மரம் வளர்த்தாலும் கேடா?


உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் (greenhouse) வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகும். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

 வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்.

வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில (carbondioxide) வாயுவை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது, 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில்யில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.

இந்தியாவில் ஏறக்குறைய வீடுகள் சிமெண்ட் மற்றும் செங்கற்கள் கொண்டே கட்டப்படுகின்றன. ஆனால் இந்த நிலைமையும்  கூட புவி வெப்பமயமாதலுக்கான ஒரு காரணியாய் கருதப்படுகின்றது. இதற்கான மாற்று வழி என்ன? சிந்திக்க கூடிய விஷயம் தான். ஆனால் இதனை குறித்து சில ஆராச்சியாளர்கள் இப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் ஒரு மாற்று வழி யாதெனில், ‘மூங்கில் வீடுகள்.’ அதாவது, சிமெண்ட், செங்கற்கள் கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் மரத்தினை கொண்டு வீடு கட்ட ஆலோசிக்கிறார்கள். ஆனால், இதுவும் ஒரு விதத்தில் இயற்கைக்கு மாறான செயலாகவே கருதப்படுகின்றது. அனைத்தும் மூங்கில் வீடுகளாக மாற வேண்டும் என்ற நிலை எழுமாயின், காடுகளை அழிக்கும் நிலை உருவாகும். மறுபடியும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். எனவே இந்த மூங்கில் வீடுகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான சாத்தியங்கள் உள்ளதா இல்லையா என்ற ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன.

இருப்பினும், மற்றொரு ஆய்வின் படி, மரங்களை நடுவதாலும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்கிறார்கள். முன்பு வெளியான ஆய்வுகளில், கரியமில வாயுவை உள்ளிழுத்து தன்னுள் தக்கவைத்துக்கொள்வதற்கான திறனை மரங்கள் கொண்டுள்ளன என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல நாடுகள் பருவநிலை மாற்றத்தை கையாள, அதிக அளவில் மரம் நடுவதை ஒரு முக்கிய திட்டமாக கையில் எடுத்தன.

இவ்வாறு புதிய காடுகளை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.'பான் சாலன்ஜ்' என்ற திட்டம் மிகவும் பிரபலமானது. இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள், சீரழிக்கப்பட்ட மற்றும் காடழிப்பு செய்யப்பட்ட 350 மில்லியன் எக்டர் நிலப்பரப்பில், புதியதாக செடிகள் நட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40 நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளன. அமெரிக்காவிலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, 'டிரில்லியன் ட்ரீஸ்' என ஒரு திட்டத்தை ஆதரித்தார்.

சிலி  நாட்டில் மரம் வளர்ப்பதற்கான ஆர்வத்தை மேம்படுத்த, அதற்கான  மானியத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். அந்த நாட்டில், 1974 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, மரம் நடுவதற்காக மானியம் அளிக்கும் ஆணை உள்ளது. உலகளவில் காட்டை உருவாக்கும் திட்டத்திற்கு இது உந்துசக்தியாகப் பார்க்கப்பட்டது.

புதிய காடுகளை உருவாக்க செடிகள் நடப்பட்டால், அதற்கு அந்நாட்டில் 75% மானியம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் காடுகளுக்கு இது பொருந்தாது என்றாலும், பட்ஜெட் தயாரிப்பில் இருந்த வரம்புகள் மற்றும் சட்டங்களை அமலாக்குவதில் இருந்த கவனக்குறைவுகளால், சில நில உரிமையாளர்கள், இயற்கையாக அமைந்திருந்த காடுகளை அழித்துவிட்டு, லாபம் அளிக்கும் மரங்களை புதியதாக அந்த இடங்களில் நட்டனர்.இந்த மானியத்திட்டத்தால், மரங்களால் சூழப்பட்டுள்ள இடங்களின் அளவு விரிவடைந்துள்ளது என்னும்போதிலும், இயற்கையான காட்டின் அளவு குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிலியில் இருக்கும் இயற்கை காடுகளில் பல்லுயிர் தன்மை மிகவும் அதிகமாக இருந்து, அதிகமான கரியமிலத்தை தன்னுள் தக்கவைத்துக்கொள்ளும் என்னும் போதிலும், இந்த புதிய மானிய திட்டத்தில்கீழ் நடப்பட்டு வளர்ந்த மரங்களால் அவ்வாறு கரியமிலத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனதும், அதன்மூலம், பல்லுயிர் தன்மை குறைவதற்கான சூழலை அது தூண்டுதலாக அமைந்துவிட்டது

புவி வெப்பமயமாதலை தடுக்க காடுகளை உருவாக்குவது என்பது மட்டுமே தீர்வு என்று கூறிவிட முடியாது. புதிய செடிகளை நடுவதன்மூலம், எவ்வளவு இயற்கையான கரியமில அளவை சரிசெய்துவிட முடியும் என்று முன்பு நாம் கொண்டிருந்த அனுமானங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டவையாக தெரிகிறது. மரம் வளர்ப்பதால் தீமை, வெட்டுவதாலும் தீமை. இதற்கான தீர்வு என்னவாக இருக்க முடியும்?

Add new comment

4 + 11 =