ததால் அவர் தவறான நண்பர்களோடு சேர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தால் மனமாற்றம் பெறுவார் என்று திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் குடியின் வேகம் அதிகமானது. எனவே இவர் குடி நோயினால் பாதிக்கப்பட்டு குடிக்கு அடிமையானார். தன் மனைவியை விட்டு பிரிந்து செல்லும் அளவுக்கு சூழல் ஏற்பட்டது. பிரிந்து சென்ற மனைவி நிரந்தரமாக விவாகரத்து வாங்கி விட்டார். அவருக்கு உறவுகளின்றி அவருடைய வாழ்வே குடிக்கு அடிமையானது.   ஒரு முறை மது அருந்திவிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுதுதான் இவர் எப்படியாவது இதிலிருந்து வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

ஒரு நல்ல அருள்பணியாளரை சந்தித்தார். அந்த அருள்பணியாளர் குடி நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் பணியினை செய்து வந்தார். அவரின் வழிகாட்டுதலில் குடி நோய்க்கு சிகிச்சைபெற்று இப்பொழுது அவர் மிகச்சிறந்த ஒரு சமூகப் பணியை செய்து வருகிறார். அந்த அருள்பணியாளரோடு இணைந்து குடி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நண்பர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். பல நபர்களுக்குத் தன் வாழ்வையே பாடமாக வழங்கி வருகிறார். குடிநோயிலிருந்து மனமாற்றம் அடைந்து இப்பொழுது மிகச் சிறந்த ஒரு மனிதராக இருப்பதற்கு அந்த அருள்பணியாளர் தான் முக்கிய காரணம். அந்த அருள்பணியாளர் வழியாக கிடைத்த வாய்ப்பை குடி நோயினால் பாதிக்கப்பட்ட அந்த மனிதர் பயன்படுத்திக்கொண்டார். எனவே புதிய வாழ்வையும் புதிய மாற்றத்தையும் பெற்றார். இப்போது தன்னுடைய இலக்கு நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளார். குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களை நலமோடு வாழ ஆற்றுப்படுத்துதல் பணியினை நற்செய்தி பணியாக செய்து வருகிறார். இவரின் மனமாற்ற வாழ்வு எண்ணற்ற குடி நோயாளிகளுக்கு வளமான புது வாழ்வை வழங்கி வருகின்றது. 

இன்று நம் தாய் திருஅவையோடு  நாம் கொண்டாடும் புனித பவுலடியார் மனமாற்ற விழா புது வாழ்வை வழங்கும் நற்செய்தி பணிக்கான அழைப்பாக இருக்கின்றது. இவ்வாறு அந்த குடிநோயாளி ஒரு அருட்பணியாளர் வழியாக அந்த நோயிலிருந்து விடுதலை பெற்றாரோ,  இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களை கொல்ல  வேண்டும் என்று கோபத்தோடு பயணித்த பவுலாகிய சவுலை இயேசு மன மாற்றினார். பவுலடியார் மறைநூலை முறைப்படி கற்றவர். யூத மறைதான் இந்த உலகத்திலேயே சிறந்தது என்று பெருமை பாராட்டினார். யூத மறையை பின்பற்றாமல் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளைப் பின்பற்றியக் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று யூதத் தலைவர்களிடம் அனுமதி பெற்றார். இன்றைய முதல் வாசகம் திருத்தூதர் பவுல் மனமாற்றத்திற்கு முன்பாக எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார் என்பது பற்றி சுட்டிக்காட்டுகிறது. மேலும் அவருக்கு மனமாற்றம் எவ்வாறு கிடைத்தது என்ற நிகழ்வும் சுட்டிக்காட்டப்படுகிறது. குதிரையில் படைவீரர்களோடு எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நெருங்கிய பொழுது மனமாற்ற வாழ்வை பெற்று இயேசுவின் அழைப்பை பெற ஆண்டவர் இயேசு அவருக்கு காட்சியில் தோன்றினார்.

இந்த நிகழ்வு மிக அருமையாக முதல் வாசகத்தில் பின்வருமாறு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.    "நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, `சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?' என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், `ஆண்டவரே நீர் யார்?' என்று கேட்டேன். அவர், `நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே' என்றார். என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. `ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?' என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, `நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்' என்றார். 

