நாடகமும் நவரசமும்! | William Shakespeare

மிகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியர் இவர். அதோடு மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட. இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. அதோடு உலகின் பல பல்கலைக்கழகங்களில், இவை, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு இலக்கிய மாணவர்களுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இவரது காலம் 1564 - 1616. இங்கிலாந்து நாட்டில் இலண்டன் மாநகருக்கு 160 கிலோ மீட்டர் தூரமுள்ள 'ஸ்டராட்போர்டு' என்ற சிற்றூரில் பிறந்தவர். இந்த இடம் மிகப்புகழ் பெற்ற இடமாகவும், பல ஆயிரம் பார்வையாளர் வந்து தரிசிக்கும் இடமாகக் கருதப் படுவது, இவருக்கு உலகில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனலாம்.

இவர் தந்தை ஜான் ஷேக்ஸ்பியர். தந்தையார் கையுறை தைத்து விற்கும் வணிகர். தாயார் பெயர் ஆடென் ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியர் தனது 12ஆம் வயது வரையில் லத்தீன் மொழியில் இலக்கிய, இலக்கணம் கற்றார். தந்தையின் தொழில் லாபகரமாய் நடக்கவில்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ஷேக்ஸ்பியர் தொடர்ந்து கல்வி கற்கமுடியாமல் போயிற்று. தந்தைக்கு உதவியாய் சில காலம் பணி செய்தார். பிறகு ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் சில காலம் இருந்தார். தனது 19ஆம் வயதில், 27 வயதுடைய ஒரு பெண்ணை 1582இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஷேக்ஸ்பியர் 1587ஆம் ஆண்டு, தன் சொந்த கிராமத்தில் இருந்து, புகழ்பெற்ற லண்டன் நகர் சென்றார். இதுவே இவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

லண்டன் நகரம் அப்போது நாடகங்களுக்குப் பிரசித்திபெற்ற இடமாக இருந்தது. நிரந்தரமாக நாடகக்கொட்டகையும் அதில் தினமும் நாடகம் நடைபெறும். பலரும், பல இடங்களில் இருந்து குதிரை வண்டியில் நாடகம் பார்க்க வருவார்கள். முதலில் ஒரு நாடகக் கொட்டகையில், குதிரை வண்டிகளைக் காவல் பார்க்கிற சாதாரண தொழிலாளியாகவே பணியில் சேர்ந்தார்.

அப்போது, தினமும் நடக்கும் நாடகத்தை, இவர் வெளியில் இருந்தபடியே ரசித்துக் கேட்டார். நல்ல நினைவு சக்தி இவருக்கு. வசனங்களைக் கேட்டு, கேட்டு, எல்லாப் பாத்திரங்களும் பேசுகிற வசனமும் இவருக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அப்போது கற்பனையில் இப்படி இருக்கலாம் - அப்படி இருக்கலாம் என தன் மனதளவில் நினைப்பதுண்டு.

இச்சமயத்தில் ஒருநாள் நாடகம் ஆரம்பிக்க வேண்டிய நேரம். எல்லா ரசிகர்களும் டிக்கட் வாங்கி, ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நேரம். திடீர் என, அன்று நடக்க வேண்டிய நாடகத்தில், முக்கிய பாகமேற்று நடிக்கும் நடிகருக்கு நடிக்க இயலாது போயிற்று. நிர்வாகி பயந்தார். என்ன செய்வது என்று குழம்பினார். அவர் இல்லாது நாடகம் நடத்த முடியாது. நாடகம் நடக்கவில்லை என்றால், நஷ்டம் ஒருபுறம். அதோடு ரசிகர்களின் கோபம் அதிகமாகும். என்ன செய்வது என்று தெரியாமல் மிக மிகத் தவித்தார்.

அப்போது, ஷேக்ஸ்பியர் தானாக முன்வந்து அப்பாத்திரம் ஏற்று நடிப்பதாகக் கூறினார். யாரும் நம்பவில்லை. நாடக அனுபவம் இல்லாத, குதிரைவண்டி காவலர் நடிப்பது என்பது நம்ப முடியாததாகவே இருந்தது. வேறு வழியில்லை. அவசரம் அவசரமாக ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகம் ஆரம்பமாகியது.

