தன்னையே கொடுப்பதே கிறிஸ்தவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – திங்கள்
புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி-விழா
2 கொரி 9: 6-10 யோவான் 12:
24-26
தன்னையே கொடுப்பதே கிறிஸ்தவம்!
முதல்வாசகம்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள், தாராளமாகவும் மகிழ்ச்சியுடனும்
கொடுப்பதன் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். அவரது படிப்பினையின்
சுருக்கம் பின்வருமாறு உள்ளது.
ஒருவர் எவ்வளவு விதைக்கிறாரோ, அதற்கேற்பவே அறுவடை
செய்வார்.
அளிப்பது கட்டாயமாகவோ வருத்தத்துடனோ இருக்கக்கூடாது;
மகிழ்ச்சியுடன் கொடுப்பவரை கடவுள்அன்பு செய்வரா.
கடவுள் தமது அருளை நமக்கு நிறைவாக அளிப்பதால், நல்ல
செயல்களைச் செய்யவும், பிறருடைய தேவைகளை நிறைவேற்றவும்
நமக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து வழங்குகிறார்.
விதைப்பவனுக்கு விதையையும் உணவையும் கொடுக்கும் கடவுள்,
நம்முடைய நீதியின் கனிகளையும் பெருகச் செய்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு, கோதுமை மணி மண்ணில் விழுந்து
இறந்தால்தான் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற உதாரணத்தின்
மூலம் அர்ப்பணிப்பு வாழ்வின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். அவரது
செய்தியில்,
ஒருவர் தன் வாழ்க்கையை மட்டும் காப்பாற்ற நினைத்தால்,
உண்மையான வாழ்க்கையை இழக்க நேரிடும்.
இயேசுவைப் பின்பற்றுபவர் தன்னையே தியாகம் செய்து, தன்
விருப்பங்களை விடுத்து அவரைப் பின்பற்ற வேண்டும்.
இயேசுவின் ஊழியக்காரராக இருப்பவர் அவரைப் பின்பற்ற
வேண்டும்.
அவரைப் பின்பற்றுகிறவரை தந்தையாகிய இறைவன்
மாட்சிபடுத்துவார் ஆகிய படிப்பினைகள் யோவான் பகிர்கிறார்
சிந்தனைக்கு.
இன்று நாம், மறைசாட்சியான திருத்தொண்டர புனித லாரன்ஸ்
அவர்களின் நினைவைக் கொண்டாடுகிறோம்.
புனித லாரன்ஸ் ஒரு திருத்தொண்டராக (Deacon) இருந்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தலின் காலத்தில் அவர் கைது
செய்யப்பட்டார். அப்போது, திருஅவை சமூகத்திற்குச் சொந்தமான
பொருட்களை விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளின் பராமரிப்பிற்காக
வழங்கினார். தன்னை கைது செய்தவர்களுக்காக அவர் எதையும்
விட்டுவைக்கவில்லை.
இதனால் கோபமடைந்தவர்கள், ஏழைகள்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரை நெருப்பில் வாட்டி
கொன்றனர். எனவே, இவர் ஒரு மறைசாட்சியாக
நினைவுகூரப்பட்டுகிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் “கோதுமை மணி நிலத்தில்
விழுந்து இறக்காவிட்டால், அது ஒரு மணியாகவே இருக்கும்; ஆனால்
அது இறந்தால் மிகுந்த பலனைத் தரும்” என்பதற்கு புனித லாரன்ஸ் ஒரு
சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்:
ஆம், “கொடுத்தால்தான் பெருகும்; தியாகம் செய்தால்தான் வாழ்க்கை
பலன் தரும்.” ஒரு விவசாயி ஒரு விதையை கையில் வைத்துக்கொண்டு,
“இது என்னுடையது; இதை நான் பாதுகாத்துக்கொள்கிறேன்” என்று
சொல்லிக்கொண்டிருந்தால், அந்த விதையிலிருந்து ஒருபோதும் பயிர்
உருவாகாது. ஆனால் அந்த விதையை மண்ணில் விதைக்கும்போது, அது
தன்னையே இழப்பது போலத் தோன்றினாலும், காலப்போக்கில் அது
முளைத்து, வளர்ந்து, பலன் கொடுக்கிறது.
இயேசு இந்த வார்த்தைகளை தமது பாடுகளுக்கும் சிலுவை
மரணத்திற்கும் முன்பாகக் கூறினார். சிலுவையில் இயேசு தமது
உயிரையே நமக்காக அர்ப்பணித்தார். மனித பார்வையில் அது
தோல்வியாகத் தோன்றியது. ஆனால் அந்தத் தியாகத்திலிருந்துதான் மீட்பு
பிறந்தது. அதேபோல நமது வாழ்க்கையிலும், சுயநலத்தை
விட்டுக்கொடுக்கும் போதுதான் புதிய வாழ்க்கை பிறப்பெடுக்கும்.
ஒரு தாய் தன் குழந்தைக்காக தன் நேரத்தைத் தியாகம் செய்கிறாள்.
ஒரு தந்தை குடும்பத்திற்காக உழைக்கிறார்.
ஒருவர் நோயுற்றவரை அன்புடன் கவனிக்கிறார்.
ஒருவர் தன்னிடம் இருப்பதை ஏழையுடன் பகிர்ந்துகொள்கிறார்.
இவை அனைத்தும் சிறிய “விதைகள்”. அவை உடனடியாக பலன் தராமல்
இருக்கலாம். ஆனால் கடவுளின் பார்வையில் எந்த அன்புத் தியாகமும்
வீணாகாது. முதல் வாசகத்தில், புனித பவுலின் கூற்றுபடி, “குறைவாக
விதைப்பவர் குறைவாகவே அறுவடை செய்வார்; மிகுதியாக விதைப்பவர்
மிகுதியாக அறுவடை செய்வார்.”
நாம், அன்பை விதைத்தால் — அன்பை அறுவடை செய்வோம்.
மன்னிப்பை விதைத்தால் — அமைதியை அறுவடை செய்வோம்.
இரக்கத்தை விதைத்தால் — இரக்கத்தை அனுபவிப்போம்.
தாராள மனதை விதைத்தால் — இறைவனின் அருளை அனுபவிப்போம்.
“நாம் எவ்வளவு பெற்றோம் என்பதல்ல; “நாம் எவ்வளவு விதைத்தோம்?”
என்பதே முக்கியம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, ஒரு கோதுமை மணியைப் போல என்னையும் உமது
கைகளில் ஒப்படைக்க அருளும். நான் வாழ்வதன் மூலம் பிறருக்கு நன்மை
கிடைக்கட்டும். நான் கொடுப்பதன் மூலம் பிறர் வளம் பெறட்டும். நான்
தியாகம் செய்வதன் மூலம் பிறருக்கு புதிய நம்பிக்கை பிறக்கட்டும். என்
வாழ்க்கை உமக்காகவும், பிறருக்காகவும் பலன் தரும் வாழ்க்கையாக
அமைவதாக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
