கனிந்த உள்ளமா? கடின உள்ளமா? நன்றி உள்ளமா? என்னில் இருப்பது எது? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் முதலாம் வியாழன்
I: எபி: 3: 7-14
II:  திபா: 95: 6-7. 7-9. 10-11
III: மாற்: 1: 40-45

உள்ளம் பல உணர்வுகளைப் பெற்றது. அவற்றில் நல்லவற்றை பெருகச் செய்யும் போது நம் வாழ்வு செழிக்கும்.இன்றைய வாசகங்களில் நாம் மூன்று விதமான உள்ளங்களைப் பார்க்கிறோம். இவற்றை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மில் மேலோங்கி இருப்பது என ஆய்வு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.

கனிந்த உள்ளம் ......
முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுளின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்களுக்கு தன் கனிந்த உள்ளத்தால் ஏராளமான கணக்கிலடங்காத நன்மைகளை அவர் செய்துள்ளார். அதே போல நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். "நீர் விரும்பினால் என்னை நலமாக்கும் " என மன்றாடிய தொழுநோயாளரின் மன்றாட்டை ஏற்று "விரும்புகிறேன் "என்று சொல்லி நலமாக்கினார் இயேசு. இது அவருடைய கனிவான உள்ளத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. கடவுளின் குழந்தைகளாய் இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்பும் நமக்கு இத்தகைய கனிவான உள்ளம் இருக்கிறதா?  நம்மை அண்டி வருவோருக்கு கடவுள் காட்டிய கனிவை நம்மால் காட்ட முடிகிறதா? சிந்திப்போம்.

கடின உள்ளம்......
இத்தகைய மனநிலைக்கு இஸ்ரயேல் மக்கள் சிறந்த உதாரணம். அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்த போதும் கடவுள் அவர்களுக்கு நன்மைக்கு மேல் நன்மை செய்தார். ஆனால் அவர்களுடைய உள்ளமோ கடினமாயிற்று. பிறருடைய பார்வையில் நாம் கடின உள்ளத்தவர்களா? நமக்கு நன்மை செய்தவர்களுக்குக் கூட நாம் கடின உள்ளத்தவராய் இருந்தால், மற்றவர்களுக்கு நாம் எத்தகைய உள்ளத்தை வெளிப்படுத்தப்போகிறோம்? சிந்திப்போம். மனம்மாறுவோம்

நன்றி உள்ளம் .....
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் தொழுநோயாளர் குணமடைந்த பின் இயேசு யாரிடமும் கூறவேண்டாம் என எச்சிரிக்கை செய்தபின்னும் மற்றவருக்கு அறிவித்து இயேசுவைப் பெருமைப்படுத்தினார். இதனால் இயேசுவைத் தேடி பலர் சென்றனர் என வாசிக்கிறோம். நன்றி நிறைந்த உள்ளம் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார் அவர்.

அன்புக்குரியவர்களே இம்மூவகை மனநிலைகளை நாம் சிந்திக்கும் போது கனிவான உள்ளத்தையும் நன்றி நிறைந்த உள்ளத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கடின உள்ளத்தை நாம் களைந்தெறிய வேண்டும் என்பதையும் கடவுள் உணர்த்துகிறார். எனவே இதற்கான வரத்தை இறைவனிடம் கேட்போம்.

 இறைவேண்டல் 
இறைவா ! கடினமான எங்கள் உள்ளத்தை அகற்றிவிட்டு உம்மை போன்ற கனிவான உள்ளத்தையும் தொழுநோயாளரிடமிருந்த நன்றி நிறைந்த உள்ளத்தையும் தருவீராக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்