அமைதியில் பேசும் ஆண்டவர் முன் ஆணவம் களைவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 10ஆம் வாரம் - வெள்ளி
1 அரசர் 19: 9a, 11-16
மத்தேயு 5: 27-32 

 
அமைதியில் பேசும் ஆண்டவர் முன் ஆணவம் களைவோம்!

   
முதல் வாசகம்.


 எலியா ஓரேப் எனப்படும் ஆண்டவர் மலையில் உள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார். கடவுள் அவரைக் கடந்துபோகும்போது வெளியே நிற்கும்படி சொன்னார். பலத்த காற்றும், நிலநடுக்கமும், நெருப்பும் உண்டானது, ஆனால் கடவுள் அவற்றில் இல்லை. நெருப்புக்குப் பிறகு, இறுதியாக, மலையில் ஒரு மெல்லிய காற்று வீசியபோது, எலியா ஒரு குரலைக் கேட்டார். உடனே, எலியா முகத்தை மூடிக்கொண்டு குகையின் வாசலில் நிற்க,  அவர் ஏன் அங்கே இருக்கிறாய் என்று கடவுள் கேட்டார்.  

எலியா “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் உள்ளேன் என்று பதிலளித்தார், ஆனால் இஸ்ரயேலர்களோ உடன்படிக்கையை உடைத்து, பலிபீடங்களை அழித்து, இறைவாக்கிறர்களைக்  கொன்று, என்னையும் தனிமைப்படுத்தி ஆபத்தில் ஆழ்த்தினார்கள் என்றம் கூறினார்.  

பின்னர் கடவுளின் விருப்பப்படி,  எலியா  அசாவேல், ஏகூ, எலிசா ஆகிய மூவரைத் திருப்பொழிவு செய்கின்றார். இவர்கள் மூவரும் பாகால் தெய்வ வழிபாட்டை இஸ்ரயேலிலிருந்து முற்றிலுமாக அகற்றி, ஆண்டவரே கடவுள் என்பதை நிலைநிறுத்தியவர்கள்.  


நற்செய்தி.


இயேசு தம் சீடர்களுக்குப் பின்வரிமாறு  கற்பித்தார்:

"விபசாரம் செய்யாதே" என்ற கட்டளையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கும் எவரும் ஏற்கனவே அவரது இதயத்தில் விபச்சாரம் செய்தவர்க்ள ஆவர் என்றும்,  ஒருவரின் வலது கண் அவரைப்  பாவத்திற்கு இட்டுச் சென்றால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுவது நல்லது என்றும், ஒவருவரின் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை அவர்  இழப்பது மேலானது என்று அறிவுறுத்துகிறார். 

மேலும், 'மனைவியை விவாகரத்து செய்பவர் கண்டிப்பாக விவாகரத்து சான்றிதழ் கொடுக்க வேண்டும்' என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும்   தன் மனைவியை விவாகரத்து செய்யும் எவனும் அவளை விபச்சாரம் செய்ய வைக்கிறான் என்றும்,  விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்வதும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும் என்றும் வலியுறுத்திப் போதிக்கிறார். 
 
 
சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியின் பின்னணியை அறிய விடுதலைப்பயணம் 20: 14 ல் காணப்படும் இறைவார்த்தை வசனத்தைப் வாசிக்க வேண்டும். அதில் மோசே வழி கடவுள் அளித்த கட்டளையாக  “விபச்சாரம் செய்யாதே” என்று சொல்லப்பட்டிருக்கிறது.   ஆனால், இயேசு அதனைவிடக் கடுமையான வார்த்தைகளைக் கையாளுகிறார், “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று”. என்கிறார். 

 “கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் (மத் 6:22) என்று இயேசு கூறியதைப் பற்றி சிந்திக்கும் போது, இன்றைய நற்செய்தி தெளிவுப்பெறுகிறது. நாம் கவர்ச்சிமிகு  ஒரு பொருளைப் பார்க்கும்போது, உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றும்.  அந்த எண்ணம் நம்மை செயலுக்கு இட்டுச் செல்லும். அது தீயச் செயலாக இருந்தால் நாம் பாவத்தில் விழுவோம். ஆகவேதான் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் என்று இயேசு கூறுகிறார். 
பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா? என்று சொல்வதுண்டு. ஒரு பார்வையில் இரக்கம், அன்பு, பாசம், அக்கறை போன்றவை வெளிப்படலாம். மற்றொரு பார்வையில் வெறுப்பு, கோபம், ஆனவம் போன்றவையும் வெளிப்படலாம்.  ஆகவே, நன்னெறி  நம் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என்றால் நம் பார்வையும் அதையொட்டிய  சிந்தனையும்   நலமானதாக இருக்க வேண்டும். 

முதல் வாசகத்தைக் கூர்ந்து கவனித்தால்,  எலியா கடவுளின் உடனிருப்பை  அனுபவிக்க விரும்புகிறார்.  அவர் கடவுளின் மலையில் இருப்பதால், அவர் கடவுளின் வருகைக்காக காத்திருக்கிறார்.  முதலில் பலத்த காற்று வீநியது. அதில்  கடவுளைக் காணவில்லை.   அடுத்ததாக ஒரு நிலநடுக்கம் மலையை அசைக்கிறது  அந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திலும் அவரால் கடவுளைக் காண இயலவில்லை. இறுதியாக, மலையில் ஒரு மெல்லிய காற்று வீசுகிறது.  அந்த தென்றலில் கடவுள் இருப்பதை எலியா உணர்ந்தார். கடவுள் மென்மையானவர், இரக்கமுள்ளவர். அவருக்குத் தேவை நமது தூய உள்ளம். 

ஆகவே, கடவுளோடு உறவுகொண்டு வாழ நமது உடல் உறுப்புகளை நாம், நமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் மென்மையான கடவுளை நம்மால் ஒருபோதும் அனுபவிக்க இயலாது. மாறாக  பாவத்தைதான் அனுபவிப்போம். பாவத்திற்கு உடந்தையாக இருக்கும் கரங்கள், பாவ வழிக்கு இட்டுச் செல்லும் கால்கள், பாவத்தில் விழச் செய்யும் கண்கள் இவை நமது தூய எண்ணத்திற்கும் செயலுக்கும் தடைவிதிப்பவை. இவற்றை நமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்க தூய ஆவியாரின் துணையை நாடுவோம். எலியாவைப் போல் கடவுளைச் சந்திக்க வழிப்பாயிருப்போம். 


இறைவேண்டல்.

இரக்கதின் ஆண்டவரே,  தூய, உயிருள்ள பலியாக என்னை உமக்கு நாள்தோறும் படைக்க  எனக்கு மன வலிமை தாரும். ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452