எப்போதையும்விட, அந்தப் பாத்திரம் அன்று மிகவும் நன்றாக அமைந்தது. ரசிகர்களின் ஏகப்பட்ட பாராட்டுதல், கைத்தட்டல், வசனத்தை மனப்பாடம். செய்திருந்ததால் சிறப்பாகப் பேசினார். அதோடு முக்கிய காட்சிகளில், இவரே சொந்தமாக வசனம் பேசினார். அதற்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது. இதுகண்டு மகிழ்ந்த நாடக நிர்வாகி இவரை தொடர்ந்து நடிக்க வைத்தார். அதோடு சில நாடகங்களை, அந்த கம்பெனிக் காகவும் எழுதிக் கொடுத்தார். இதுவே மிகப்பெரிய நாடக ஆசிரியர் ஆவதற்கான திருப்புமுனையானது.

இந்த சமயம் 1592இல், லண்டனில், மிகமிகக் கொடிய நோயான பிளேக் நோய் பரவியது. இது பல பேரைப் பலிகொண்டது. இதன் காரணமாக ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் லண்டனில் நாடகக் கொட்டகைகள் மூடிக் கிடந்தன. இதுவே ஷேக்ஸ்பியருக்கு ஒருவகையில் நல்லதாய் போயிற்று. இக்காலத்தில் இவர் நிறைய நாடகங்கள், கவிதை எழுதினார்.

இவரது கவிதைகள் 'சானட்' என்ற புதுவகையில் எழுதப்பட்டது. இதற்கு இலக்கிய உலகில் நிறைய வரவேற்பும் கிடைத்தது. இவரது நாடக வசனம் மிகவும் கூர்மையானது. கேட்போர் மனதில் பதியும் தன்மை யுடையதாய் இருந்தது.

இவரது நாடகங்கள் 1594 முதல், நூலாக வெளிவா ஆரம்பித்தது. இவையும் பரவலாக வரவேற்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.  இவர் மொத்தம் 37 நாடகங்கள் எழுதினார். சமூகம். வரலாறு என இதனைப் பிரிக்கலாம். அதோடு முடிவின் (கதையின் end) இதனை 'துன்பியல்' -'இன்பியல்' எனவும் இரண்டாக வகைப்படுத்தலாம்.

இன்பியல் நாடகத்தில், 'நடுவேனில் கனவு (A mid summer night's dream), 'விரும்பியவாறே' (As you like it), 'அடங்காப்பிடாரியை அடக்குதல்' (The taming of the shrew), 'வெனிஸ் வர்த்தகன்' (Merchant of Venice) முதலிய நாடகங்கள் மிகச் சிறப்பானவை இன்றளவும், கருதப்படுகிறது. என

அதுபோல துன்பியல் நாடகங்களில், 'ரோமியோ அண்ட் ஜூலியட்' மிகப் புகழ்பெற்ற காதல் கதை யாகும். சோகத்தில் முடிந்த அழியாக் காதலை அற்புத மாய்க் கூறிடும் சோக காவியம் இது. ஹாம்லெட், ஒத்தல்லோ, லீயர் அரசன் (King lear), ஜூலியஸ் சீசர், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா போன்றவை தனிச்சிறப்பு மிக்கவை. சீசரும், ஆண்டனியும் அற்புத வரலாற்றுக் காவியமாய் அமைந்தது.

ஜூலியஸ் சீசர், செனட்டில் கொலை செய்யப்படும் காட்சியில், புரூட்டசைப் பார்த்து You too Brutus? எனக் கேட்கும் ஒரு வரி வசனம் இன்றளவில் வியந்து பேசப்படும் வசனமாகக் கருதப்படுவது ஷேக்ஸ்பியரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். இவரது நாடக வசனங் கள், உலகின் மிகச் சிறந்த பொன்மொழிகளாகவும் ஏற்கப்படுகிறது.

"காலத்தில் செய்வதை தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்'' இது இவரது ஒரு வசனச் சான்று.

"எந்தக் கணமும் சாகத் தயாராய் இரு. இப்போது இறந்தாலும் இன்பம் இருந்தாலும் இன்பம்" ஓர் தத்துவமாய் அமையும் வசனமிது.

'புகழ் என்பது பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்தது. தகுதி இல்லாமல் அது கிடைத்துவிடும். எந்தக் காரணமும் இல்லாமல் அது போய்விடவும் கூடும்" மற்றுமோர் அரிய வசனம் இது.

ஷேக்ஸ்பியரின் எல்லா வசனமும், கேட்போர் மனதில் ஆழமாகப் பதியும் இயல்புடையவையே. 1610இல் இவர் நாடகத்தில் இருந்து ஓய்வுபெற்று, இறுதிவரை நிறைய எழுதினார். இவரது மகள் சூசனா என்பவராவார்.

இவர் 1616இல் காலமானார். நாடக ஆசிரியர்களில் மிகப்பெரிய இலக்கிய அந்தஸ்து இவருக்குக் கிடைத்தது.