பல்சமய பங்கேற்பால் மெருகேறும் பசுமைப் பயணம் | அருட்பணி. சாரதி சே.ச. | Veritas Tamil
பல்சமய பங்கேற்பால் மெருகேறும் பசுமைப் பயணம்: 9 வது நாளாக கும்பகோணத்தில் பசுமைப் பயண வீரர்கள்
கும்பகோணம், நவம்பர் 14, 2025:
தமிழக துறவியர் பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப் மற்றும் தோழமை சூழலியல் இயக்கங்கள் முன்னெடுத்துள்ள நிலத்தை காக்கும் பசுமை பயணத்தின் ஒன்பதாம் நாளான நேற்று கும்பகோணத்தில் காலை 9 மணி அளவில் தொடங்கியது.
இதயா கல்லூரி கும்பகோணத்தில் பசுமை பயண வீரர்களோடு FIHM-ன் மறைமாகாண தலைமை அருள்சகோதரியான அருள்சகோதரி தேவ அருள் மேரி மகதலின், SAT -ன் மறைமாகாண தலைமை அருள்சகோதரியான அருள்சகோதரி அன்னம்மாள், இணை மேயர் தமிழழகன், தவத்திரு குடில் சுவாமிகள், ரஹமத்துனிஷா, பெண்கள் அமைப்பின் தலைவர் மற்றும் இதர பள்ளி மாணவர்கள் அருட்சகோதரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக பசுமைப் பயண வீரர்கள் 'இயற்கையை காப்போம் வாழ்வுரிமை மீட்போம்' என்ற வீதி நாடகத்தினை அனைவர் முன்பும் அரங்கேற்றினர். அதனைத் தொடர்ந்து பசுமைப் பயண வீரர்களை அனைவரும் சிறப்பு செய்த பிறகு மேயர் அவர்கள் இயற்கைக்காக தொடங்கி இருக்கும் இப்போராட்டம் அனைவர் மத்தியிலும் சென்று வருங்கால தலைமுறைக்கு இயற்கையோடு வாழ்வதற்காக கொடுக்க வேண்டும் என்று கூறி பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து குடில் சுவாமிகள் தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்கினார். பிறகு பள்ளி மாணவர்கள் அருட்சகோதிரிகள் மற்றும் பசுமைப் பயண வீரர்கள் அனைவரும் பேரணியாக கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். அங்கும் பசுமைப் பயண வீரர்கள் தங்களது வீதி நாடகத்தை அரங்கேற்றினர். அதனைத் தொடர்ந்து பசுமைப் பயண வீரர்கள் தமது பயணத்தை சிதம்பரத்தை நோக்கி தொடங்கினார்கள்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் பசுமைப் பயண வீரர்களை உற்சாகப்படுத்தினர். மாலை ஆறு மணி அளவில் பசுமைப் பயண வீரர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தனர் அங்கு உற்சாக வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப் பட்டது.
உயிர் கொடுக்கும் சுவாசக் காற்றை காக்கும் போராட்டம் இன்று கடலூரை நோக்கி........
செய்தியாளர்: அருட்பணி. சாரதி சே. ச.