புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரி திருப்பயணம் | Veritas Tamil | Veritas Tamil
மேற்கு இந்தியாவின் மும்பை, கோரேகாவ்னில் அமைந்துள்ள புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்களும் குருத்துவ மாணவர்களும், மலை அன்னையின் திருவிழாவின் எண்கிழமை காலத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பலியில் பங்கேற்றனர். மனித மாண்பு, இறைநம்பிக்கை மற்றும் குருத்துவ அழைப்பு குறித்து இத்திருப்பலியில் சிந்திக்கப்பட்டது.
குருத்துவக் கல்லூரியின் 15க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். அருள்பணி மைக்கேல் டி’குன்ஹா அவர்கள் திருப்பலிக்குத் தலைமை தாங்கி மறையுரையாற்றினார்.
மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள மலை அன்னை பேராலயத்தை நோக்கி குருத்துவ மாணவர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் திருப்பயணத்தின் ஒரு பகுதியாக இத்திருப்பலி நடைபெற்றது. மும்பை உயர்மறைமாவட்டத்தில் குருத்துவ அழைப்புகளுக்காகவும், மரியன்னைக்கு நன்றி செலுத்தும் வகையிலும், கோரேகாவ்னில் உள்ள புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியிலிருந்து மலை அன்னை பேராலயம் வரை குருத்துவ மாணவர்கள் ஆண்டுதோறும் நடந்துசெல்கின்றனர்.
நவநாள் கருப்பொருளையும் Magnifica Humanitas திருமடலின் செய்தியையும் சிந்தித்த அருள்பணி டி’குன்ஹா அவர்கள், குருத்துவ மாணவர்களும் இறைமக்களும் திருவிவிலியத்திற்குத் திரும்பி, தாங்கள் எதைச் சாதிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், இறைவனுக்கு முன்பாக தாங்கள் யார் என்பதைச் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.
“நான் பலவற்றைச் சாதிக்க முடியும். ஆனால் நான் சாதித்தாலும் அல்லது சாதிக்காவிட்டாலும், இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டவன் என்ற உண்மையை எதுவும் மாற்ற முடியாது. அந்த மாண்பை எதுவும் பறித்துவிட முடியாது” என்று அவர் கூறினார்.
திருத்தூதர் அறிவிப்பு நிகழ்வைச் சுட்டிக்காட்டிய அவர், இறைவன் தம்மிடம் கேட்பதை அனைத்தையும் மரியா புரிந்துகொண்டதால் அவரது மேன்மை வெளிப்படவில்லை; மாறாக, இறைத்திட்டம் எவ்வாறு நிறைவேறும் என்பதை அறியாத நிலையிலும் இறைவனை நம்பி தம்மை அவரிடம் ஒப்படைத்ததிலேயே அவரது மேன்மை வெளிப்பட்டது என்றார்.
“மரியா எதிர்காலத்தை அறியவில்லை. ஆனால், அந்த எதிர்காலத்தை அன்புமிக்க இறைவனின் கரங்களில் ஒப்படைக்க அவர் தயாராக இருந்தார்” என்று கூறிய அவர், குருக்கள் மற்றும் குருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் எதிர்கால நிச்சயமற்ற நிலைகளுடனும் இதனை ஒப்பிட்டார்.
இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் புனிதமான மாண்பு, துன்பங்களின் காலத்திலும் தமது மக்களுடன் இறைவன் உடனிருத்தல், இறைத்திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதபோதும் அவரை நம்புதல் ஆகிய மூன்று முக்கிய கருத்துகளை அருள்பணி டி’குன்ஹா அவர்கள் வாசகங்களிலிருந்து எடுத்துரைத்தார்.
செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உலகம் பெரிதும் வடிவமைக்கப்பட்டு வரும் சூழலையும் அவர் சிந்தித்தார். தொழில்நுட்பம் பல பணிகளை விரைவாகச் செய்யக்கூடியதாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் புனிதத்தன்மையையும் கிறிஸ்தவர்கள் உணர்ந்து மதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். “செயற்கை நுண்ணறிவின் சூழலில், நமது அடிப்படை மனித நுண்ணறிவை நோக்கி நாம் திரும்பி, நமது வாழ்வை நுண்ணறிவின் ஊற்றான இறைவனின் கரங்களில் ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியின் அதிபர் அருள்பணி கில்பர்ட், நற்கருணைத் திருப்பலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், குருத்துவ அழைப்பைக் குறித்து சிந்திக்கும் இளைஞர்களுக்கு குடும்பங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மும்பை உயர்மறைமாவட்டத்தில் தற்போது 28 குருத்துவ மாணவர்கள் குருத்துவப் பணிக்குத் தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
குருத்துவ மாணவர்களைப் பொறுத்தவரை, இப்பாதயாத்திரை அவர்களது செப வாழ்க்கையை ஆழப்படுத்தவும், தங்களது இறையழைப்பைச் சிந்திக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
சகோதரர் அகிலேஷ் பால், “ஒவ்வொரு நாளும் எங்களைப் பாதுகாக்கும் அன்னை மரியாவுக்கு நன்றி செலுத்தும் செயலாக” இப்பாதயாத்திரை அமைந்ததாகக் கூறினார்.
அதிகாலை 2.15 மணிக்குப் பாதயாத்திரையைத் தொடங்கி, செபமாலை செபித்தும் மரியன்னைப் பாடல்களைப் பாடியும் சென்றது உடல் உழைப்பை ஆன்மீக அனுபவமாக மாற்றியதாக சகோதரர் அனெல் அந்தோனி தெரிவித்தார். “அவரின் வழியாக, இந்தப் பயணம் இயேசுவுடன் ஆழமான ஒன்றிப்பாக மாறியது” என்று அவர் கூறினார்.
“மரியாவுடன் இணைந்து, அவரை நோக்கி நடந்துசென்றது உண்மையிலேயே சிறந்த அனுபவமாக இருந்தது” என்று சகோதரர் பால் தெரிவித்தார்.
சகோதரர் ஆல்டின் கோலி, இப்பாதயாத்திரை உடலளவில் சோர்வை ஏற்படுத்தியபோதிலும், செபிக்கவும், சிந்திக்கவும், தமது வேண்டுதல்களை இறைவனிடம் ஒப்படைக்கவும் ஆன்மீக ரீதியாக அர்த்தமுள்ள வாய்ப்பாக அமைந்ததாகக் கூறினார்.
“ஒவ்வொரு அடியிலும், நான் மலை அன்னை ஆலயத்தை நோக்கி மட்டுமல்ல, இறைவனை நோக்கியும் நெருங்கிச் செல்வதை உணர்ந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
மலை அன்னை பேராலயத்தில் இப்பாதயாத்திரை நிறைவடைந்தது. அங்கு குருத்துவ மாணவர்கள் தங்களது இறையழைப்பு, திருஅவை மற்றும் தனிப்பட்ட வேண்டுதல்களை அன்னை மரியாவிடம் ஒப்படைத்து, நம்பிக்கையிலும் இறைநம்பிக்கையிலும் வளர்ந்து, பணியாற்றுவதற்கான தயார்நிலையைப் பெற வேண்டினர்.
