ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் பிளவுபடுத்தும் மனப்பான்மை: முனைவர் சூங் புய் யீ | FABC | Veritas Tamil

ஆசியாவில் திருஅவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், துன்புறுத்தலோ அல்லது மதச்சார்பின்மையோ அல்ல; மாறாக, சமூகத்தில் அதிகரித்து வரும் அரசியல், இன மற்றும் கருத்தியல் பிளவுபடுத்தும் மனப்பான்மையே என்று, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய ஆய்வுத்துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சூங் புய் யீ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் நாள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆம் நிறைவிறுதிப் பேரவையில் உரையாற்றிய அவர், ஆசியா முழுவதும் ஆழமடைந்து வரும் அரசியல், இன மற்றும் கருத்தியல் பிளவுகள் திருஅவையின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று எச்சரித்தார்.

"மறைப்பணி ஒன்றிணைந்த திருஅவை, பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குவோராகவும் விளங்குவதற்கான ஆசியாவின் மாறிவரும் சூழலும் நடைமுறை வழிகளும்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, ஆசியக் கண்டத்தின் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களையும், அவை திருஅவையின் ஒன்றிணைந்த மறைப்பணிக்கு ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய்ந்தது.

"அரசியல், இன மற்றும் சமூகப் பிளவுகள் திருஅவையின் வாசலுக்கு வெளியே நின்றுவிடுவதில்லை" என்று அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றம், மத தேசியவாதம், ஜனநாயகத்திற்கான குறுகிவரும் இடம் மற்றும் அதிவேக டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆகியவை ஆசியாவில் ஆழமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்றும், இவை அனைத்தும் இறுதியில் பிளவுபடுத்தும் மனப்பான்மையை அதிகரிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஆய்வாளர்கள் "உணர்வுரீதியான பிளவுபடுத்தல்" (Affective Polarization) என்று குறிப்பிடும் நிலை குறித்து அவர் கவனம் செலுத்தினார். இதில், மாறுபட்ட கருத்துடையவர்களை கருத்து வேறுபாடு கொண்டவர்களாக அல்லாமல், எதிரிகளாகவே மக்கள் பார்க்கத் தொடங்குகின்றனர் என்றார்.

"இவ்வாறு நிகழும்போது, மக்கள் ஒருவர் மற்றவரின் கருத்தைக் கேட்பதை நிறுத்திவிடுவதால், உரையாடல் மிகவும் கடினமாகிவிடுகிறது" என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தளங்களும், ஒரே கருத்துகளை மட்டுமே உறுதிப்படுத்தும் தகவல் வட்டங்களை உருவாக்கி, மாறுபட்ட கருத்துடையவர்கள்மீது நம்பிக்கையின்மையை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிளவினை மேலும் தீவிரப்படுத்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவர்களும் இந்த சமூகச் சூழலிலிருந்து விடுபட்டவர்கள் அல்லர் என்றும், அரசியல், இன மற்றும் கருத்தியல் பிளவுகள் பங்குகளிலும் திருஅவைச் சமூகங்களிலும் எளிதில் நுழையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதன் விளைவாக, அரசியல், இன அல்லது கலாச்சார அடையாளங்கள், கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகள் என்ற பொதுவான அடையாளத்தை மறைத்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆசியத் திருஅவையின் உண்மையான சவால், பல நாடுகளில் சிறுபான்மையாக இருப்பதைத் தாண்டி, பிளவுபட்ட சமூகங்களின் மத்தியில் ஒற்றுமையின் நம்பகமான அடையாளமாகத் திகழ்வதுதான் என்று அவர் வலியுறுத்தினார்.

"கருத்து வேறுபாடு என்பது பகைமையாக மாற வேண்டிய அவசியமில்லை என்பதை திருஅவை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்" என்று அவர் கூறினார்.

சமூகத்தில் நிலவும் மோதல்களை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, உரையாடல், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் இடமாக திருஅவை மாற வேண்டும் என்றும், பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் அரசியல் பார்வைகள் நிறைந்த ஆசியாவில் இந்தச் சாட்சியம் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத தேசியவாதமோ அல்லது அடையாள அரசியலோ திருஅவையின் மறைப்பணியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், கலாச்சார மற்றும் தேசிய அடையாளங்களுக்கு உரிய மதிப்பு அளித்தாலும், திருஅவை தனது அடையாளத்தை எப்போதும் கிறிஸ்துவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"கிறிஸ்துவில் ஒன்றுபட்ட சமூகமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்தவே திருஅவை அழைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

தனது உரை முழுவதும், FABC நிறைவிறுதிப் பேரவையின் "பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குவோராகவும் இருப்போம்" என்ற கருப்பொருளை அவர் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தார். பிளவுகள் உள்ள இடங்களில்தான் பாலங்கள் தேவைப்படுகின்றன என்பதால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது திருஅவையின் மிக அவசரமான பொறுப்புகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, பிளவுபடுத்தும் மனப்பான்மைக்கு திருஅவை அளிக்கும் பதில் அரசியல் அதிகாரத்திலோ அல்லது கருத்தியல் வெற்றியிலோ அமையக் கூடாது என்றும், மாறாக அன்பு, இரக்கம், மன்னிப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை அழைக்கும் நற்செய்தியின் செய்தியிலேயே அதன் தனித்துவமான பங்களிப்பு அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜகார்த்தாவில் கூடியிருந்த ஆயர்களும் பிரதிநிதிகளும், ஒன்றிணைந்த திருஅவை (Synodality) என்பது அமைப்புகள் மற்றும் நடைமுறைகளில் மட்டுமல்லாமல், வேறுபாடுகள் பிளவுகளாக மாறாத, ஒற்றுமை மோதலைவிட வலிமைமிக்கதாக இருக்கும் சமூகங்களை உருவாக்குவதிலும் வெளிப்பட வேண்டும் என்ற சவாலை அவரது உரை முன்வைத்தது.

Tamil Survey Popup Image