தெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும்
நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால், குறைந்தது 93 சிறார் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் பெய்துவரும் பருவ மழையால் இதுவரை, ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமான மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மழை தொடர்ந்து பெய்தால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், யுனிசெப் அமைப்பின், தெற்கு ஆசிய இயக்குனர் Jean Gough அவர்கள், இவ்வியாழனன்று அறிவித்தார்.
பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்வு முற்றிலுமாக தலைகீழாக மாறியுள்ளது என்று கூறியுள்ள, Jean Gough அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு அவசரகால உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், 43 இலட்சத்திற்கு அதிகமான சிறார் உட்பட, ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலை தொடர்ந்தால், இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அசாம், பீகார் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அசாமில் மட்டும், 28 மாவட்டங்களில் 52 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 விழுக்காட்டுப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவின் 21 நகரங்கள், கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
(ஐ.நா, வத்திக்கான் நியூஸ்)