அன்னை மரியாள் காட்டிய சமூக நீதி! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம் 
I: 1 யோவா:  5: 14-21
II: திபா: 149: 1-2. 3-4. 5-6, 9
III: யோவா:  2: 1-12

நாம் வாழும் வாழ்க்கையில் பலர் சாதிக்கின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் இருக்கின்றனர். காரணம் என்னவென்றால் அதிகமாக வாய்ப்பு கொடுக்கும் பொழுது வாழ்வில் சாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக வாய்ப்பு மறுக்கப்படும் பொழுது சாதிக்கக் கூடிய சூழல் சரியாக அமைவதில்லை. எனவே சமூக நீதியோடு தேவையில் இருப்பவர்களை மனதில் வைத்து சமூகப் பணியை செய்யும் பொழுது ஏழைகள் பணக்காரர்களாகவும் வாழ்வில் உயர்ந்தவர்களாகவும் மாற முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவின் வழியாக சமூக நீதியானது வெளிப்படுகிறது. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற சமத்துவ மனநிலையை அன்னை மரியாவினுடைய செயல் வழியாக  நாம் அறிகின்றோம்.  கானாவூர் திருமணத்தைப் பற்றி இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த நற்செய்தி பகுதியை நாம் அதிகமாக வாசித்து தியானித்து இருக்கிறோம்.  இந்த நற்செய்தி பகுதி அன்னை மரியாள் காட்டிய சமூக நீதியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

யூத சமூகத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறதென்றால் விருந்து உபசரிப்பு என்பது மிகவும் முக்கியம். விருந்து உபசரிப்பில் பற்றாக்குறை இருந்தால் நிகழ்வு நடத்துகின்ற அந்த குடும்பம் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். அது ஒரு பக்கம். விருந்து தொடக்கத்தில் பணக்காரர்களுக்கும் படித்தவர்களுக்கும் வழங்கப்படும். இறுதியில் தான் ஏழை எளிய மக்கள் விருந்து உண்பார்கள். ஆனால் அன்னை மரியா கடைசியாக வந்த ஏழைகளுக்கும் திராட்சை இரசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முதல் அற்புதத்தை இயேசு செய்ய வழிகாட்டினார். இது ஒரு பக்கம்.

அன்னை மரியாவின் பரிந்துரையின் பெயரில் ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் அற்புதத்தை செய்தார். இந்த அற்புதம் செய்ய அன்னை மரியாள்  இயேசுவை கேட்டுக் கொண்டதற்கு காரணம் சமூக நீதியை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே. செல்வந்தர்கள் மட்டும் போதிய உணவு உண்டால் போதாது ; ஏழை எளிய மக்களும் நிறைவுள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  அன்னை மரியாளின் மனதில் உதித்ததை நாம் உணரமுடிகிறது.தன்னுடைய புகழ்ச்சி பாடலிலே செல்வரை வெறுங்கையராய் அனுப்புவார். பசித்தோரை நலன்களால் நிரப்புவார்  என அன்றே புரட்சியை ஏற்படுத்தினார் நம் அன்னை.

நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க நாம் உழைக்க வேண்டும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். செல்வந்தர்கள் முதல் ஏழைகள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். ஏனெனில் அனைவருமே கடவுளின் பிள்ளைகள். எனவே அனைவருக்கும் சமூக நீதி சரியாக கிடைக்கும் பொழுது நாம் ஆண்டவரின் இறையாட்சி  மதிப்பீட்டிற்கு  சான்று பகர முடியும். எனவே இந்த சமூகத்தில் இருக்கும் அவல நிலைகளையும் அநீதிகளையும் முறியடித்து சமூகநீதி மண்ணில் மலர உழைக்கத் தேவையான அருளை வேண்டுவோம். அதற்கு அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக உருக்கமாக மன்றாடுவோம் .

 இறைவேண்டல்
நீதியின் தேவனே!  சமூக நீதி இம்மண்ணில் மலர நீதியின் தேவனாய் இருந்து எங்கள் ஒவ்வொருவரையும் நீதியின் பாதையில் வழிநடத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்