பிரியமானவர்கள் | Dr. ஃபஜிலா ஆசாத் I Intimacy
உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா?
உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம்.
அதிகம் பரிச்சயமில்லாதவர்களின் செயல்களைக் கூட எளிதாகக் கடந்து விடும் மனம், பிரியமானவர்கள் தவறாக ஏதேனும் செய்தாலோ அல்லது சொன்னாலோ அதைப் பற்றியே என்னேரமும் சிந்தித்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கும்.
அதிலும் அவர்கள் சொல்லோ, செயலோ, உங்கள் தன்மானத்தை தாக்கக் கூடியது என்றால் அவ்வளவுதான் உங்கள் survival mechanism சட்டென்று activate ஆகி அவர்களுக்கு சுளீரென்று பதிலடி தர வேண்டும் எனத் துடிக்கும்.
ஆனால் இவை, பிரச்னைகளை பெரிதாக்குமே தவிர ஒரு போதும் பிரச்னைக்கு தீர்வு தராது.
சின்ன சின்ன தவறுகள் செய்வது மனித இயல்பு. நம்மை அவமானப் படுத்த வேண்டுமென்றோ, வருத்தப் படுத்த வேண்டுமென்றோ அப்படி நடந்திருக்க மாட்டார்கள். ஏதோ போகிற போக்கில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.எல்லாம் சரியாகி விடும் என அதைக் கடந்து செல்லும் பெருந்தன்மையே மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
நீங்கள் அறிவீர்களா.. நம் ஒவ்வொருவர் மனதிலுமே ‘auto correction’ செயலி இருக்கிறது. அது, நம்மை அறியாமல் ஏதாவது தவறாக நடந்து விட்டால், தானாகவே அப்படி சொல்லி இருக்கக் கூடாது, இப்படி செய்திருக்கக் கூடாது என மனதில் தோன்றி, தான் செய்த தவறுக்கு வருந்தி அதை சரி செய்து கொள்ள முயலும்.
எனவே, யாராவது ஏதாவது தவறிழைத்து விட்டால் அவரது auto correction அவரை திருத்துவதற்கு சற்று அவகாசம் கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு அதற்கேற்ப கொஞ்ச நேரம் கண்டு கொள்ளாத மாதிரி இருந்தால் போதும்.
அதை விட்டும் இப்போது இவர்கள் சொல்வதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் இது தொடர்ந்து விடக் கூடும் என எண்ணி நீ இப்படி சொன்னாய் இது என்னை வருத்துகிறது என்று பாய்ண்ட் பண்ணி சொல்லிக் காட்டாதீர்கள். அப்படிச் சொல்லிக் காட்டினால்தானே, அவர்கள் தவறை உணர்ந்து நம்மிடம் அதற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி பாய்ண்ட் பண்ணும் போது தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கிறார்கள் என்று தான் அவர்களுக்கு தோன்றும்,
தவிர, இப்போது எடுத்து சொல்லுமளவுக்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன். இது போல் நீ ஒன்றுமே செய்ததில்லையா என்று உங்களிடமிருக்கும் ஏதாவது ஒரு தவறை அவர்களும் எடுத்து சொல்ல முற்படுவார்கள்.
அதாவது, இயல்பாக அவர்களே மாற்றி இருக்கக் கூடிய ஒன்றை, தவறு என்று கருதிய ஒன்றை, நீங்கள் சுட்டிக் காட்டுவதால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று அவர்களது ஈகோ மாற்றி எண்ண வைத்து விடும். அல்லது நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக அப்போதைக்கு வருத்தம் தெரிவித்தாலும் தான் மாற்றிக் கொள்வதாக முன் வந்து சொன்னாலும் அவர்கள் மனதில் இந்த சம்பவம் பதிந்து விடும். அதனால், அது அவர்களை முன்பு போல் இயல்பாக இருக்க விடாது. தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடும். அதனால் இருவருக்குமிடையே சகஜ நிலை இல்லாத இறுக்கம் ஏற்பட்டு விடும்.
இப்படி ஏற்படும் சிறு விரிசல்கள் சரியான முறையில் கவனிக்கப் பட்டு பரஸ்பரம் புரிந்து சரி செய்யப் படவில்லை எனில் அது இருவரின் தன்மானத்தையும் பாதித்து இருவருக்குமிடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடக் கூடும்.