திருத்தூதர் பவுல் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் வழியாக பெற்ற இந்த மனமாற்ற வாழ்வும் இறை அழைப்பும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்த கிறிஸ்தவர்களை கொன்றொழிக்க வேண்டும் என்று திருத்தூதர் பவுல் நினைத்தாரோ அதே கிறிஸ்தவர்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டும் 13 திருமுகங்களை எழுதி அவர்களைத் திடப்படுத்தினார். 

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறிய "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்"  (மாற்கு 16:15) என்ற வார்த்தைகளை வாழ்வாக்கி அதற்கு உயிர் கொடுத்தவர் திருத்தூதர் பவுல் ஆவார். இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு இருந்து அதிக அனுபவ அறிவைப் பெற்றிருந்தனர். திருத்தூதர் பவுலோ இயேசுவோடு அதிகம் பயணிக்கவில்லை என்றாலும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவை காட்சியாக கண்டு அவரின் அழைப்பை பெற்ற பிறகு அந்த அனுபவத்தின் வழியாகத் தன்னுடைய மறை அறிவையும் பயன்படுத்தி திருமுகங்களின் வழியாக உலகெல்லாம் நற்செய்திப் பணியை செய்து வந்தார். இவ்வாறு திருத்தூதர் பவுல் இல்லை என்றால் இந்த உலகத்தில் கிறிஸ்தவ மதிப்பீடுகள் இவ்வளவு அதிகமாக அறிவிக்கப்பட்டிருக்காது. இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற சீடர்களின் பணிகளைக் காட்டிலும் திருத்தூதர் பவுலின் பணிகள் அதிகமானவையாகும். அவர் செய்த நற்செய்திப் பணி இயேசுவை உலகிற்கு யார் என்று சுட்டிக் காட்டியது. இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகள் இன்றளவும் உலகத்தில் மனிதநேய செயல்பாடுகள், தூய வாழ்வு, உண்மை, நீதி, நேர்மை போன்றவற்றின் வழியாக வாழ்வாக்கப்பட்டு வருகின்றது.

திருத்தூதர் பவுலின் மனமாற்ற விழா  இயேசுவின் சீடர்களாகிய நமக்கு எத்தகைய வாழ்வியல் பாடத்தை கொடுக்கின்றது என்பது பற்றி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.  இயேசு நமக்கு ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாகவும் திருவழிபாட்டு கொண்டாட்டங்களின் வழியாகவும் நம் அன்றாட அனுபவங்களின் வழியாகவும் அவரை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கிறார். இயேசுவை முழுமையாக அறிந்து அவரை அனுபவித்து  அவரின் நற்செய்தி மதிப்பீடுகளை அவரை அறியாத மக்களுக்கு நம்முடைய சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். பல நேரங்களில் இத்தகை நிலையை மறந்து இவ்வுலகம் சார்ந்த பணம், சாதி, மொழி, உயர்ந்தவர் தாழ்ந்தவர், படித்தவர் படிக்காதவர் போன்ற சுயநலப் போக்கோடு நம் வாழ்வை வாழ்ந்து வருகின்றோம். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திருத்தூதர் பவுலை  போலவும் குடி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணம் பெற்று எண்ணற்ற குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்துவரும் அந்த நல்ல மனிதரை போலவும் மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து நற்பணிகளை நற்செய்தி பணியாக செய்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் : 
தாயும் தந்தையுமான இறைவா! திருத்தூதர் பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடி மகிழ்கின்ற நாங்கள், உம்மையே முழுவதுமாக பற்றிக்கொண்டு மனமாற்ற வாழ்வில் நிலைத்திருக்க அருளைத் தாரும். உமது நற்செய்தியை முழுமையாக நம்பி அதைப் பிறருக்கு திருத்தூதர்  பவுலைப் போல எங்களுக்கு கிடைத்த அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டு நற்செய்திப் பணி செய்திட தேவையான அருளையும் தூய ஆவியின் வழிநடத்துதலையும் தந்தருளும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்