உதவிக்கு உதவி உண்டு | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு நாள் ஒரு நெடுஞ்சாலை ஓரமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்ட முடியாமல் வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெண். அந்த வழியாக வந்த ஒருவர் அந்தப் அந்தப் பெ பெண்ணைப் பார்த்து, "நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா ?" என்று கேட்டார். அந்தப் பெண்ணும் தயக்கத்துடன்  “ஓகே” என்று சொல்ல, அவர் தமது பணியைத் தொடங்கினார். "சரிம்மா. வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் " என்று சொன்னதும் அந்தப் பெண்மணி வேலைக்கான ஊதியத்தை வாங்கிச் செல்ல வற்புறுத்தினார். ஆனால், அந்த மனிதரோ, "நான் மெக்கானிக் அல்ல, இது ஓர் உதவிதான், எனக்கு எதுவும் வேண்டாம்" என்று சொல்லி விட்டார். அந்தப் பெண்மணியும் இவரைக் கட்டாயப்படுத்த அவர், "மேடம், என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைபடற யாரையாவது பார்த்தீங்கன்னா, என்னை மனசுல நெனச்சி அவங்களுக்கு உதவி பண்ணுங்க, அதுவே எனக்குப் போதும்" என்று சொல்லிப் புன்சிரிப்போடு சென்று விட்டார்.

சில மைல் தூரம் சென்றதும் அந்தப் பெண்மணி ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச் சென்றார். அங்கு ஒரு பணிப்பெண் வேகமாக ஓடிவந்து சுறுசுறுப்பாக அந்தப் பெண்மணிக்குப் பறிமாறினார். அந்தப் பணிப்பெண் எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தும், எவ்விதச் சோர்வும் இன்றி வந்திருந்த பெண்ணைக் கவனித்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் அந்தப் பெண் பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டு 300 டாலரை மேசையின்மீது வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். கூடவே மேசையின்மேல் ஒரு துண்டுச்சீட்டில், “யாரோ முகம் தெரியாத ஒருவர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக நான் உனக்கு உதவி செய்துள்ளேன். இந்த நேரத்தில் நிச்சயமாக உனக்கு இந்தப் பணம் உதவியாக இருக்கும்" என்று எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்த மாதம் பிரசவச் செலவுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட்ட அந்தப் பெண் நடந்ததைத் தன் கணவர் பிரெய்ன் ஆண்டர்சனிடம் சொல்லி மகிழ்ந்தார்.

நாம் செய்யும் ஒரு சிறிய நன்மைக்கும் பிரதிபலன் உண்டு. நாம் செய்யும் சிறு உதவிக்கும் ஒருபோதும் பலனின்றிப் போகாது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image