அதே நேரம்.. கோபமோ, வருத்தமோ, சங்கடமோ எழும் போது வயிற்றுக்குள் என்னவோ சுழன்று நெருப்பு கங்காக வார்த்தைகள் கிளர்ந்து எழத் துடிக்கும் போது, அப்படியே மூச்சை ‘ஹா..” என்ற சத்தத்தோடு வெளியே விடுங்கள். பின் மெல்ல அப்படியே மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நிதானப் படுத்துங்கள். அப்படிச் செய்யும்போது, அந்த நேரத்தில் அந்த சூழலை, உங்கள் வார்த்தைகளை நீங்கள் pause செய்கிறீர்கள்.
அதாவது நின்று நிதானித்து, உங்களுடைய முழு கவனத்தையும் அந்த தருணத்தில் நிறுத்தி வையுங்கள். அப்படிச் செய்யவில்லை என்றால், உங்கள் மனம், அன்றும் இப்படித்தான் செய்தார்கள் என விறுவிறுவென கடந்த காலத்திற்குள் இறங்கி, என்றோ நடந்த விஷயங்களைக் கிளறி எடுத்து, முந்தைய file லை புரட்ட ஆரம்பித்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் அலைபாயத்துடிக்கும் மனதை அப்படியே அந்தக் கணத்தில் நிறுத்துங்கள். அது போல் இதை தட்டிக் கேட்காமல் விட்டால் நாளை இது இப்படி நடக்கக் கூடும் என சிறு விஷயத்தையும் பூதாகரமாக்கும் எண்ணங்களையும் தடுத்து நிறுத்துங்கள்.
எதற்காக இதை பெரிதாக எடுத்து என் மனம் வருத்தப் படுகிறது, அவர்களின் செயலுக்கு நான் பதிலடி கொடுப்பது அவரின் அன்பை விட எனக்கு முக்கியமானதா?! என்னுடைய நிம்மதியை விட, மகிழ்ச்சியை விட அது எனக்கு அவசியமானது தானா என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
பெரும்பாலும், தான் சொன்னால் மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில்தான் தனக்கான அன்பும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று மனித மனம் தவறாக ஒன்றை தனக்கென வரையறுத்துக் கொள்கிறது. தான் ஒன்றை சொல்லி தனக்கு வேண்டிய உறவு அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் அவர்கள் தன்னை மதிக்கவில்லை, தான் அவர்களுக்கு முக்கியமில்லை, என என்னென்னவோ கற்பனைகள் செய்து கொண்டு மருகுகிறது. அதுவே உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, எல்லா உறவுகளையும் உரசச் செய்யும் ஒரு வார்த்தை ‘want’ என்பதுதான். அதாவது, எனக்கு இது தேவை, எனக்கு அது தேவை, நீ இப்படி இருக்க வேண்டும் என தான் விரும்பக் கூடியவரை தன்னுடையவர் என்று கருதக் கூடிய நேரம், தான் விரும்புவது போல் அவர்கள் இருக்க வேண்டும் என இழுத்து சென்று விடுகிறது.
ஆனால் அவர்கள் அப்படி இருக்க முடிவது என்பது அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் அன்பையும் மதிப்பையும் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. அது அவர்களின் physiological மற்றும் psychological சூழல்களையும் சார்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒன்றை எதிர்பார்த்து அதை அவர்கள் செய்யாத போது அவர்கள் மேல் கோபம் வருகிறது. அது அந்த உறவே விடுபடுமளவு இழுத்து செல்கிறது. அதற்கு பதில் அவர்கள் மேல் உங்களுக்கு எழும் அந்த எதிர்பார்ப்பை விட்டுவிட்டால் உறவு என்னாளும் நிலைத்து நீடிக்கும்.
அது போல் நீங்கள் ஒன்றை எதிர்பார்த்து அதை மற்றவர் செய்யவில்லை என்றால் உங்களை வருத்தும் ஒரு விஷயம், செய்தால் அவரை வருத்தக் கூடும் என்பதை உணர்ந்து கொண்டால் அங்கு பிரச்னைகள் எழாத பரஸ்பர புரிதல் இருக்கும்.
மகிழ்ச்சி என்பது உங்களுக்கு வேண்டியது கிடைப்பதில் மட்டுமல்ல உங்களுக்கு வேண்டியதை, வேண்டியவரின் மனநிலை புரிந்து விட்டுக் கொடுப்பதிலும் இருக்கிறது என்பதை உங்கள் ஆழ்மனதில் பதிய வைத்து விட்டீர்கள் என்றால், உங்கள் மனமே எந்த சூழலிலும் தனக்கான வரையறையை வகுத்துக் கொள்ளும். மற்றவர்களை அவர்கள் இயல்பு மாறாமலேயே ஏற்றுக் கொள்ளும். உறவு நிலைக்கும். மகிழ்ச்சி மலரும்.
Dr. ஃபஜிலா ஆசாத்
Watch "Dr. Fajila Azad" on YouTube