மக்கள் தலைவர்! |Leader

சாக்ரட்டீஸின் தத்துவம், ஹோமரின் இலக்கியம், அலெக்ஸாண்டரின் வீரம், நாகரிகம், பண்பாடு என்று கிரீஸ் உலக நாகரிகத்திற்கு அளித்த நன்கொடை பலப்பல.

 

அதுபோலவே 'மக்களாட்சி' என்ற தத்துவம் முதலில் தந்ததும் இங்கே. கி.மு.வில் பல நகர அரசில் குடியரசு நிலவியதாக அறிய முடிகிறது. பிளேட்டோவின் குடியரசு என்கிற நூல், அதன் இயல்பு - அவசியத்தை உணர்த்தியது.

 

சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் சிந்தனை, நாகரிகம், கல்வி வளர்ச்சி மக்களின் சிந்தனையைத் தூண்டியது. பகுத்தறிவை வளர்த்தது. பேச்சுக் கலை வளர்ந்தது. நாட்டில் புதிய தலைவர்கள் தோன்றினர்.

 

அந்த வகையில் நாம் அறியப்பட வேண்டிய ஒரு வரலாற்று நாயகரின் பெயர்தான் பெரிக்ளஸ்.

 

இவரது காலம் கி. மு. 500 - 429. மிகச்சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர் இவர். அந்த பேச்சின்மூலம் கி.மு. 469இல் குடியரசை அரசியலில் நுழைத்தவர்.

 

இவர் தனது அரசியல் எதிரியான தூஸிடிடெஸ் (Thucydides) (காலம் 460 -400) என்பாரை வீழ்த்தி, ஏதென்ஸ் நாட்டின் ஆட்சியாளர் ஆனார்.ஏதென்ஸ் எப்போதுமே கிரேக்க நகர அரசில் முதலிடம் பெறும் அரசாகும். அதன் பண்டைய புகழ் பெருமைக்கு பெரிக்ளஸ் பெரிதும் காரணமாக இருந்தவர் எனலாம்.

 

இவரே பழங்காலத்தின் மக்கள் தலைவர் எனப் போற்றப்படுகிறார். மிகச்சிறந்த, கட்டுப்பாடான, பல மிக்க அத்தீனியன் ராணுவத்தை இவர் உருவாக்கினார். அங்கே கட்டாய ராணுவ சட்டம் அமலில் இருந்தது. ஒவ்வோர் இளைஞரும் சிறிது காலம் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்றியே தீர வேண்டும். இந்த ராணுவம் மூலமாக பல கலவரங்களை அடக்கி, வெற்றி பெற்றார். ஆட்சியை நிலைக்கவும் செய்தார். பல அழகான பொதுத்துறைக் கட்டடங்களை இவர் தனது காலத்தில் கட்டினார்.

 

உண்மையான ஒரு மக்கள் குடியரசு ஆட்சியை ஏதென்ஸில் நிறுவினார். எல்லா பொது மக்களும் அரசை வெகுசுலபமாக அணுகிட வாய்ப்பு தந்தார்.

 

பொதுமக்கள் அரசுப்பணியில் அமர்ந்திட வாய்ப்பு தரப்பட்டது ஒரு சிறப்பாகும். ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை இவர் தனது ஆட்சியில் அறிமுகம் செய்து வைத்தார். அரசு அலுவலர்க்கு மாத ஊதியம் தரப்பட்டது. பணிவிதிமுறைகள் உருவாக்கப் பட்டன.

 

இவரது மனைவி அஸ்பாஷியா (Aspasia) என்பவர். இவரது காலம் கி.மு. 470-410. மிகச்சிறந்த அழகியாக இவர் கருதப்படுகிறார். அதோடு இவர் அரசியல் உணர்வு மிக்கவராகவும், அரசியல் ஆர்வம் மிக்கவரா கவும் விளங்கினார். இவர் மிகச்சிறந்த தத்துவஞானியான சாக்ரட்டீசுக்கு உதவிகள் புரிந்தார். பெரிக்ளஸ் ஆட்சியின் சிறப்புக்கு இந்த அம்மையாரும் ஒரு காரணம் எனலாம்.

 

இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடக் கலைக்கு, பார்த்தீனன் (Parthenon) கட்டடம் ஒரு சான்றாகும். கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், அறிவியல் என பல்துறை வளர்ச்சி பெரிக்ளஸ் காலத்தில் ஏதென்ஸில் ஏற்பட்டது.

 

இவர் காலத்தில் பக்கத்து நகர அரசான ஸ்பார்ட்டா வுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இச் சமாதான ஒப்பந்தம் கி.மு. 431இல் மீறப்பட்டது. அதன் காரணமாக பிலிப் பேனிசியன் யுத்தம் ஏற்பட்டது. பொதுவாக இக்காலம் நகர அரசுகளில் போட்டியும், பகையும் நிலவிய காலம். ஏதென்ஸ் - ஸ்பார்ட்டா இரண்டுக்கும் இப்படிப்பட்ட போட்டி அடிக்கடி எழும். இயல்பிலேயே வீரர்களான கிரேக்கர்களுக்கு போர் ஒரு பொழுதுபோக்கு போலவே இருந்தது. கல்விச்சாலையில் வீரமும் கற்றுத் தரப்பட்டது. இக்காலத்தில் பிறக்கும் கூன், குருடு, நொண்டி போன்ற குழந்தைகளை கொண்டு போய் மலையுச்சியில் போட்டுவிடுவார்களாம். வீரமிக்க உறுதிமிக்க மக்களையே கிரேக்கம் விரும்பியது.