நமது நம்பிக்கை குருட்டு நம்பிக்கையா ?அல்லது இறைவிருப்பத்தை ஏற்பதா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 1 வியாழன் (11.01.2023)
மு.வா: 1 சாமு: 4: 1-11
ப.பா:திபா 44: 9-10. 13-14. 23-24
ந.வ: மாற்: 1: 40-45
நமது நம்பிக்கை குருட்டு நம்பிக்கையா ?அல்லது இறைவிருப்பத்தை ஏற்பதா?
ஒருமுறை பிரிவினை சபையைச் சார்ந்த ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றேன். அவர் சற்று உடல் நலக்குறைவோடு இருந்தார். அவரைச் சென்று சந்தித்த போது நான் அக்கறையுடன் " சாப்பிட்டாயா? மருத்துவமனைக்குச் சென்றாயா? மருந்துகள் எடுத்தாயா? " எனக் கேட்டேன். அவரோ இல்லை எனக் கூறினார். தொடர்ந்து எனக்கு ஆண்டவர்தான் மருத்துவர். நான் மருந்து எடுக்க மாட்டேன்.செபிப்பேன்.சுகமாகிவிடும் என்று கூறினார். உடனடியாக நானும் "உன் நம்பிக்கை பாராட்டுதற்குரியதுதான். ஆனால் முட்டாள்தனமானது. எந்த முயற்சியும் எடுக்காமல் எவ்வாறு நோய் சரியாகும். மருத்துவரின் மூளையும் கடவுள் கொடுத்ததுதான். மருந்துகளும் கடவுளின் படைப்பில் உள்ள பொருட்களால் செய்யப்பட்டதுதான். நம்பிக்கை மட்டும் போதாது. முயற்சியும் எடுக்க வேண்டும். முடிவை ஆண்டவருடைய விருப்பத்திற்கேற்ப விட வேண்டும் " என்று கூறி சற்று கோபமாகவே வந்துவிட்டேன்.
அன்புசகோதர சகோதரிகளே நம்மிலே பலருக்கு இது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகள் உண்டு. எதாவது காரியம் செய்ய வேண்டுமென்றால் சோதிடம் பார்ப்பது போல விவிலியத்தை திறந்து பார்த்து பார்க்கும் போது கிடைக்கின்ற வார்த்தையைக் கொண்டு நடக்கப்போவதை யூகிப்பது முட்டாள்தனமான நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். இப்படியெல்லாம் செய்வதால் நமக்கு எல்லாம் சாதகமாகிவிடும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். ஆனால் அவை அர்த்தமற்றவை.
இன்றைய முதல் வாசகத்திலும் அத்தகைய ஒரு நிகழ்வைக் காண்கிறோம். பெலிஸ்தியரிடம் தோல்வியுற்ற இஸ்ரயேலர் ஆண்டவரின் பேழையை அவர்கள் மத்தியில் கொண்டுவந்தால் வெற்றி பெற்று விடலாம் என எண்ணினர். அவர்கள் நம்பிக்கையில் தவறில்லை. அதே சமயம் அந்நம்பிக்கையோடு அவர்களுடைய போர் யுத்திகளையும், வீரத்தையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். மாறாக ஆண்டவரின் பேழை வந்த உடனேயே தங்களுக்குத் தான் வெற்றி என்ற எண்ணத்தில் முழக்கமிட்டு, எதிராளிகளை இன்னும் அதிக கவனமாகவும் வீரமாகவும் போர்புரிய தூண்டிவிட்டு தோற்றுப் போய் நின்றனர் இஸ்ரயேலர். ஆண்டவர் தங்களை தோற்கடித்துவிட்டார் என பழியையும் அவர்மேல் தூக்கிப்போட்டனர்.
இதுவல்ல உண்மையான நம்பிக்கை. ஆண்டவரிடம் நம்பிக்கையுள்ள இறைவேண்டலோடும் நாம் செய்ய வேண்டியவற்றையும் செய்துவிட்டு இறைச் சித்தத்திற்கு பணிவதே உண்மையன நம்பிக்கை. இன்றைய நற்செய்தியில் நாம் காணும் தொழுநோயாளர் இயேசுவிடம் அவருடைய விருப்பத்தை நாடினார். நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும் என்றார்.
நண்பர்களே! நாமும் நம்மிடமுள்ள குருட்டுத்தனமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு, இறைவேண்டலோடும் இறைவிருப்பத்தை நாடுவோம். அதுவே உண்மையான நம்பிக்கை. அந்நம்பிக்கை நமக்குத் தேவையானதைப் பெற்றுத் தரும். அத்தகைய நம்பிக்கையில் வளர இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உமது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் வண்ணம் எங்கள் நம்பிக்கை வளரவும், தேவையற்ற மூடத்தனமான நம்பிக்கைகளை நாங்கள் தூக்கி எறியவும் வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்